2–ந்தேதி திரைக்கு வரும் விஜய்யின் ‘சர்கார்’

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை தீபாவளிக்கு முன்னதாக திரைக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற 6–ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். தமிழ் நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2–ந்தேதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2–ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

எனவே இந்த வாரத்திலேயே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புகிறார்கள். ‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் டிரெய்லரை வெளியிட்டு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

படத்தில், வெளிநாட்டில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார்.

அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். நேர்மையான தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

தனக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி மோசமான அரசியல்வாதிகளை வீழ்த்தி எப்படி நல்லாட்சியை ஏற்படுத்துகிறார் என்பது கதை.

Related posts