கரபந்தாட்டத்தின் காவிய வீரன் சிவநாதன்
July 31, 2010
புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 31.07.2010
ஈழத்தின் ஓவர்கேம் ஆட்டம் மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு சாதனை வீரன் சிவநாதன்
யாழ். குடாநாட்டில் புகழோடு வலம்வந்த பெரும்பாலான கரபந்தாட்ட வீரர்களின் விளையாட்டுக்களையும், அவர்களுடைய விளையாட்டு நுட்பங்களையும் நேரடியாக பார்த்த அனுபவம் என்னிடம் இருக்கிறது. இந்த வீரர்கள் எல்லோரின் விளையாட்டிலும் வௌ;வேறு சிறப்புக்கள் இருந்தாலும்கூட, தொகுத்துப் பார்த்தால் அவர்களுடைய விளையாட்டு முறைமைக்கான முள்ளந்தண்டு ஒன்றாகவே இருக்கும்.
ஓவர்கேம் என்றால் அடிக்கும் முறை, உடல் அசைவு, எண்ணம், தாக்குதல், தடை, சேவீஸ் என்று ஒரு வரன்முறை இருக்கிறது. இந்த வரன்முறை எதற்குள்ளும் அடங்காத ஒரு மகத்தான விளையாட்டு வீரனாக யாராவது ஒருவன் வரமாட்டானா என்ற ஏக்கம் என்னுள் நீண்ட காலமாக இருந்தது.
தேடுங்கள் கிடைக்கும், கனவு காணுங்கள் ஒரு நாள் அது நிஜமாகும் என்று கூறுவார்கள். அந்த நம்பிக்கை வார்த்தைகளுக்கு அமைவாக காலம் என் கண்முன் அறிமுகம் செய்த கரபந்தாட்ட நாயகனே சிவநாதனாவார்.
யார் இந்த சிவநாதன்.. ஆறடி தாண்டிய உயரம், ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளையும் சரளமாகப் பேசும் வல்லமை. நீண்ட கரங்கள், ஆஜானுபாகுவான தோற்றம். வல்வையில் திருமணம் செய்து, வல்வை ஊறணி வைத்தியசாலையில் தலைமைக் கிளாக்காக பணியாற்ற வந்தபோது இவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதுவரை பருத்தித்துறை யுனைட்டட் விளையாட்டுக்கழகத்தில் முக்கிய வீரராக இவர் திகழ்ந்திருக்கிறார். அல்வாய் யூனியன் போன்ற பிரபல கரபந்தாட்ட அணிகளிலும் விளையாடியிருக்கிறார். ஆனால் அவைகளில் எல்லாம் விளையாடாது வல்வைக்கு மருமகனாக பருத்தித்துறையில் இருந்து வந்திருந்தார்.
இவர் ஏன் அல்வாய் யூனியனில் விளையாடாது இங்கு வந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் சிவநாதனைப் போன்ற ஒருவர் மைதானத்தில் நின்றால் அவரைவிட பிரகாசமான நட்சத்திரமாக மிளிர யாராலுமே முடியாது. மற்றவனின் கப்பலில் கரி அள்ளிப் போடும் கூலியாக வாழ்வதைவிட நமது சொந்தப்படகின் சுக்கானில் இருப்பதே மேல் என்ற கொள்கை உடையவர். அல்வாய் யூனியனிலோ, இமையாணனிலோ அவர் விளையாட முடியாது என்பது அவருடைய அபார திறமையைப் பார்த்தபோது என்னால் எளிதில் புரிய முடிந்தது.
எழுபதுகளின் பிற்பகுதியில் இமையாணன் இரண்டாக உடைந்தது. அதில் விளையாடிய சின்னவன் போன்றவர்கள் நால்வர் கொண்ட புதிய அணி ஒன்றை உருவாக்கினார்கள். அதில் சிவநாதனும் விளையாடினார், இமையாணன் போன்ற பெரிய அணிகளை எல்லாம் அவர்கள் உடைக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய வெற்றிக்குப் பின்னால் சிவநாதன் இருந்தார். ஆனால் அந்த அணியிலும் ஒரு குறைபாடிருந்தது. சிவநாதனின் கருத்துக்களை விளங்கி ஆடும் விளக்கம் அங்குள்ள பலரிடம் இருக்கவில்லை, அதனால் சிவநாதனால் அவர்களுடனும் தொடர முடியவில்லை.
இந்ந நிலையில் சிவநாதனை ஏன் கரபந்தாட்டத்தின் காவிய நாயகன் என்று வர்ணிக்கிறேன் என்பதற்கு என்னைப்பற்றிய சிறிய தகவலைத் தரவேண்டும்..
இக்காலத்தில் கரபந்தாட்டத் துறையில் ஏறத்தாழ பைத்தியமே பிடித்த ஒருவனாக நான் வாழ்ந்துவந்தேன். க.பொ.த உயர்தர பாPட்சையில் இரண்டு தடவைகள் கரபந்தாட்டத்தின் மீது கொண்ட நாட்டத்தாலேயே தோல்வியடைந்த நிலையில் இருந்தேன். பரீட்சைக்கு படிக்க புத்தகத்தைத் தூக்கினால் பந்துதான் சுழலும், என்னால் படிக்க முடியவில்லை.
அக்காலத்தே நெடியகாட்டில் நடைபெற்ற ஒரு கரபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட மோதலில் தனி ஒருவனாக சிக்குப்பட்டேன். உயிராபத்துக்களையே சந்தித்து பலருடன் வீதிகளில் மோதிக் கொண்டிருந்தேன். இளமையும், கரபந்தாட்டத்தின் மீதிருந்த உயிர் நேசமும் கடும் பகைமைகளையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தினாலும் கரபந்தாட்டத்தில் நான் கலைமகளைக் கண்டேன். கரபந்தாட்டத்திற்கு மேல் இந்த உலகத்தில் யாரும், எதுவும், எந்தக் கொள்கையும், எந்த இனமும், எந்தச் செயலும் எனக்குப் பெரியதாக தென்படவில்லை, அப்படியொரு வெறி.
ஆரம்ப காலங்களில் நெடியகாடு விளையாட்டுக் கழகத்தின் கரபந்தாட்ட வீரனாக இருந்த நான் சிறந்த வீரர்களான ஏ.ஆர் இரத்தினசிங்கம், அவருடைய அண்ணன் அமிர்தலிங்கம், பிரபல நாடக எழுத்தாளர் துரைரெட்ணம் ( கணக்கர் ) போன்றவர்களுடன் இணைந்து விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவங்களுடன் இருந்தேன். ஆனால் அவர்களின் வயது காரணமாக போட்டிகளில் நாட்டம் குன்ற, எனது கரபந்தாட்ட வெறியை நெடியகாட்டில் இருந்து வளர்க்க முடியவில்லை. வேறு கழகங்களில் சோந்து விளையாடி அதனை வளர்க்க முற்பட்டேன். தீருவில் போன்ற பல கழகங்களில் விளையாடினேன், ஆனால் எங்குமே என் எண்ணம் ஈடேறவில்லை.
இந்த நிலையில்தான் சிவநாதனை நெடியகாட்டு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் உள்ள மைதானத்தில் வைத்துச் சந்தித்தேன். அவர் என்னைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டு அறிந்திருப்பது உரையாடலில் தெரிந்தது. அன்று தொடங்கிய உறவு தொடர்ந்து வளர்ந்து சென்றது. பல வருடங்களாக வாரந்தோறும் கரபந்தாட்ட வரலாற்றை எனக்குக் கூறத்தொடங்கினார். காலம் ஈழத்தின் கரபந்தாட்டத்திற்கான ஒரு பதிவிற்காக எம்மை இணைத்திருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
அக்காலத்தில் யாழ். குடாநாட்டில் இமையாணன் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. நமது அணிகளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக தொடர் வெற்றிகளை பெற முடியாமல் இருக்கிறதே என்ற கவலை என் உள்ளத்தில் இருந்தது.
இது தொடர்பாக பலரிடம் பேசியிருந்தேன், அதை சிவநாதனிடமும் கூறினேன். இக்கேள்விக்கு முன்பொருநாள் கரபந்தாட்ட வீரன் சின்னத்துரை என்னிடம் கூறிய கருத்தையே சிவநாதனும் கூறியபோது அவரை மேலும் ஒரு சுற்று ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேன்.
நாம் ஓர் ஊரில் உள்ள ஏதோ ஓர் ஒழுங்கையில் வாழ்ந்து கொண்டு, அந்த ஒழுங்கைக்கான விளையாட்டுக்கழகத்திற்கு மட்டுமே விளையாடுவோமென வெற்று வீறாப்பு பேசினால், ஒரு காலமும் நாம் தேடும் வெற்றி கைகளுக்கு வராது. ஆகவே கழகங்களைப் புறந்தள்ளி சிறந்த விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் ஒரே வழி அதற்கான முயற்சியில் இறங்குவோம் என்றார்.
