உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 42

தேவகட்டளையின் முழுமை அன்புகூருதல்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இயேசு அவனைநோக்கி, உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழுஇருதயத் தோடும் உன் முழுஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்ன வென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:37-40

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் மிகத்தெளிவாகக் காணக்கூடியது உண்டென்றால் அன்பு குறைதல் ஒன்றுதான். இந்த அன்பு குறைவதினால் உலகம் இன்று பலதரப்பட்ட அழிவை, போராட்டங்களை, மனக்கசப்புக்களை, குடும்பங்கள் சீரழிவதை, கொலைகளை இன்னும் பலவற்றை அடைந்து கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான பலசெய்திகளை இந்த வாரம் பத்திரிகையில் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறான சு10ழ்நிலை ஏற்படும் என்பதை அறிந்த தேவன், முன்கூட்டியே தாம் படைத்த மக்களுக்கு பின்வருமாறு கட்டளையிட்டார். இஸ்ரவேலே, கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு இருதயத்தோடும், உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன்வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக. அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. உபாகமம் 6:4-9.

சற்று நாம் இந்தவேதப்பகுதியைச் சிந்தித்துப்பார்த்தால் ஒருபெரிய உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. தேவன் தாம் படைத்த மக்கள், தன்னை மறந்து நடந்து, அழிவைக்காணதபடி தடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வளவு கரிசனை கொண்டுள்ளார் என்பதை நாம் இங்கு காணக்கூடியதாகவுள்ளது. இன்று உலகம் தேவனின் கட்டளைக்கு, விருப்பத்திற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவை அனுபவிப்பதைக் நாம் அனைவரும் கண்டுகொள்கிறோம்.

தேவனுக்குப் பிரியமானவர்களே, உலகம் துண்டித்துக் கொண்ட இந்த தேவனுடனான அன்பை மீண்டும் தேவன் தாம்படைத்த மக்களுடன் புதப்பித்துக் கொள்ள விரும்பினார். காரணம் அந்த அன்பை உலகம் இழந்தால் தேவனுடைய விருப்பங்கள், வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாகப் போய்வடும். அதே நேரம் உலகமும் அழிவை நோக்கியே சென்றடையும். அதன் விளைவு ஈடுசெய்ய முடியாத அழிவு.

ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு, நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். எபிரேயர் 6:13-14. அதேபோல தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்துப் பலுகிப் பெருகப்பண்ணினார்.

நமது தேவன் தமது வார்த்தைகளைக் காத்துக்கொள்வதில் வல்லவர். உலகம் காத்துக்கொள்ள முடியாமல் இழந்த அந்த அன்பை, தேவன் தமது ஓரேபேறான குமாரனை (இயேசுவை) உலகிற்கு அனுப்பி, மீண்டும் உலகம் இழந்த அந்த அன்பை ஏற்படுத்த (புதுப்பிக்க) விரும்பினார். இதை நாம் யோவான் 3:16 ல் பார்க்கலாம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (கிறிஸ்துவின் பிறப்பு).

தேவன் மணிதர்களுடன் நேரடியாக பேசியபோது, தீர்க்கதரிசிகளைக் கொண்டு பேசியபோது, அற்புத அடையாளங்கள் மூலம் பேசியபோது மக்கள் அவரின் அன்பை உணரவில்லை. அதனால் தேவன் இயேசுவை உலகத்திற்கு அனுப்பி, மனிதர்களின் மீறுதல்களை சிலுவை மரணத்தின்மூலம் நீக்கி, மீண்டும் தேவனுடனான அன்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் மக்கள் பிறமக்களுடன் அன்பைக் கைக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

நாம் மனிதர்கள் பேசும்போது கேள்விப்பட்டிருப்போம், அன்பே கடவுள் என்று. இதன் கருத்து, தேவனைப்போல் மனிதன் மனிதனுக்கு காட்டும் இரக்கம், உதவி, கபடற்ற செயல், நட்பு இப்படிப்பல. இதை நாம் மேலே வாசித்த மத்தேயு 40வது வசனத்தில் காணக்கூடியதாக உள்ளது.

இதை நாம் இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள வேதப்புத்தகம் உள்ளவர்கள் லூக்கா 10ம் அதிகாரம் 25-37 வரையுள்ள வசனங்களை வாசிக்கவும்;. இயேசுவிற்கும் தன்னை நீதிமான் என்று நினைத்து வாழும் ஒருவனுக்கும் நடைபெற்ற சம்பவம் இது. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் (இன்று அநேக மக்கள் விடும் தவறு இதுதான்) இயேசுவை நோக்கி, எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக ஒரு கள்ளர் கையில் அகப்பட்ட ஒருவனின் கதையை அவனிற்கு கூறி அவனின் மனநிலையை அறியவும், தெளிவு படுத்தவும் விரும்பினார்……..

இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன், அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி, நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

இயேசுவும் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து, தனது சொந்த இரத்தத்தினால், நமது பாவங்கள், சாபங்களினால் ஏற்பட்ட நமது காயங்களைக் கழுவி விடுதலை தந்து, சத்திரம் என்கிறதான தேவபராமரிப்புக்குள் எம்மைக் கொண்டுபோய்ச் சோர்த்துள்ளார்.

தேவபிள்ளையே, நீ யாரை அதிகமாக நேசிக்கிறாய்? ஆண்டவர் உன் உறவுகளை உதறித்தள்ளு என்று சொல்லவில்லை. மாறாக என்னிலும் பார்க்கவா என்று உன்னிடம் கேட்கிறார். இத்தனையாய் அன்பு செய்தவருடைய மகிமை இன்னதென்று இதுவரை நீ சிந்தித்தது உண்டா? இவர் அநாதி அநாதியாக என்றென்றைக்கும் இருக்கிறவர். இவரே சர்வத்துவத்திற்கும் ராஜா. இவராலே சகலமும் உண்டாக்கப் பட்டது. இவரே சகலத்தையும் ஆழ்கிறவர். அப்படியிருந்தும் அவர் மனிதர்கள்மேல் கொண்ட அன்பின் மூலம் சிலுவை மரணம் மட்டும் தன்னைத்தாழ்த்தி எமக்காக மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

அதை நாம் நினைத்து வாழ்ந்திருக்கிறோமா? அதை நாம் புரிந்திருக் கிறோமா? அதை நாம் புரிந்திருந்தால் இந்த உலகத்தோடு போராடிக்கொண்டிக்க மாட்டோம். மாறாக தேவனை நினைத்து, அவரின் அன்புக்காக வாழ்ந்து கொண்டிருப்போம். இதுவரை காலமும் அந்த அன்பை அறியாதவனாக நீ வாழ்ந் திருந்தால், இன்று முதல் அந்த அன்பை அறிந்துகொள். அப்படி நீ அறிய விரும்பினால் உனக்கு அருகில் உள்ள கிறிஸ்தவர்களுடன் தொடர்புகொண்டு ஆலயத்திற்குச் சென்று அந்த அன்பை அறிந்துகொள். அப்படி முடியாத வேளையில் அலைகள் இணையதளமூலம் என்னுடன் தொடர்பு கொள்ளவும். சகல வழிகளிலும் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறேன். இப்பொழுது என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஒப்புக்கொடு.

அன்பின் ஆண்டவரே, இதுவரை காலமும் உமது அன்பின் தியாகத்தை அறியாதவனாக வாழ்ந்து விட்டேன். அதற்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து உமது அன்பை தியாகத்தை அறிந்து, அதற்கேற்றவனாக வாழ என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உமக்குள் நிலைத்திருக்கும்படியாக என்னை காத்துவழி நடத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts