பட்டை நாமம் போட்டு பறந்து போனாளே..?

பெருமாள் பிச்சை எடுக்க அதை பிடுங்கிப் போனதாம் அனுமார் என்பது போல டென்மார்க் அரசின் சமூக சேவைக்கான 111 மில்லியனை களவாடி சென்றதாகக் கூறப்படும் 64 வயதுடைய அனா பிறீற்றா ரோஸ்கோட் நீல்சன் என்ற பெண்மணியை தேடி சர்வதேச போலீஸ் வலை விரித்துள்ளது.

இவரை தேடும் வழியில் இவரோடு சேர்ந்தியங்கினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்களும் ஓர் ஆணும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய பெயர்களை வெளியிட போலீஸ் காலம் வரவில்லை என்கிறது.

இது மட்டும்தான் களவென்று நினைத்துவிட முடியாது. அரசின் பொதுத்துறையில் சுமார் 14 பில்லியன் டேனிஸ் குறோணர்கள் சுழல்கிறது. இதில் யார் எத்தனை கோடிகளை சுட்டார்களோ தெரியவில்லையே என்று டேனிஸ் போல்க பார்டி கதறி அழுகிறது.

விட்டேனா பார் அடைக்கிறேன் ஓட்டைகளை இனி சிறு பணமும் களவாடப்பட முடியாது என்று அரசு மார்தட்டி முழங்கியிருக்கிறது.

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற முழக்கம்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது – அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது..

இந்தப் பெண்மணி..

வேலை இழந்தவர்களை வேலைக்கு அமர்த்தி கொடுக்கப்படும் ரில்ஸ்குல் எனப்படும் பணத்தில் கொடுத்து போக மீதமான பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும் என்பது நியதி.

ஆனால் அதற்கு முன்னர் அப்பணத்தை திசை மாற்றி அங்கும் இங்கும் திருப்பி கடைசியில் லபக்கென தனது கணக்கில் போட்டுள்ளார்.

அதற்காக வங்கியில் புதிய கணக்கொன்றை திறந்து கணக்காளரும் கணினிகளும் கண்டறிய முடியாத மாயத்தை செய்து முடித்துள்ளார் பெண்மணி.

இதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலையில் இருக்கிறார்கள் பல அறிஞர்கள்.

திருடப்பட்டது 111 மில்லியன் குறோணர்கள் என்பதால் அது பட்டை நாமம் போல இருப்பதாக நாமத்தின் பெருமையறிந்த நம் தமிழரில் சிலர் சிரிக்கலாம்.

இன்னும் சிலரோ 111 என்றால் நம் திரிசூலம் போல இருப்பதாக கருதி அதன் உச்சியில் தேசிக்காய்களைக் குத்தினால் பித்தம் தெளியுமென நினைக்கலாம்.

மேலும் 111 மில்லியன் என்றால் எத்தனை குறோணர்கள் என்று தெரியாதவர்களும், மில்லியனுக்கும் பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் இதென்ன மாய்மாலம் என்று மலங்கலாம்.

ஓம் கிறீம் என்று வெற்றிலையில் மை போட்டும் நம்மாள் பார்க்க வழியிருக்கிறது..

எப்படியோ கதை முடிந்தது. இனி..

பெண்மணியை பிடிப்பது எப்போ பணத்தை பறிப்பது எப்போ.. வடலி வளருமெப்போ கள்ளு குடிப்பேன் எப்போ என்பதே யதார்த்த நிலை.

திருடனாய் பார்த்து திருந்தாத வரைக்கும்
திருட்டை ஒழிக்க முடியது.

அலைகள் 13.10.2018

Related posts