தமிழ் மக்கள் கூட்டணி சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தார் ( உரையின் சாராம்சம் முதல் முதலாக எழுத்து வடிவில் )

வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தனது புதிய கட்சியை நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் வைத்து ஆரம்பித்தார். இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினம் நல்லூர் பிரகடன தினம் என்றும் கூறியிருக்கிறார்.

முதல்வரின் உரையில் அரசாங்கத்தின் ஏமாற்று வேலை.. தமிழர் கூட்டமைப்பின் பதவிக்கு விலை போன செயல்.. வடக்கு கவர்னரின் பொய்கள்.. காட்டிக் கொடுக்கும் துரோகக் கட்சிகளுடன் கைகோர்த்து அதே பாதையில் செல்லும் தமிழ் தலைவர்களுடன் இணைந்து இனியும் அரசியல் செய்ய முடியாது.

தான் எந்தக்கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்ற அவர் தமிழர் கூட்டமைப்பு தன்னை ஒரு கைப்பொம்மையாக வைத்திருக்க ஆசைப்படுகிறது என்றும் அதற்கு பணிந்து செல்ல தான் விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஒரு கைப்பொம்மையாக இருந்து பதவி பெற நான் விரும்பவில்லை..! அதுபோல கைப்பொம்மையாக இல்லாத தன்னை ஏற்றுக்கொள்ள கூட்டமைப்பும் தயாரில்லை…! ஆகவே எதிரும் புதிருமான இரு துருவங்கள் இணைந்து செல்ல இனி வழிகள் இல்லை.

வடக்கு மாகாணசபை எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். குறைந்த நிதி, எதை செய்ய முற்பட்டாலும் அரசு தடை போடுதல், வெளிநாட்டு முதலீடுகளை வடக்கு மாகாணம் எடுக்கவிடாத தடை என்று ஏகப்பட்ட தடைகளுக்குள் அதிகாரம் இல்லாமல் போராடியிருக்கிறோம். வடக்கு கவர்னரும் இதற்கெல்லாம் காரணமென்றார்.

மேலும் 1987 ல் ஏற்படுத்தப்பட்டு தமிழ் தலைவர்களாலேயே கைவிடப்பட்ட அதிகாரமற்ற சபைதான் மகாணசபை. இதை வைத்து எதையும் செய்வில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

முன்னர் ஒன்பது வாக்குகள் எடுத்து பாராளுமன்றம் போய்.. தமிழ் மக்கள் அரசுக்கு ஆதரவு என்று அரசு உலகத்திற்கு பொய் பிரச்சாரம் செய்து, தமிழர் போராட்டத்திற்கு பயங்கரவாத பட்டம் கட்ட காரணமான ஒன்பது வாக்கு கட்சித் தலைவர் நான் எதையும் செய்யவில்லை என்று கூறுவது வேடிக்கையானது.

இவர்கள் எல்லாம் எதையோ செய்ய முடிந்தவர்கள் போல பேசுகிறார்கள் இன்று.

மேலும் பேசிய அவர் பதவிக்காலம் முடிய தன் முன் நான்கு தேர்வுகள் இருந்தாக கூறுகிறார்.

01. பதவியை விட்டு வெளியேறுவது : அப்படி வெளியேறுவது தவறு. காரணம் அவ்வாறு வெளியேறுவதானால் அரசியலுக்கு வராமலே இருந்திருக்கலாம். மக்களுடன்தான் நான் வாழ்ந்து மடிய ஆசைப்படுகிறேன். இன்று எனக்கு 80 வது பிறந்த நாள். இந்த வயதானவனை நீங்கள் ஆதரிக்க வேண்டும். ஏனென்றால் எதிர்கால தலைமுறைக்கு சரியான ஒரு கட்சியை உவந்தளிக்க வேண்டும்.

02. கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது : அது இயலாது. அவர்கள் பதவிக்கு விலை போய் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் இன்று ஒன்பது வாக்குகளை மட்டும் எடுத்து பாராளுமன்றம் போன கட்சியின் பின்னால் போகிறார்கள். அது துரோகத்தின் வழியாகும்.

03. இன்னொரு கட்சியில் சேர்வது : ஏதாவது ஒரு மாற்று கட்சியுடன் சேர்ந்தால் எம்முடன் ஏன் சேரவில்லை என்று மற்றவர்கள் பொறாமையடைவார்கள். ஆகவே நாம் தனித்துவமாக இயங்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும்.

04. நாமே தனிக்கட்சி அமைப்பது : இந்த நிலையில் நாமே தனிக்கட்சி அமைப்பதுதான் சிறந்த வழியாகப்படுகிறது. ஆகவே தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை அறிவிக்கிறேன் என்றார்.

அத்தருணம் தமிழர் கூட்டமைப்பின் மீது அவர் பலத்த குற்றச்சாட்டுக்களை வைத்தார். அவையாவன..

01. போர்க்குற்றச்சாட்டை நிறுவுவதற்கும், நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை திரட்டி போராடவும் தவறிவிட்டனர்.

02. அதிகார ஆசையாலும், பதவி மோகத்திலும் இன்று திசை மாறிப்போய்விட்டனர்.

03. அன்று யாரை எல்லாம் துரோகிகள் என்றார்களோ.. எதுவெல்லாம் துரோகம் என்றார்களோ இன்று அதையெல்லாம் சரியென ஏற்று அந்தவழி சென்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள்.

04. வலிகாமம் வடக்கில் சிறு துண்டு காணிகளை விடுவித்ததை பெரிதாக பேசியபடி வன்னியில் பெரும் நிலமே விழுங்கப்படுவதை தடுக்க எதுவும் செய்யாமல் பதவி சுகத்தில் மாந்திக் கிடக்கிறார்கள்.

05. உரிமையை பெறுவதை விட அபிவிருத்தியே முக்கியம் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். இன்று அபிவிருத்தியும் இல்லை உரிமையும் இல்லை. இவர்கள் பதவியில் இருப்பதை விட கண்டது எதுவும் இல்லை.

06. ரி.ஆர்.ஓவின் பெரிய நிதி அரசால் உறைய வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவளிக்கும் இவர்களால் அதைக்கூட மீட்க முடியவில்லை.

07. இன்றுவரை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் இவர்கள் அரசியல் கைதிகள் விடுதலைக்கு எதுவும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் 16 பேர் இருந்தும் பயன் எதுவும் இல்லை.

08. தீர்வுத் திட்டம் வருகிறது 2016ல் என்றார்கள் பின் 2017 தொடர்ந்து 2018 வரை தீர்வு வருகிறதென ஏமாற்றி வருகிறார்கள். அதற்காக உருப்படியாக எதையுமே செய்யவில்லை.

09. அரசாங்கம் சிங்கள பௌத்த குடியேற்றங்களை விஸ்த்தரிக்கிறது இன்றும். அதைத் தடுக்க உளமார எதுவுமே செய்யவில்லை.

10. கூட்டமைப்பினர்க்கு மடியில் கனமிருக்கிறது அதனால் வழியில் பயமிருக்கிறது. அதனால்தான் மன்னார் புதைகுழிகளை பார்த்தும் வாய் மூடி கிடக்கிறார்கள் என்றும் கூறினார்.

அதேவேளை இன்று வெளிநாட்டு முதலீடுகளை கோரும் கவர்னர் கூறுவது பொய்.. அன்று அவரும் அதைத் தடுத்தவரே..

இங்கிலாந்தில் நின்று ஆவா குழுவை மூன்று மாதத்தில் அடக்குவேன் என்று கூறும் அவர் ஐந்து ஆண்டுகளாக ஏன் அடக்கவில்லை. உண்மையில் அரசுக்கும் கவர்னருக்கும் ஆவாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது அவருடைய உரையில்.

ஆகவே பொய் மூகமூடி போட்டு வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் புதிய கட்சியை அறிவிக்கிறேன் என்றார். தமிழ் மக்கள், புலம் பெயர் தமிழ் மக்கள், உலகளாவிய தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை உருவாக்கி எதிர்கால தலைமுறையினரிடம் வழங்க இருக்கிறேன். இது எனது கட்சியல்ல உங்கள் கட்சி.

இதன் நோக்கங்கள் :

01. கசப்பான குரோதங்களை மறந்து சமஸ்டி அமைப்பை அகத்திலும் புறத்திலும் ஏற்று ஒழுகுதல்.

02. சமஸ்டியின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க பாடுபடல்.

03. தடைப்பட்டுள்ள இனப்பிரச்சனை பேச்சுக்களை தொடர்வது.

04. இனப்பிரச்சனை போர்க்குற்ற விவகாரங்களை சிங்கள மக்களுக்கு அறியத்தந்து தீர்வு காணல்.

05. தனிப்பட்ட நலன்களை கைவிடுதல்.

06. அரசியலும் சமுதாயமும் சமாந்தரமாக இயங்க செய்தல்.

07. போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்.

08. சர்வதேச சமுதாயத்தின் உதவிகளுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முயலுதல்.

09. இறுதி யுத்தம் இன அழிப்பே என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களை திரட்டுதல். இது தொடர்பாக அரசுடன் கலந்துரையாடுதல்.

10. உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் இணைந்து எமது இலக்கை அடைதல் என்ற பத்து யோசனைகளை தமது கட்சியின் யோசனைகளாக முன் வைத்தார்.

இன்று முதல் நான் முதல்வர் இல்லை. எனது முதல்வர் அதிகாரம் உட்பட அனைத்தையும் ஒப்படைக்கிறேன். இந்த இடைக்காலம் எனது உடல் நலம் பெற உதவும் காலமாக இருக்கிறது.

அரங்கு நிறைய மக்கள் அவருக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பினார்கள்.

இது வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று கூறிய அவர் இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு அடுத்த ஆண்டுடன் 100 வருடங்கள் ஆகிறது. இன்னமும் தீர்க்கப்படவில்லை.

பொய்யான கட்டுக்கதைகள் கொண்ட மகாவம்சம் பாடசாலைகளில் படிப்பித்து இன முரண்பாடுகள் வளர்க்கப்படுகிறது.

சிங்கள மொழி ஆரம்பித்ததே ஆறாம் நூற்றாண்டில்தான்.. அது தெரியாமல் அதற்கு முன்னரே சிங்கள தமிழ் முரண்பாடு தோன்றிவிட்டது என்கிறார்கள்.

இவைகளை எல்லாம் புரிந்து புதுவழி காண்போம் என்று விடை பெற்றார்.

அலைகள் சுருக்கி எழுதும் பிரிவு. 24.10.2018 புதன்

Related posts