வல்வை எப்.சி. வீரர்களுக்கு முதல்வர் கேடயங்கள் வழங்கி பாராட்டு

நடந்து முடிந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான என்.ஈ.பி.எல் உதைபந்தாட்டப் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடிய அணிகளில் ஒன்று வல்வை எப்.சி. ஆகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட பயிற்றுனர் இந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்ததுடன், அகில இலங்கையிலும் புகழ் பெற்ற பல வீரர்கள் இந்த அணியை அலங்கரித்திருந்தார்கள்.

இந்த அணியின் சிறப்பம்சம் இலங்கைக்கு வெளியால் இருந்து வீரர்களை இறக்காமல் சொந்த நாட்டு வீரர்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்பதாக இருந்தது.

முதலில் நாம் நமது திறமையை பரிசோதிக்க சுயமாகவும் சொந்தக் காலிலும் நிற்க வேண்டுமென்ற முடிவை வல்வை எப்.சியின் உரிமையாளர்களான ரியூப் தமிழ் நிறுவனம் எடுத்திருந்தது.

ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அவர்கள் சந்தித்த சூறாவளிகள் சொல்லி முடியாதவை, எப்படியோ வல்வை எப்.சி இறுதியாட்டத்தில் விளையாடக்கூடாது என்றளவுக்கு பலமான எதிர்ப்பு சகல மட்டங்களிலும் இருந்ததாக அதன் முகாமையாளர்களில் ஒருவரான விளையாட்டு அதிகாரி ஜீவிதன் கூறுகிறார்.

விளையாட்டு திறமையை மட்டும் ஆதாரமாக வைத்து அந்தப் போட்டியை வெல்ல முடியாது வேறும் பல விடயங்கள் இருந்தன என்கிறார் இன்னொருவர்.

ஆனாலும் பலத்த போட்டிக்கிடையில் மூன்றாவது இடத்தை வல்வை எப்.சி. பிடித்துக் கொண்டது. இருப்பினும் இறுதிப் போட்டியன்று அவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட முடியாமல் போய்விட்டது, அதற்கு தவிர்க்க முடியாத காரணங்கள் என்று கூறப்பட்டது.

வல்வை எப்.சியின் கோல்காப்பாளரே குறைந்த கோல்களை விட்டவராகவும் அதிகமான கோல்களை தடுத்தவராகவும் இருந்தும் அவருக்கான பரிசு வழங்கப்படாமல் வேறொருவருக்கு வழங்கப்பட்டதென ரசிகர்கள் கூறினார்கள்.

இப்படி பல குறைபாடுகள் இருந்தாலும் இப்படியொரு போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து வரலாற்றை எழுத பூரண ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். நமது வெற்றி முக்கியமல்ல வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் ஆகவே போட்டி வெற்றிபெற பாடுபடுவதே முறை என்று வல்வை எப்.சி. பெரும் உறுதுணை வழங்கியது.

இப்போட்டிக்கு ஆரம்ப விதை போட்டது ரியூப் தமிழ் நிறுவனமே அல்லாது வேறெந்த நிறுவனமும் அல்ல என்பதால் பாரிய கடமையும், பொறுமையும் ரியூப் தமிழ் நிறுவனத்திற்கு இருந்தது.

நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியதே பெரிய விடயம், ஆகவே குறைகள் கூற நேரம் இல்லை நாம் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் விளையாட்டை விளையாட்டாக மதித்து பெரு மனதுடன் நடந்த காரணத்தால் வல்வை எப்.சிக்கு தனியான பாராட்டை வழங்க ரியூப்தமிழ் நிர்வாகம் முடிவு செய்தது.

அவர்களுக்கு வழங்கப்படாத கேடயங்களை வழங்க வேண்டும். அன்றைய தினம் வெளியிட முடியாது போன அதற்காகவே எழுதப்பட்ட பத்து உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் என்புத்தகத்தையும் ரியூப் தமிழ் வெளியிட முடிவு செய்தது.

அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தக வெளியீட்டில் வல்வை எப்.சி வீரர்களை வடக்கு முதல்வர் பாராட்டி கேடயங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல்வர் கையால் கேடயம் பெற்றது முதல் பரிசு பெறுவதைவிட பெரிய பேறு என்று வீரர்கள் மகிழ்ந்தார்கள். அன்றைய தினம் வல்வை எப்.சிக்கு ஐந்து இலட்சம் பணப்பரிசும் ரியூப் தமிழ் அதிபர் ரவிசங்கரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டது.

அன்று மாலை யூ.எஸ் கோட்டலில் வல்வை எப்.சி வீரர்களுக்கும், பயிற்றுனர்களுக்கும், பத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த தமிழகம், சிங்கப்பூர் பிரதி நிதிகளுக்கும் ரியூப் தமிழ் நிறுவனத்தால் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

அத்தருணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கும் சிநேகிதபூர்வமான ஆட்டங்களுக்கு தாயக உதைபந்தாட்ட வீரர்களை அழைத்து செல்வது தொடர்பாக முன்னர் டென்மார்க் ரோல்ஸ் ராவன் தலைமையில் வைக்கப்பட்ட யோசனைகள் பேசப்பட்டன.

டென்மார்க்கின் வழியாக இந்தப் பணியை முன்னெடுக்க அரசியல் மட்டத்தில் முயற்சிகள் ஓராண்டு காலமாக நடந்து வருகிறது.

மேலும் சிங்கப்பூர் தமிழக பிரிதிநிதிகளும் இதற்கான முக்கிய பணிகளை செய்ய இருப்பதாக கூறினார்கள்.

மறு நாள் சர்வதேச பயணங்களுக்கான சட்டரீதியான அனுமதி குறித்த உயர்மட்ட சந்திப்பொன்றும் கவர்னர் மாளிகையில் நடைபெற்றுள்ளது.

வெற்றிக்காக நேர்மையாக விளையாடுவது விளையாட்டிற்கு அழகு..

இன்றைய நாளில் உதைபந்தாட்டத்தின் சிகரங்களை தொட்ட மேதைகள் பத்துப் பேரின் வாழ்க்கை வரலாற்று நூலை உங்களுக்கு பரிசாக தந்துள்ளேன்.

மொத்தம் 500 பேருக்கு இன்று இந்த நூல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 10.000 பேருக்கு வழங்க ரியூப் தமிழ் முயலும்.

கோயில் கட்டி கும்பிடப்படுகிறானே மரடோனா ஏன் என்று தட்டிப் பாருங்கள்.

தாய்க்காகவும் தங்கைக்காகவும் உலகக் கிண்ணத்தையே தூக்கி வீசினான் பிரான்சிய வீரன் நம்மைப் போல புலம் பெயர்ந்த ஸிடன் எதற்காக என்று படியுங்கள்.

தான் விளையாடிய ஆட்டங்களில் சிவப்பு மட்டையை ஒரேயொரு தடவை மட்டுமே பெற்ற இத்தாலிய வீரன் ஜென்டில்மேன் பயாலோ மெல்டினியை கொலம்பிய நாட்டு அழகி காதலித்து கரம்பற்றினாளே ஏன்.. விளையாட்டை எப்போதுமே சூது வாதின்றி நேர்மையாக விளையாடுவதே வெற்றி என்று அவன் நினைத்த காரணத்தினால் அழகியே அவனை காதலித்தாள்.

வலது குறைந்தவனாக பிறந்து உலகின் தங்கப்பந்தை வென்ற லியோனல் மெஸியின் கதையை பாருங்கள். இவைகளை எமது காலத்தில் எங்கள் பாடசாலைகள் மொழி பெயர்த்துக்கூட தந்தது கிடையாது.

எமது பாடசாலை உதைபந்தாட்ட வீரனாக இருந்தபோது ஆட்டம் ஆரம்பித்த அன்று ஒரு பழைய பூட்சை எமது பாடசாலையில் தந்தார்கள். அதனுடன் ஓடிப்பழக முன்னரே நாம் தோற்றுவிட்டோம்.

உதைபந்தாட்ட வெற்றிக்கு பிள்ளைகளை எப்படி தயார் செய்வது என்பது அறவே தெரியாத விளையாட்டு ஆசிரியர்களின் காலத்தில் நாங்கள் இருந்து தோல்வியடைந்திருக்கிறோம்.

அந்தக் கண்ணீரின் ஒளியில் நாம் வாழ்ந்தது போல கிணற்று தவளைகளாக நீங்களும் வாழக்கூடாது என்பதற்காகவே இந்த நூலை எழுதியுள்ளேன்.

கிணற்று தவளைகளாக இந்த நாட்டின் கல்வி எங்களை வைத்திருந்தது போதும். விளையாட்டு சோறு போடுமா என்று இந்த யாழ்ப்பாண சமுதாயம் கேட்டு எங்கள் விளையாட்டு திறனை முறித்து அரசாங்க உத்தியோகத்திற்கு அனுப்பி பிச்சை சம்பளம் பெறும் ஏழைகளாக்கியது போதும்.

இந்த அவலங்களை தோலுரித்து பார்த்து உங்களுக்கு சொல்லவே என்னைப் போன்றவர்களை இந்த மண் வெளிநாடு அனுப்பியிருக்கிறது. அந்தக் கடமையையே நான் செய்கிறேன்.

இன்று உலகின் அதிக வருமானம் தரும் தொழில் உதைபந்தாட்டமே. இன்று நீங்கள் கை நிறைய சம்பளம் பெறவும் லீக் முறை உதைபந்தாட்டம் இந்த மண்ணுக்கு தேவை என்று 25 லட்சம் ரூபாவை வழங்கி ரியூப் தமிழ் முதலில் ஒரு முயற்சியை எடுத்தது.

இந்த புத்தகம் ஒரு மந்திக்கோல் போன்றது. நீங்கள் மட்டுமே அதிர்ஷ்டக்காரர் இன்று உங்கள் கைகளுக்கு இந்த நூல் வந்துள்ளது.

இதைப் படியுங்கள் உலகத்தை உதைபந்தாட்டத்தால் வெல்லுங்கள் என்று நூலசிரியர் கி.செ.துரை வீரர்களை பாராட்டி உரையாற்றினார்.

அலைகள் 01.10.2018

Related posts