‘மீ டூ’வால் முடங்கிய இந்தி படங்கள்

திரையுலகை ‘மீ டூ’ இயக்கம் உலுக்கி வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கதிகலங்கி உள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டைரக்டர்கள் படங்களில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இந்தியில் சில பெரிய பட்ஜெட் படங்கள் முடங்கி உள்ளன.

முகல் படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் முகல் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அமீர்கான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

இயக்குனர் சஜித்கான் இயக்கும் ஹவுஸ்புல்–4 படத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. நானா படேகரும் இதில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளும் தொடங்கின. இந்த நிலையில் சஜித்கான் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த சலோனி சோப்ராவும், மேலும் சில பெண்களும் புகார் கூறியுள்ளனர்.

சஜித்கான், நானா படேகர் இருவர் மீதுமே பாலியல் புகார் கூறப்பட்டு இருப்பதால் தயாரிப்பாளரிடம் சொல்லி ஹவுஸ்புல்–4 படப்பிடிப்பை அக்‌ஷய்குமார் நிறுத்தி விட்டார். இருவர் மீதும் விசாரணை நடந்து முடியும்வரை படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்றும், குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணம் ஆனால் எப்போதுமே அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்றும் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

இதுபோல் பாலியல் புகாரில் சிக்கி உள்ள சுபாஷ் கை, லவ் ரஞ்சன் உள்ளிட்ட மேலும் சில இயக்குனர்களின் படங்களும் முடங்கி உள்ளன.

Related posts