Top

எங்களை கொன்றுவிடுங்கள் ஈழத்தமிழர்கள் கண்ணீர்

July 30, 2010

இலங்கைத் தமிழர் பகுதிகளில், இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளா சாந்தபுரம் மக்கள், அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும்படியும், இல்லை என்றால் கொன்றுவிடுமாறும் இலஙகை அரசிடம் கூறுங்கள் என, இலங்கை கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கை தமிழர் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தமிழர் பகுதியான சாந்தபுரம், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி மக்களை மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு 2 மாதங்களாகியும் இதுவரை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சி.ஸ்ரீதரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கிளிநொச்சியின் சாந்தபுரத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை 29ந் தேதி சந்தித்தபோது அங்குள்ள மக்கள் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்தவரப்பட்டும், இதுவரை அடற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பள்ளிக்கூடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடிக்கத் தண்ணீர் இல்லை, தொழில் இல்லை, நிம்மதியான வீடில்லை என்ற நிலையில் கொடுக்கப்படுகின்ற நிவாரணத்தை மட்டும் நம்பி அந்த மக்கள் வாழ்கின்றனர்.

மீளக்குடியமர்விற்காக அழைத்து வரப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் பலர் போரில் உயிரிழந்தனர். எஞ்சிய சிலரும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். எனவே குடும்பத்தின் உழைப்பிற்காக பெண்களே கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

இதனால் வீட்டில் பிள்ளைகளைப் பராமரிக்க யாருமற்ற நிலையில், அவர்களின் பிள்ளைகள் அனாதைகளைப் போல் இருக்கின்றனர். மேலும், அங்கு பள்ளிக்கூடம் இயங்காத நிலையில் பிள்ளைகள், அங்கிருந்து வெகு தொலைவில் அமைந்த திருவையாறு பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் நாய்களைப் போல நடத்தப்படுவதாகவும் சாப்பாட்டிற்கும் தண்ணீருக்கும் மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்து பிச்சைக்காரர்களைப் போல் விடப்பட்டுள்ளதாகவும் மக்கள் கண்ணீர் மல்க கூறினர்.

இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பு எம்.பிக்கள், “சாந்தபுரம் மக்களுடைய பிரச்சினை உடனடியாக இலங்கை அரசால் முடிவடைகின்ற ஒரு பிரச்சனை இல்லை. சர்வதேச அளவில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கான பிரதிபலன் விரைவில் தெரியவரும். அப்படி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்து, நிச்சயமாக மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை பாடுபடுவோம் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.

மேலும், இப்பிரச்சினைக்குறிய அந்தப் பகுதியில் இடப்பெயர்விற்கு முன்பு வரை 765 குடும்பங்கள் இருந்துள்ளன. தற்போது 281 குடும்பங்கள் மீள்குடியமர்விற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மீள் குடியேற்றம் செய்ய இலங்கை இராணுவம் தடை விதித்து வருகின்றது. இந்தப் பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அடங்குகினாலும், இதன் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் அடங்குகின்றனவாம்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom