Top

முள்வேலிக்கு உள்ளே-வெளியே…! ச.ச.முத்து

July 31, 2010

‘Childhood is measured out by sounds and smells and sights, Before the dark hour of reason Grows’ -John Betjeman.

மிக அண்மையில் ஒருதிரைப்படம் எதேச்சையாக பார்க்க ;நேர்ந்தது. முள்வேலிகள் சு10ழ்ந்த கொலைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எட்டுவயது யூத சிறுவனுக்கும் அந்த முகாமின் அதிகாரியின் எட்டுவயது ஜேர்மனிய சிறுவனுக்குமான நட்புக்குள்ளாக யூத இனஅழிப்பை ஆழமாக சொல்லிச்செல்கிறது இத்திரைப்படம். ‘ப்றூனோ’ என்ற ஜேர்மனியசிறுவனுக்கும் ‘சாமுவல்’ என்ற கோடுகள் நிறைந்த கைதி ஆடைஅணிந்த யூதசிறுவனுக்கும் இடையில் மின்சாரம்பாயும் முள்வேலி நீண்டு உயர்ந்து நிற்கிறது. ஆனாலும் அவர்களின் உண்மையான பரிவையும் நட்பையும் முள்வேலியால் தடுக்கவோ மறிக்கவோ முடியாமல் போகும் நிகழ்வை அழகிய கவிதை ஒன்றுபோல ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

Mark Herman இயக்கிய ‘The Boy in the Striped Pyjamas’ என்ற இத்திரைப்படம் தனித்துவமான ஒன்றாகவும் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் என்றும் திகழக்கூடியது.பார்த்துமுடித்த பின்னர்வரும் பலநாட்களுக்கு கைகளைவிரித்து விமானம்போல வளைந்து வளைந்து ஓடும் ஜேர்மனிய சிறுவன் றூனோ மழிக்கப்பட்ட தலையுடன் வெளிறிப்போன முகத்துடன் ஏதோ ஒரு சோகத்தை முகம்நிறைத்து சிரிக்கும் யூதசிறுவன் ‘சாமுவலும்’ எம்மை சுற்றி வந்துகொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு மனதை பிழியும் ஒரு கதையை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளார்கள். படத்தின் ஒவ்வொரு ‘ப்ரேமும்’பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. சிறிய சிறிய உரையாடல்கள் மூலம் பாத்திரங்களுக்கு இடையேயான உணர்ச்சிகளையும் கதையையும் தேர்போல அசைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

யூதர்களை ஜேர்மனியர்களும்,ஜேர்மனியர்களை யூதர்களும் முழுவதுமாக வெறுப்படையச் செய்யத்தூண்டும் அனைத்துவிதமான பிரச்சாரங்களும் நிகழ்வுகளும் அவர்களைச் சுற்றிய உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்தப் பொழுதினிலேயே அவற்றை எல்லாம் துவம்சம் செய்து இரண்டுசிறுவர்கள் நட்பு கொள்கிறார்கள். சிறுபிராயம் பற்றிய இதைப்போன்ற ஒருபடத்தை இதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை.வீட்டின் வெறுமைக்குள்ளிருந்து சிறிதுநேரம் வெளியேறிய ஜேர்மனிய சிறுவன் பட்டாம்பூச்சிகளையும்,சிறுஓடைகளையும் ரசித்து நடந்து போய்க் கொண்டிருக்கும் போதுதான் அந்த தடுப்புமுகாமின் பின்பகுதியை காண்கிறான்.

முள்வேலிக்கு அருகில் கோடுகள் நிறைந்த கைதி உடையுடன் கீழே பார்த்தபடி வெறிச்சென்று உட்கார்ந்திருக்கும் யூதசிறுவனை கண்டதும் கேட்கும் முதல் கேள்வியே அழகான ஒரு திரைஉரையாடலையும் அதே நேரம் சிறுவர்களின் மனோவியலையும் போட்டு உடைக்கிறது. தினமும் வீட்டுக்குத் தெரியாமல் வந்து முள்வேலிக்கு உள்ளாக இருக்கும் யூதநண்பனை பார்த்து பாhத்து உயிர் இணையும் நட்பினால் அந்த முகாமுக்குள்ளே போய்ப்பார்க்கும் ஆர்வம் ஜேர்மனியசிறுவனுக்கு வந்து விடுகிறது. இவனுக்காக யூத சிறுவன் கொண்டுவந்திருக்கும் அந்த கோடுகள் போட்ட கைதி உடையை போட்டுக்கொண்டு தனது உடையை முள்வேலிக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு முள்வேலியின் கீழாக மண்ணைத்தோண்டி உள்செல்லும் ஜேர்மனிய சிறுவனுக்கு முகாமுக்குள் காணும்காட்சிகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

யுத்தம் என்ற போர்வையில் அப்பாவி பெண்களும்,சிறுவர்களும்,குழந்தைகளும் முதியோரும் காரணம் ஏதுமின்றி வதைக்கப்படுவதை காண்கிறான்.’எல்லாம் உன்னுடைய சிறந்த எதிர்காலத்துக் கான யுத்தம்தான் இது’ என்று ஜேர்மனியபடை அதிகாரியான தனது தந்தை சொன்னதன் அர்தங்களுக்கு பின்னால் இவ்வளவு அப்பாவிகளின் கதறல்களும், வருத்தங்களும்,சாவுகளும் இருப்பதை கண்டு திகைக்கிறான். அவனின் திகைப்பு நீங்கமுன்னரே,அங்கிருந்தவர்களில் ஒரு பகுதியூதர்களுடன் அவனும் விசவாயு அறைக்குள் அடைக்கப்படுகிறான்.

இதற்கிடையில் வீட்டில் இவனைக்காணாத தந்தையும் தந்தையின் படைவீரர்களும் தாயும் இவனை தேடி அலைகிறார்கள். விசவாயு அறைக்குள் இவனும் அவனின் யூத நண்பனும் கைகளை கோர்த்தபடியே நெரிசலுக்குள் அலறியபடி நிற்க விசவாயு திறக்கப்படுகிறது. முள்கம்பிவேலிக்கு வெளியே இவனின் உடையை கண்ட தாயாரும் மற்றவர்களும் என்ன நடந்திருக்கும் என உணர்ந்து அலறுகிறார்கள்.மழை மெதுவாக பெய்ய மனிதர்களை எரித்து வெளிவரும் கரியபுகை நீண்டஉலைகளால் வெளியேறுகிறது.

இந்தப் படத்தை பார்ப்பதற்கும் இதனை புரிந்து கொள்வதற்கும் பெரிதாக சமூக,கலாச்சார, விஞ்ஞான அறிவுகளோ வேறு தகமைகளோ தேவைப் படாது.நீங்கள் முழு ஈடுபாட்டுடனோ,வேண்டா வெறுப்பாகவோ எப்படி பார்த்தாலும் இந்தப் படம் உங்களுக்குள் சென்று உள் நுழைந்துவிடும் .உள்நுழைந்து அவதிப்படுத்தும் .இந்தப் படத்துக்கு கிடைத்த அனைத்து விருதுகளையும்விட அதுதான் சிறந்த விருது.இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்கப்படும் ஒரு வாசகம் எவ்வளவு அர்த்தமுள்ளது பாருங்கள்-

‘Childhood is measured out by sounds and smells and sights, Before the dark hour of reason Grows’ -John Betjeman–

(தேவையற்ற இருண்ட காரணங்களை கண்டறிவதற்கு முன் குழந்தைப்பருவமானது சுற்றியுள்ள சத்தங்களாலும்,வாசனைகளாலும்,பார்வையாலுமே அளவிடப்படுகிறது)

ச.ச.முத்து 31.07.2010

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom