Top

புலம் பெயர் தமிழரின் வெள்ளிவிழாவும் வெற்றி விழாவும் !

July 31, 2008

25-yers-flash.jpg 

புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 01.08.08

 புலம் பெயர் தமிழரின் வெள்ளிவிழாவும் வெற்றி விழாவும் !

 ஈழத் தமிழர்கள் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. கறுப்பு யூலையின் 25 வது வருடம் பெற்ற முக்கியம் போல, நாம் புலம் பெயர்ந்த 25 வது ஆண்டு நம்மிடையே கூட அதிக முக்கியத்துவம் பெறவில்லை. யூலைக்கலவரம் கொடுமையானது, அத்தகைய தீய செயலை தமிழ் மக்கள் என்றும் மறக்கலாகாது என்பதை நினைவுபடுத்துவது சரியானதே. இருப்பினும் அதுபோலவே சமகாலத்தில் தமிழர் புலம் பெயர்ந்த 25 வது ஆண்டு நினைவுகளை போற்றுவதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டிருக்க வேண்டும், ஏனோ அது குறித்த பிரக்ஞை நம்மிடையே உருவாகவில்லை. இது குறித்த எண்ணங்களை விபரிக்க முயல்கிறது இக்கட்டுரை.

 நம்மிடையே இதுவரை முக்கியம் பெற்றுள்ள பல விழாக்களை எடுத்துப் பார்த்தால் அசுரனை ஆண்டவன் கொன்று தேவர்களை காத்தான் என்ற வடிவத்தில் இருப்பதை உணர முடியும். நல்லவரோ கெட்டவரோ யாரோ இறந்திருக்கிறார், அது விழாவின் ஆதாரமாகியிருக்கிறது. வெற்றி விழாக்களில் எல்லாம் இந்த மரண ஓலங்களும் கலந்திருப்பது வழமை. அசுரர் தேவர் கதைகளைப் போலவே இரண்டாவது உலக யுத்தத்தில் நேச நாடுகள் வெற்றி விழா கொண்டாடியபோது ஜப்பானில் அணு குண்டுகள் விழுந்திருந்தன.

 இன்றும் கூரோசீமா, நாகசாகி ஆகிய இடங்களில் வீசப்பட்ட அணு குண்டுகளை எதிர்த்து ஜப்பானில் நினைவுகள் நடைபெறுவது வழமை. அதுபோல கறுப்பு யூலையையும் நாம் மறக்க முடியாத நிகழ்வாக சோகத்துடன் எதிர் கொள்வது தவிர்க்க முடியாததே.

 ஆனால் ஜப்பானியர்களை நாம் கூர்ந்து நோக்கினால், அவர்கள் சோகங்களை மட்டும் பேசவில்லை தமது சிறப்புக்களையும் பேசினார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அணு குண்டு விழுந்த மண்ணில் இருந்தே அவர்கள் மீண்டெழுந்து உலகப் பொருளாதாரத்தில் ஓர் உன்னதத்தை அடைந்தார்கள். ஜேர்மனியுடன் இணைந்து இரண்டாம் உலக யுத்ததில் வெற்றி பெற்றிருந்தால் கூட அடைய முடியாத முன்னேற்றத்தை இரண்டாம் உலக யுத்தத் தோல்விக்கு பின் ஜப்பான் அடைந்தது.

 அதுபோல போரில் வெற்றிபெற்ற பிரிட்டன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாமல் இருக்க, முற்றாக அழிந்து தரைமட்டமான ஜேர்மனி பிரிட்டனை இரட்டிப்பு வேகத்தில் முந்திச் சென்றது. போரில் வென்றிருந்தாலும் அடைய முடியாத முன்னேற்றத்தை ஜேர்மனி தோல்வியால் அடைந்து சாதனை படைத்தது. மறுபுறம் ஜேர்மனியர்களால் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட யூதர்கள் யாரும் எதிர்பாராத அளவில் மீண்டெழுந்து இஸ்ரேலில் தம்மை நிலை நிறுத்தினார்கள். வெற்றிதான் சிறப்பை தரும் என்று எண்ணிய உலகத்திற்கு அழிவினாலும்; மாபெரும் வெற்றிபெற முடியும் என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாகும்.

 இதுபோலத்தான் யூலைக்கலவரம் சோகமானது என்றாலும், அதற்குரிய பதிலடிதான் புலம் பெயர் வாழ்வும், அதனுடைய வெற்றியும் என்ற உண்மையை நாம் பேசியிருக்க வேண்டும். புலம் பெயர்ந்த மக்கள் இன்று உலகளாவியரீதியில் பரந்து படைத்துக் கொண்டிருக்கும் சாதனையை தமிழர் தாயகத்தில் இருந்து பல தலைவர்கள் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். தமது போராட்டத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் புலம் பெயர் மக்களே என்றும் அவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். இது புலம் பெயர் வாழ்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

 அவர்கள் அவ்வாறு பாராட்டினாலும், புலம் பெயர் தமிழ் மக்களிடையே அந்தச் சிறப்பு சரியானபடி உணரப்பட்டதாகக் கூற முடியாது. கனடாவில் இன்று நான்கு இலட்சம் ஈழத் தமிழர்கள் குடியேறி ஒரு யாழ். குடாநாட்டின் ஜனத்தொகையையே உருவாக்கியிருக்கிறார்கள். சுவிற்சலாந்தில் கடின உழைப்பால் முன்னேறி தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பிரான்சிற்குள் நுழைந்தால் லாச்சப்பல் என்ற தமிழ் கடைத்தெருவையே படைத்து வைத்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை ஈழத் தமிழர் வகிக்கிறார்கள். டென்மார்க்கில் நடைபெற்ற கணிப்பில் அனைத்து வெளிநாட்டவரையும் முந்தி டேனிஸ் மக்களுக்கு அடுத்தபடியாக உயர்நிலையை எட்டித் தொட்டுள்ளார்கள் ஈழத் தமிழர்கள். இது போல அனைத்து நாடுகளிலும் குடியேறி தேமதுரத் தமிழோசையை உலகெல்லாம் பரவச் செய்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

 இத்தகைய எழுச்சியை ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த 25 வருடங்களில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இது உலகத்தில் எந்த இனமுமே சாதித்திராத மாபெரும் சாதனையாகும். யூலைக்கலவரத்தை நடாத்தி எம்மை விரட்டியடித்த சிங்கள இனவாதிகளோ அல்லது சிங்கள மக்களோ அடைய முடியாத சிறப்பை புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அடைந்திருக்கிறார்கள். ஆகவேதான் கறுப்பு யூலையை கண்ணீராக மட்டும் பார்த்துவிடாது அந்தக் கண்ணீரையே பொன் நீராக மாற்றியிருக்கிறோம் என்ற சிறப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டியதே அறிவுடமை என்று இக்கட்டுரை வாதாடுகிறது.

 இரண்டு சில்லுகள் ஒற்றுமையாக ஒரே திசையில் உருண்டால் வண்டி ஓட ஆரம்பிக்கும். வண்டி போலத்தான் நமது வாழ்க்கையும் இரண்டு சில்லுகளைக் கொண்டது. ஒன்று சோகமானது, மற்றையது இன்பமானது. இந்த இரண்டையுமே இணைத்து முன் நோக்கி ஓட வைக்க வேண்டும். அப்பொழுதான் நாம் இலக்கை அடைய முடியும், நமது வாழ்க்கை வண்டியை வெற்றிகரமாக முன் நகர்த்த முடியும்.
 பொதுவாக நம்மில் பலர் சோகங்களையே பேசி நொந்து நூலாவதை நாம் நடைமுறை வாழ்வில் தினசரி பார்க்கிறோம். சோகத்தையே தொடர்ந்து துதிபாடுவது ஒரு சில்லை மட்டும் சுற்ற வைக்கும் வண்டில் பயணம் போன்றது. ஒரு வண்டியில் ஒரு சில்லு மட்டுமே சுற்றினால் அது செக்கு மாடுபோலவே நகரும் என்பது இயற்கை விதி. எனவேதான் இரண்டு சில்லுகளையும் இணைத்து முன்நோக்கிச் சுற்ற வேண்டியிருக்கிறது. கறுப்பு யூலை துயரமென்றால், புலம் பெயர் வாழ்வு மகிழ்வானது. இந்த இரண்டையும் முன்னோக்கி நகர்த்துவதே சிறப்பானது. அதைச் செய்ய வேண்டுமானால் இன்றே நாம் புலம் பெயர் வாழ்வின் வெற்றியையும் நாம் கொண்டாட வேண்டியது அவசியமாகும். இருப்பினும் நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அது என்ன ?

 தாய் நாடு திரும்புவதே சிறந்த வாழ்வு. அன்னிய மண்ணில் வாழும் வாழ்வை போற்றுவது தவறானது என்ற கருத்து பலருடைய அடி மனதில் உள்ளது. இதனால்தான் இது குறித்த கருத்துரைக்க அஞ்சி பல சிந்தனையாளர் மௌனமாக இருக்கிறார்கள்.

 ஆனால் உண்மை அதுவல்ல. புதிய உலகில் தாய் நாட்டில் வாழ்வது மட்டும்தான் சிறந்த வாழ்வு என்ற கொள்கை அடிபட்டுப் போய்விட்டது. உலகில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம், அவன் தாய்நாட்டு பற்றுடையவனாக இருக்க வேண்டியதே அவசியம். இலங்கைத் தீவில் 400 வருடங்களாக இருந்த ஐரோப்பியர் தத்தமது தாய் நாட்டை மறந்திருந்தால் இலங்கையிலேயே இருந்திருக்க வேண்டுமே ஏன் இருக்கவில்லை. உலகில் எங்கிருந்தாலும் தாய்நாடு மறக்கப்பட முடியாதது என்பதற்கு அதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இது எங்கோ கண்காணாத தேசத்தில் நடைபெறவில்லை, நமது நாட்டில் நடைபெற்ற உண்மை நிகழ்வு.

 தமது தாய்நாட்டை விட்டு வந்துவிட்டதனால் தாய்நாடு போயே மகிழ்வாக இருக்க வேண்டுமென ஆங்கிலேயன் கண்ணீர்விட்டு கவி பாடவில்லை. சகல நாடுகளிலும் குடியேறிய பின்னார், சூரியன் அத்தஸ்மிக்காத சாம்ராஜ்ஜியம் நமது சாம்ராஜ்ஜியம் என்று மார் தட்டினான். இன்று ஈழத் தமிழனும் சூரியன் அஸ்தமிக்காத புலம் பெயர் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கிவிட்டான். ஆனால் ஆங்கிலேயனைப் போல பெருமையாக மார் தட்டாமல் மௌனமாக இருக்கிறான்.

 அகதி வாழ்வை பெருமையாகக் காணலாமா என்பதால் மெனமாக இருப்பதாக சிலர் கூறலாம். அகதி என்றால் எதுவுமே அற்றவன், கதியற்றவன் என்பது பொருளாகும். அப்படி எதுவுமே இல்லாமல் வந்த ஒரு இனம் இன்று இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதென்றால் உண்மையில் மற்ற எல்லாச் சாதனைகளையும் விட அதுதான் பெரிய சாதனை. இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 நாம் வாழும் வாழ்வை ஒரு பொழுதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. நம்மை இழிவு படுத்தும் நாச வார்த்தைகளை நம்மவர் சொன்னாலும் அதை ஏற்கக் கூடாது. நாம் நம்மை மதிக்காவிட்டால் மற்றவர் யாரும் நம்மை மதிக்கப் போவதில்லை. எனவேதான் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் எல்லாம் இந்த 25 வது ஆண்டு வெள்ளி விழாவை வெற்றிவிழாவாக கொண்டாடி மகிழ வேண்டும். அழிவுகளற்ற ஆக்கத்திற்காக நடைபெறும் உன்னதமான பொங்கல் விழாவில் உழவர், தொழிலாளர் எல்லாம் ஒற்றுமைப்படுவது போல புலம் பெயர் வாழ்வின் வெற்றி விழாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாட வேண்டும்.

 புலம் பெயர் தமிழர் வாழ்வுபற்றி கருத்துச் சொன்ன, கட்டுரைகள் எழுதிய, மேடைகளில் முழங்கிய எவருமே அது வெள்ளிவிழா காணும் என்று கூறவில்லை. யாருடைய அறிவிற்கும் அகப்படாமல் வெள்ளிவிழா கண்டிருக்கிறது இந்த வாழ்வு. இது மேலும் மேலும் உன்னதங்களை காணும் என்பதே உண்மை.

சோகங்களைச் சொல்லி மக்களை இணைப்பது ஒரு வழி !

வெற்றிகளை சொல்லி மக்களை இணைப்பது இன்னொரு வழி !

இனி வெற்றி விழாக்களை கொண்டாடுவோம் ! அப்போதுதான் இரண்டு சக்கரங்களையும் இயக்க முடியும்.

இது தமிழனின் வெற்றி ஆண்டு ! தொடரட்டும் வெற்றிகள்.. !

மறுபடியும் சந்திப்போம்..

அதுவரை நம்பிக்கைகளுடன்

கி.செ.துரை 01.08.08

Comments

Got something to say?

You must be logged in to post a comment.