வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்

பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாடு சுதந்திரமடைந்த நாள்தொடக்கம் பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்து சுதந்திரம் அடைந்தவுடன் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.செனனாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்ந்து 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த வெலிஓயா திட்டம் மூலம் எங்கள் தாயகபூமியை இரண்டு கூறாக ஆக்கிவிடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் நடவடிக்கையினை எடுத்துவருகின்றது இந்தபேரணியில் உள்ள மக்களை கண்டால் அவர்கள் நினைப்பினை மாற்றிக்கொள்வார்கள்.

இவ்வளவு பெருந்திரளான மக்கள் எங்கள் நிலங்களை பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாக தமிழர்கள் கூறுகின்றார்கள் என்பதை அரசிற்கு மாத்திரம் அல்ல உலகிற்கும் காட்டியுள்ளோம்.

இதனை இந்த அரசு உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும் என்ற இந்த அமைப்பின் கோரிக்கையுடன் நாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment