ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை

அரசியல் கட்சியை தொடங்கும் அவசரத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அதற்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு திரண்டு இருக்கிறார்கள். 30 நாட்கள் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் அதன்பிறகு வேறு இடத்துக்கு படப்பிடிப்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் படமா? எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் தீவிரவாதிகளுடன் ரஜினிகாந்த் மோதி அழிக்கும் கதையா? வழக்கமான தாதா கதைதானா? என்றெல்லாம் கேள்விகளும் யூகங்களும் கிளப்பட்டு வருகின்றன.

வழக்கமான நரைத்த தாடி, மீசை இல்லாமல் ரஜினிகாந்த் இதில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. அவருடைய முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்புகள் நடந்தபோது ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

சிலர் படப்பிடிப்பை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டதால் அவரது தாதா தோற்றங்கள் முன்கூட்டியே தெரிந்து படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்தது. எனவே இந்த படத்தின் தோற்றங்கள் வெளியாகாமல் இருக்க படப்பிடிப்புக்குள் செல்போனுக்கும் ரசிகர்கள் வருவதற்கும் தடை விதித்துள்ளனர்.

சுற்றிலும் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். உள்ளூர் போலீசையும் பாதுகாப்புக்கு வைத்து இருக்கிறார்கள். அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related posts

Leave a Comment