வல்வை காட்டுவளவில் ஒரு மைதானத்தை ஏற்படுத்தி கரபந்தாட்டத்தை தினசரி விளையாட ஆரம்பித்தோம். அங்கே சகல கழகக்கட்டுப்பாடுகளையும் உடைத்து அனைவரும் விளையாடும் ஏற்பாட்டை அமல் செய்தோம். வல்வையின் பிரபல வீரர்கள் எல்லோரும் தினசரி அங்கு வந்து விளையாட ஆரம்பித்தார்கள். யாரெல்லாம் விளையாட வருகிறார்களோ அவர்களைக் கொண்டதே நமது கழகம்.
அப்பொழுதுதான் சிவநாதனின் விளையாட்டுத் தொழில்நுட்பத்தை அணுஅணுவாக அவதானிக்க ஆரம்பித்தேன். நாலுபேர் கொண்ட கரபந்தாட்ட விளையாட்டு முறைக்கு அவர் புதிய வரைவிலக்கணத்தையே வகுத்திருந்தார். அந்த விதிமுறைகளை யார் ஏற்று நடக்கிறார்கள் என்பதையும் விளையாட்டு விளையாட்டாகவே அவதானித்து வந்தார்.
நான்குபேர் கொண்ட ஓவர்கேமில் அவர் கூறிய விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடித்தால் அந்த அணியை எவராலும் வெல்ல முடியாது என்று உறுதிபடக் கூறினார். அது என்ன விதிமுறை.. செக்கன் லைன் நெற்றில் இருந்து ஒன்றரை மீட்டர் இடைவெளியில் நெற்றுக்கு மிக நெருக்கமாக நிற்க வேண்டும். தலைக்கு மேல் வரும் பந்தை எடுக்க பின்புறமாகக் கலை வைக்கவே கூடாது. தேர்ட் லைன் சகல இடங்களிலும் ஓடி விளையாட வேண்டும். நெற்றின் றிம்மில் பட்டு கீழே உருளும் பந்தை முழந்தாளிட்டு செக்கன்லைன் மேலே தூக்கிவிட வேண்டும்.
நமது ஆட்ட முறையில் சேவீசும், கணப்பொழுது அதிரடிக் காலமும் மிக முக்கியம். சேவீசை நெற்றோடு மெதுவாக அடித்து விழச் செய்ய வேண்டும். எதிரணி சேவீஸ் பந்தை உயர்த்தித் தருவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் எமது சேவீஸ்கள் நெற்றோடு முத்தமிடுவது போல விழும், எதிரணி பந்தைத் தூக்கவும், இந்தா பிடி என்று ஒரு சத்தம் கேட்கும். அவ்வளவுதான் சிவநாதனின் அடி எதிரணியின் தேர்ட் லைனை சீவிச் செல்லும்.
இடம் அடிப்பது, மார்புக்கு நேராக வீறிடும் சுருள் அடி, தலைக்கு மேல் காற்றுச் சுருள், இடம் வலம் சீவல், மின்னலடி போன்ற வேகப்பந்துகள் சிவநாதனிடமிருந்து பறக்கும். நால்வரில் ஒருவர் நிலத்தோடு தவழ்ந்து எத்தனை பந்துகள் வந்தாலும் பொறுக்கி அடுத்த பக்கம் அனுப்ப வேண்டும். இன்னொருவர் வந்த பந்தை லொப் செய்து நெற்றோடு உருட்ட வேண்டும். ஒவ்வொரு பந்தும் எதிரணியின் வலம் இடம் என்று மாறி மாறிச் சுருள வேண்டும்.
இதற்கு முதல் தகுதி 500 பந்துகள் வந்தாலும் அத்தனையையும் பவுல் இல்லாமல் திருப்பி அனுப்பும் ஆற்றலும், களைப்பில்லாத இளமையும் வேண்டும். அதற்காக இருவர் மட்டும் பந்தை வானத்தில் வைத்திருக்கும் பயிற்சி எடுப்போம். காலை ஆறு மணியில் இருந்து மதியம் 12 மணிவரை இது நீளும். பின் மாலை நாலுமணிக்கு விளையாட ஆரம்பித்து ஆறு மணிக்கு நிறைவு செய்வோம். ஆக தினசரி எட்டு மணி நேரம் பயிற்சி எடுப்பது வழமை. பாடசாலை நாட்களில் காலை ஆறு மணி முதல் எட்டுமணிவரை பயிற்சி எடுப்போம். இந்தப் பயிற்சியை பல ஆண்டுகளாக நானும் வேறு சில நண்பர்களும் வல்வை தெணியம்பை மைதானத்தில் செய்து கொண்டிருந்தோம். எனவே சிவநாதனுடன் இணைவதற்கான தகுதி எம்மிடம் இருந்தது.
இதன் பின் பல ஆட்டங்களுக்கு சென்று சுமாரான வெற்றிகளை பெற்று வந்தோம். ஆனாலும் நாம் வகுத்துக் கொண்ட ஆட்டமுறையை விளங்காமல், தமக்கு தாமே ஒரு நியாயத்தை வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் வாசிப்போர் அணியில் இருந்தால் வெற்றி கைகளுக்கு வராது என்பதை அவர் எங்களுக்கு புரிய வைத்தார்.
நமது நோக்கம் என்ன ? யாழ் குடாநாட்டின் முக்கிய கழகங்களை எல்லாம் வெற்றிபெற வேண்டும். கடந்த கால் நூற்றாண்டுகளாக வல்வையில் இருந்து கைநழுவிப்போன முக்கிய கேடயங்களை எல்லாம் வெல்ல வேண்டும். நம்மிடம் மிகச்சிறந்த வீரர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைவிட சிறந்தவர்கள்தான் ஆனால் நாம் கருதும் நுட்பத்திற்குள் அவர்களை இணைக்க முடியாது என்றார். பல போட்டிகளில் நாம் அடைந்த தோல்விகளில் அதை நிதர்சனமாகக் கண்டு கொண்டோம்.
நாட்கள் நகர்ந்தன..
இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் நாமும் இப்படியே சாகும்வரை பந்தைத் தட்டிவிட்டு பரலோகம் போக வேண்டியதுதான். ஆகவே காலதாமதம் செய்யாமல் புதிய அணி ஒன்றை அமைத்துக் கொண்டோம். ஒன்று நான், இன்னொன்று ராதராதாகிருண்ணன் என்ற வல்வை சிவபுர வீதியைச் சேர்ந்த எனது நண்பன், அல்வாய் யூனியனின் புகழ்பெற்ற ஓடக்கரை சின்னத்தம்பி, சிவநாதன் ஆகிய நால்வரும் கொண்ட அணி அமைக்கப்பட்டது.
இந்த அணியால் அப்புக்குட்டி என்ற மாபெரும் வீரன் விளையாடும் காலத்திலேயே இமையாணனை வெல்ல முடியுமா ? படிப்படியாக பல கழகங்களை வென்று இறுதியில் இமையாணனை சந்திப்பதைவிட முதலிலேயே இமையாணனை நெருங்குவோம் என்று திட்டமிட்டோம். தொண்டைமானாறு சிறீமுருகன் விளையாட்டுக்கழகம் நடாத்திய நாலுபேர் கொண்ட கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இமையாணனைச் சந்தித்தோம்.
நமது கனவு நிறைவேறுமா..? மைதானத்தின் எதிர்ப்புறத்தில் இருந்து பார்த்தேன். எம்மை வென்று இறுதி ஆட்டத்திற்குப் போவதற்கு ஆயத்தமாக இமையாணன் அப்புக்குட்டி ஆஜானுபாகுவாக நிற்பது தெரிந்தது. அவரது அற்புதமான அணியை வெல்ல முடியுமா..? ஆட்டம் ஆரம்பித்தது, சிவநாதன் சொன்ன விதியை அப்படியே பின்பற்றி ஆடிக் கொண்டிருந்தோம். நானும் சின்னத்தம்பியும் செக்கன்ட் லைனில் நின்று சகல பந்துகளையும் அனுப்பிக் கொண்டிருந்தோம்.
ஆட்டம் அகோரமும் விறுவிறுப்பும் கொண்டதாக இருந்தது…
நாம் ஒரு புள்ளியால் முன்னேற அப்புக்குட்டி இன்னொரு புள்ளியால் எம்மை முந்திக் கொண்டிருந்தார். அரைமணி நேர ஆட்டம் முடிய இன்னமும் ஒரேயொரு நிமிடம் மட்டும் இருந்தது. இரு தரப்பிற்கும் 20ம் 20மாக சமமான புள்ளிகள். எமது பக்கம் சைட்அவுட் புள்ளடி இருந்தது. அது மாறினால் இமையாணனுக்கு வெற்றி. அப்புக்குட்டியின் அகோர தாக்குதல் பொறி பறந்து கொண்டிருந்தது.. கண்கள் மின்னின.. போட்டிருந்த காற்சட்டை வெடிக்குமளவிற்குப் போராடிக் கொண்டிருந்தோம்..
ஒரேயொரு இமைப்பொழுது…
இமையாணன் ஓர் இமாலயத் தவறை நிகழ்த்தியது. தேர்ட் லைனில் நின்ற சிவநாதனுக்கு தலைக்கு மேலால் வரும் செக்கன் லைன் பந்து சர்க்கரைப் பொங்கல் என்பது தெரிந்தும் இமையாணன் பந்தை உயர்த்திவிட்டது. இந்தா பிடி பலமான சத்தம்.. பிடரி மயிர் சிலிர்க்க சிங்கம் போல பாய்ந்த சிவநாதன் அடித்த அடி அப்புக்குட்டியின் இடது கையால் சீறி சேவீஸ் லைனில் பட்டு பறந்தது. விசில் ஒலி கேட்டது. இமையாணன் தோல்வியடைந்தது, என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.
மின்னலடிக்கும் என் கண்களில் சிவநாதன் ஒரு காவிய நாயகன் போல தெரிந்தார். அந்த வெற்றி மயக்கம் எனக்கு பிடிபடவில்லை. அடுத்து நடைபெற்ற இமையாணன் கலைமகளுடனான இறுதி ஆட்டத்தில் எனது சிறிய கவனக் குறைவால் தோல்வியடைந்தோம். எனது இடது கைப்பக்கம் ஒரு பிளேஸ் அடி… ஆட்டம் முடிந்தது. கணப்பொழுது நான் விட்ட தவறு தோல்வியில் முடிந்தது. இருந்தாலும் இமையாணனை வென்றது எம்மளவில் சரித்திர சாதனையாகவே தெரிந்தது.
விளையாட்டு வீரன் தோல்வியில் கவலையும் வெற்றியில் உணர்ச்சியும் அடைதல் கூடாது.. இருந்தாலும் இமையாணன் கலைமகள் அடித்த அடியை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டேன். அதற்கு மேலும் பயிற்சிகள் தேவைப்பட்டது, காலம் ஓடியது..
அது நடந்த சில மாதங்களில் கணபதி படிப்பகத்தில் இருந்து தினகரன் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே திருமலை சைனிங்ஸ்டார் நடாத்திய நான்கு பேர் கொண்ட கரபந்தாட்டப் போட்டியில் எதிரொலி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றிருந்தது. அதில் விளையாடிய அல்வாய் யூனியன் தியாகராஜா மாஸ்டர் கேடயத்தை பெறும் புகைப்படம் முன் பக்கம் வெளியாகியிருந்தது.
முதல் நாள் முழுவதும் இலங்கை வானொலியில் அந்த விளையாட்டு நேரடி வர்ணனை செய்யப்பட்டதையும் கேட்டுக் கொண்டிருந்தேன். யாழ். குடாநாடு முதல் மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மன்னார் தொடங்கி அகில இலங்கை முழுவதிலும் இருந்து கழகங்கள் பங்கேற்கும் ஆட்டம் அது. ஓவர்கேமில் இதுவே அகில இலங்கைக் கேடயம் என்று வர்ணனையாளர் கூறிக் கொண்டிருந்தார். மூன்று மைதானங்களில் திருமலை முற்றவெளியில் நடைபெறும் ஒரு நாள் பகல் இரவு ஆட்டம் அது. 50ற்கு மேற்பட்ட கழகங்கள் அகில இலங்கை முழுவதிலும் இருந்து பங்கேற்கும் பொறிகக்கும் ஆட்டமாகும்.
அண்ணா இந்தக் கேடயத்தை அடுத்த ஆண்டு நாங்களே வேண்ட வேண்டும்.. எனக்கு அருகில் டெய்லி நியூஸ் வாசித்துக் கொண்டிருந்த சிவநாதனிடம் மெல்லிய குரலில் கேட்டேன். நெடு நேரமாக சிவநாதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அது விளையாட்டல்ல, வாழ்க்கையை வெற்றி கொள்ள விரும்பும் அனைவரும் அறிய வேண்டிய வாழ்க்கை விதி, இன்று நாம் படிக்கும் தன்னம்பிக்கை நூல்களை எல்லாம் தூக்கிப் போடும் அற்புதமான வாழ்வியல் விதி..
அந்த அகில இலங்கைக் கேடயத்தை நாம் கைப்பற்ற முடிந்ததா?..
அடுத்த வாரம் தொடரும்…
அதுவரை நம்பிக்கைகளுடன்
கி.செ.துரை 31.07.2010





Comments
Got something to say?
You must be logged in to post a comment.