Top

வெற்றி எப்.எம் மீதான தாக்குதல் அச்சுறுத்தலாகும் மனோ கணேசன்

July 30, 2010

இன்று அதிகாலை வெற்றி எப்.எம், சியத்த எப்.எம் மற்றும் ரியல் எப்.எம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்ந்தும் ஊடகத்துறைகளுக்கு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் காண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று அதிகாலை 15பேர் கொண்ட இனந் தெரியாத நபர்கள் இந் நிறுவனத்தின் செய்தி பிரிவிற்குள் நுழைந்து உத்தியோகஸ்தர்களை தாக்கிவிட்டு, பெற்றோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான கொடுரச் சம்பவங்கள் இன்னும் ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதையே அடையாளப்படுத்தி காட்டுகின்றன. இந்த நிறுவனம் உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் பாரிய தவறை தொடர்ந்தும் இழைத்து வருகின்றது.

இவ்வாறான பல சம்பங்கள் இன்று, நேற்று அல்ல கடந்த பல ஆண்டுகளாவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊடகத்துறைகளுக்கான சுதந்திரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஊடகத்துறை மீதான தாக்குதல்களினால் மக்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது.

இது ஊடக சுதந்திரத்திற்கு மாத்திரம் விடுக்கப்பட்ட சவாலாக நாம் கருதவில்லை. மாறாக ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்டிக் கொண்டிருக்கும் சாவு மணியின் வெளிப்பாடாகவே இதை நாம் பார்க்கின்றோம். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தாக அறிவித்துக் கொண்டிருக்கும் இவ்வரசாங்கம், இவ்வாறன சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாத வண்ணம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom