நாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்கிறது

நாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்குதான் முதலிடம் தருகிறார்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இறப்பைக் கூட வெற்றி கண்டு மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர்.

தென்மாவட்டத்துக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும். சென்னையில் 100 கோடி செலவில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தரமான சாலைகள் அமைக்கப்படும். மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்கு பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts