Top

இன்று மாலைக்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது

March 24, 2010


தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள செய்தியில், பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

அதாவது 25-ந் தேதி இன்று மாலை 5 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, இண்டர்நெட், ரேடியோ, இண்டர்நெட் டிவி, கேபிள் டிவி, செல்போன் அல்லது பத்திரிகைகள் உள்பட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.

இதுபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று (மார்ச் 27), ஓட்டு போட்டுவிட்டு வருவோரிடம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதை யாராவது மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

இலங்கையில் ஜாமீனில் இருக்கும் திசைநாயகத்திற்கு பிரிட்டிஷ் விருது

March 24, 2010

பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டுக்குகான சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது இலங்கையின் தமிழ் ஊடகவியலாளரான ஜே எஸ் திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

திசைநாயகம் நடத்திவந்த பத்திரிகையில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கட்டுரைகளை எழுதி வந்தார் எனக் கூறி 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வன்முறையை தான் ஆதரித்ததாக கூறப்படுவதை திசைநாயகம் மறுத்துள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் தைரியமாகவும் தார்மீக முறையிலும் தனது பத்திரிகையாளர் பணியைச் செய்துவந்ததாக கூறி பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு திசைநாயகத்துக்கு விருது வழங்கியது.

“பிரிட்டிஷ் ஊடகத்துறையை ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கையில் ஊடகத்துறையினர் மிகவும் கஷ்டமான சூழலில் பணியாற்றுகிறார்கள்” என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆசிரியர்கள் குழுவின் இயக்குநரான பாப் டாட்ச்வெல் கூறுகிறார்.

இலங்கை போன்ற நாடுகளில் “தங்களது பணிக்காக செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் சில வேளைகளில் அதைவிடவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்” என்றும் கூறும் பாப் டாட்ச்வெல், அதை மனதில் வைத்துதான் உலகம் முழுதும் உள்ள பத்திரிகையாளர்களிடையே இந்த விருதுக்கு பொருத்தமானவர் யார் என்பதை தேர்தெடுக்கிறோம் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கையிலும் உலகின் வேறு பல பகுதிகளிலும் இருக்கும் ஊடகவியலாளர்கள் குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாகவும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அப்படியான ஒரு நிலையில் இருக்கும் ஒரு பத்திரிகையாளருக்கு விருது வழங்குவது மூலம், அந்தந்த நாடுகள் மீது, சிறைபடுத்தப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்களை விடுவிக்க ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த சங்கம் கூறுகிறது.

இலங்கை ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு ஒரு ஆபத்தான இடம் என்று ஊடக உரிமைகளுக்கான அமைப்புகள் கூறுகின்றன.

அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அவை இலங்கை அரசின் மீது குற்றஞ்சாட்டுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 25 பேருக்கு மேல் தாக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது அல்லது தாக்கப்படுவது போன்றவற்றில் தமக்கு ஏதும் பங்கில்லை என இலங்கை அரசு கூறுகிறது.

விசாரணையின்றி சிறையிலிருந்த 461பேர் இதுவரை விடுதலை : புத்திரசிகாமணி

March 24, 2010

 
  வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் 11 சட்டத்தரணிகளை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருகின்றது. அவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசியமில்லாதவர்கள் விடுவிக்கப்படுவர்” என்றார்.

மனைவிக்கு அடிக்கும் கணவனை வீட்டை விட்டு விரட்ட முடியும்.

March 24, 2010

டென்மார்க் 24.03.2010 புதன் மதியம்

மனைவிக்கு கணவன் அடித்தாலோ அல்லது மனைவி கணவனுக்கு அடித்தாலோ அவரை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்ற முடியும். அத்தகைய வாழ்க்கைத் துணையுடன் வாழ்வை தொடர வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று யூலன்ட்போஸ்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. டென்மார்க்கில் 2004ம் ஆண்டு இயற்றப்பட்ட மேற்கண்ட சட்டமானது சரியான முறையில் அமல் படுத்தப்படாமல் தூசு பிடித்துக் கிடக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பக அதிகாரி லீனா யொகான்சன் தெரிவித்தார். கடந்த 2007 – 2008 காலப்பகுதியில் 1907 வன்முறைச் சம்பவங்கள் குடும்பங்களில் நடைபெற்றுள்ளன ஆனால் 43 பேர் மட்டும் வீட்டைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதை அமல் செய்தால் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு ஓடும் நிகழ்வுகள் பெரியளவில் நடைபெறாது என்றும் தெரிவித்தார். பெண்களை அடிக்கும் ஆண்களை வீட்டில் வைத்திருப்பது காலத்திற்கு ஒவ்வாத செயல் என்றும் அது கூறுகிறது. பாதிக்கப்படுவோர் பாதுகாப்பு இல்லங்களுக்கு ஓடி சிறை வாழ்வு வாழ்வதைவிட மேற்கண்ட 2004ம் ஆண்டு சட்டம் ஒன்று தமக்கு ஆதரவாக இருப்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். மனைவி மீதான கட்டாய பாலியல் பலாத்காரமும் இதில் அடங்கும்.

திருச்சி டாஸ்மாக் பாரில் ரகளை செய்த இலங்கை நபர்கள் 7 பேரிடம் விசாரணை

March 23, 2010

திருச்சி டாஸ்மாக் பாரில் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை தமிழ் இளைஞர்கள், வெளிநாடு செல்ல உதவி கேட்டு, சில முக்கிய நபர்களை சந்திப்பதற்காக திருச்சி வந்ததாகச் சொன்னதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் உள்ள டாஸ்மாக் பாரில், இரண்டு நாட்களுக்கு முன் தகராறில் ஈடுபட்ட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். ஏழு பேரும், இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். ஆனால், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருவதாகக் கூறிய அவர்கள், திருச்சியில் தனி வீடு எடுத்துத் தங்கியிருப்பதாகவும் கூறினர். போலீசார் அவர்களை, திருச்சி சிறையில் அடைத்து விட்டனர்.

அவர்கள் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்குகின்றனர். அதை வாங்கித் தருவதாக, திருச்சியில் தங்கியுள்ள இருவர் கூறினர். அவர்களை சந்திக்கவே திருச்சி வந்தோம். நாங்கள் வந்து ஒரு வார காலம் ஆகி விட்டது. எனினும், எங்களுக்கு டிக்கெட், விசா எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் தான், டாஸ்மாக் பாரில் முக்கிய நபர்களின் சார்பாக பேச வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இவர்களுடைய நண்பரான வக்கீல் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் மதியுரைக்குழுவின் இறுதி அறிக்கை

March 20, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகிறதா

March 20, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இலங்கையின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்ற அரசாங்கம் தூதுக் குழுக்களை அனுப்பி அங்கு பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகின்றதா? இல்லையா? என்பதை மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசியத்துக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு மற்றொன்றையும் கூறி பொது மக்களை முட்டாள்களாக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது. இதனை நிறுத்திக் கொள்வதுடன் நேர்மையாக நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது. அதனால் அவ்வாறான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது என்றும் கூறி வந்தது.

அது மட்டுமல்லாது மேற்படி வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் எமது நாட்டின் ஆடைத் தொழில், அதன் உற்பத்தி உள்ளிட்ட விடயங்களில் எந்தவித பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தது.

இப்படி இருக்கையிலேயே ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் நான்கு அமைச்சர்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பதாக அனுப்பி வைத்தது. அத்துடன், மதத் தலைவர்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை அல்லது அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையுமானால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள் அவசியமற்றவையாகும். இருப்பினும் மீண்டும் ஒரு குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்படியானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்படுகின்றதா என்பதைக் கூற வேண்டும்.

சர்வதேசம் தொடர்பில் மக்களிடத்தில் சென்று சண்டித்தனமான கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், சர்வதேசத்திடம் வேறு விதமாக பேசப்படுகின்றது. இந்த இரட்டை வேடம் அர்த்தமற்றது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகவிருக்கின்ற நிலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனாலும் வாக்குறுதிகளை மாத்திரம் அரசாங்கம் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.

மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்த மட்டில் தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அங்கு சட்டம் இருக்கின்றது. அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கின்றது. இவ்வாறான சட்டங்கள் இலங்கையில் இருந்திருப்பின் ஒட்டுமொத்த அரசாங்கமும் இன்று சிறையில்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் எதனையும் அரசு நிறைவேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், தற்போது மேலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது.

இவையனைத்தும் பொய்யானவை. மக்களை ஏமாற்றுவதற்கான மாயைகளாகவே இவை அமைந்துள்ளன” என்றார்.

வெலிக்கட சிறையில் ஆயுள் கைதிக்கு திருமணம்

March 19, 2010

இலங்கையின் வெலிக்கட உயர் பாதுகாப்பு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் கைதியான ராமையா ரவீந்திரன், சிறையதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் நல்லாசிகளுடன், சிறைக்குள்ளேயே தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சிறையின் கண்காணிப்பாளரின் ஏற்பாட்டில் இந்த திருமணச் சடங்கு நடந்துள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்துவரும் மணமகனான ராமையா ரவீந்திரனுக்கு 2004ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

எதேச்சதிகாரச் சட்டம் என்று தாங்கள் கருதும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைதுசெய்யப்பட்டவர் இவர் என்று இவரது விடுதலைக்கு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், ரவீந்திரன் செய்த குற்றம் என்பது தானும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேறு சிலரும் சேர்ந்து நடத்திய ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, நீர்த் தேக்கத் தொட்டி ஒன்றை சேதப்படுத்தியது தான் என்று அவரது விடுதலைக்காக குரல்கொடுத்துவரும் இடதுசாரி அரசியல்வாதி விக்ரமபாகு கருணரத்ன கூறுகிறார்.

ஆனால் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் சார்பாகப் பேசவல்ல அதிகாரி ப்ரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஐநா நிபுணர்கள் இலங்கை வந்தால் அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் : எல்லாவல தேரர்

March 19, 2010

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜி. எஸ். பி. வரிச் சலுகை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் உட்பட சர்வதேசத்தின் எந்தவொரு கடனுதவியும் இலங்கைக்குத் தேவையில்லை. சொந்த முயற்சியால் அபிவிருத்தியடையக் கூடிய சகல வளங்களும் இலங்கைக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான ஐ. நா. சபையின் தீர்மானங்கள் குறித்து நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“கடந்த காலங்களில் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட புலி இயக்கத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் உதவி செய்து வந்தன. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் போதும் பல்வேறு வகையில் தடைகளை சர்வதேசம் இலங்கைக்கு எதிராகச் செய்து வந்தது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய ஐ. நாவுக்கு உள்ள தேவையென்ன?

பான் கீ மூனினால் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. இலங்கை தற்போது தடைகளின்றி சுயாதீனமாக செயற்பட்டு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இதனை குழப்பியடிக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. ஆசிய நாடுகளை சுயாதீனமாக செயற்பட மேற்கத்தேய நாடுகள் இடமளிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. வரிச் சலுகையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகளும் இன்றிக் கடந்த காலங்களில் இலங்கை மிக சிறப்பாக செயற்பட்டுள்ளது.

எனவே மேற்படி உதவிகள் கிடைக்காமல் போவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

வானில் பறக்கும் புலம் பெயர் தமிழரும் பறந்து போன கடந்த காலமும்

March 19, 2010

கோடை விடுமுறைக்கு யாழ். பயணங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன..
எயார் லங்கா விமானங்கள் புலம் பெயர் தமிழரால் நிறைந்து வழிகிறது..
சாட்டட் விமானத்தில் பயணிக்கப் போகிறார்கள் மேலும் பலர்.. Read more

« Previous PageNext Page »

Bottom