ரோஹிங்கியா பிரச்சினை இந்தியாவால் மட்டுமே தீர்க்க முடியும்

ரோஹிங்கியா விவகாரத்தில் வங்கதேசத்துடன் இணைந்து மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்யாக்கள் தப்பி, வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வங்கதேசம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டின் செயல்பாடு சிறுபான்மை மக்களை அழிக்கும் செயல் என ஐநா விமர்சித்து வருகிறது. மியான்மருக்கு எதிராக பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதனை பற்றி கவலையின்றி மியான்மர் நாடு தொடர்ந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று ஐநா மற்றும் நிதி ஆயோக் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்தோனியோ குத்தேரஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ரோஹிங்யா விவகாரத்தில் இந்திய தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ரோஹிங்யாக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் விஷயத்தில் இந்தியா மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இரண்டாவதாக ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும். அப்போது மட்டுமே ரோஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் மியான்மருக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். பல்வேறு சமூக மக்களையும் அரவணைத்துச் செல்லும் தன்மை கொண்ட இந்தியாவால் மட்டுமே ரோஹிங்யா விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த முடியும்’’ எனக்கூறினார்.

Related posts