Top

புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 06.07.2010

July 5, 2010

புகழ் வீரன் பொட்டுக் கட்டி...

யாழ். குடாநாட்டின் பிரபல வீரர் ஒருவரின் கதை

யாழ். குடாநாட்டு விளையாட்டு வீரர்களில் சிலருடைய பெயர்களை சொன்னால் அதிகமாக எல்லோருமே தெரியும் என்று கூறுவார்கள். இன்றும் புலம் பெயர்ந்து ஈழத் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள முதலாவது தலைமுறை தமிழர்களில் விளையாட்டுத் துறையோடு தொடர்புடைய அனைவரும் அறிந்த ஒருவராக பவனி வருபவர் வல்வை விளையாட்டு வீரர் பொட்டுக்கட்டியாகும்.

இந்தத் தொடரில் தாயகத்தின் பிரபல கரபந்தாட்ட விளையாட்டு வீரர்களை குறிப்பிட்டு வருவதால் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரரை இதற்குள் ஏன் பதிவு செய்கிறீர்கள் என்று கேட்கலாம். பொட்டுக்கட்டி உதைபந்தாட்டம், கரபந்தாட்டம் செற். அப், ஓவர்கேம், கிரிக்கட், பூப்பந்தாட்டம் ஆகிய பல விளையாட்டுக்களில் முத்திரை பதித்த வீரராகும். ஆகவேதான் அனைவரும் அறிந்த ஒருவராக இன்றும் இவர் வலம்வருகிறார்.

யாழ். குடாநாட்டில் நான் பார்த்த விளையாட்டு வீரர்களில் என்னால் என்றுமே மறக்க முடியாத ஒருவராக இவர் திகழ்வதற்கு இதுபோல பல்லாயிரம் காரணங்கள் உண்டு. அதனால்தான் இவரைப்பற்றி எழுத முடியாமல் பல வருடங்களாக தடுமாறி வருகிறேன். எங்கே இவன் பெருமையில் ஒன்றை குறைவாக கூறிவிடுவோமோ என்ற அச்சத்தில் சங்ககால வீரன் ஒருவனின் புகழை கவிதைக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாறுவார் சங்கப்புலவர் ஒருவர். அவரைப்போலவே எங்கே இவர் புகழில் ஒன்றைத் தவற விட்டுவிடுவேனோ என்று அஞ்சி எழுதாமலே இருந்தேன். இப்போது ஏதோ நமக்கு தெரிந்ததையாவது பதிவு செய்வோமென நினைத்து ஆரம்பிக்கிறேன்.

வல்வை சிதம்பராக்கல்லூரியில் நான் நாலாவது வகுப்பில் சேர்ந்தபோது நீல இல்லத்திற்கு இவரே தலைவராக இருந்தார். எமது இல்லம் குமரகுரு இல்லம் என்று அழைக்கப்பட்ட பச்சை இல்லமாகும். அதன் தலைவராக இருந்தவர் மயில்வாகன சுந்தரம். மிகவும் உயரமான ஓட்டப்பந்தயத்தில் அதி சிறந்த வீரரான அவரை யாரும் நீண்ட தூர ஓட்டத்தில் வெல்ல முடியாது என்று என்னிடம் பலர் கூறியிருந்தார்கள்.

ஒரு மைல் ஓட்டம் நடைபெற்றபோது மயில்வாகனசுந்தரம் முதலிடத்தில் வருவதைப் பார்ப்பதற்காக ஓட்டம் முடிவடையும் கயிற்றுக்கு அருகாமையில் காத்திருந்தேன். அவரோடு பொட்டுக்கட்டியும் ஓடிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மயில்வாகனசுந்தரம் மெதுவாக ஓட மற்றவர்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பொட்டுக்கட்டி தொடர்ந்து முதலாவதாகவே ஓடிக்கொண்டிருந்தார். எட்டாவது இறுதி றவுண்டில் மயில்வாகனசுந்தரம் புயலாக வேகமெடுத்தார். எல்லோரையும் வேகமாக முந்திக்கொண்டு முதலாவதாக ஓடிய பொட்டுக்கட்டியை நெருங்கிவிட்டார். இதோ முந்தப் போகிறார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் சிறிய இடைவெளியில் பொட்டுக்கட்டியே முதலிடம் பெற்றார். யார் இந்தப் பொட்டுக்கட்டி அன்று முதல் அவரை கூர்ந்து அவதானித்தேன்.

அவர் பாடசாலை உதைபந்தாட்ட வீரராக இருந்த காலத்தே யாழ். குடாநாட்டின் உதைபந்தாட்ட சாம்பியனாக சிதம்பராக்கல்லூரி தடையின்றி வெற்றிபெற்று வந்தது. கரபந்தாட்டத்திலும் தொடர் சாம்பியனாக வந்து முத்திரை பதித்துக் கொண்டிருந்தது. அதேபோல அகில இலங்கை சாரணர் போட்டியில் தொடர்ந்து மகாதேசாதிபதி வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டிருந்தது. ஒருதடவை மூன்று முறைகள் தொடர்ந்து மகாதேசாதிபதி கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இத்தகைய சாதனைகளை படைத்த மாணவர்களிNடையே பொட்டுக்கட்டியை எல்லோரும் கட்டியண்ணா என்று அன்போடு அழைத்தார்கள். ஏறத்தாழ எமது கனவுகளில் அவர் ஒரு காவிய நாயகனாகவே வலம் வந்தார். சாதனை படைக்க வேண்டும், அல்லது செத்துவிட வேண்டும் என்ற வெறி அனைவரிடமும் இருந்த காலம் அது.

அவரும், அவரோடு இணைந்திருந்த வீரர்களும் பாடசாலைப் படிப்பை முடித்து வெளியேற சிதம்பராவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதன்பிறகு இன்றுவரை யாழ். குடாநாட்டின் உதைபந்தாட்ட கரபந்தாட்ட சாம்பியனாக வர சிதம்பரா கல்லூரியால் முடியவில்லை. அப்போதுதான் கட்டியண்ணாவின் பெருமை எமது மனதில் இரட்டிப்பாக உயர்ந்தது. அதன் பின்னர் சிதம்பரா உதைபந்தாட்ட அணியிலும் கரபந்தாட்ட அணியிலும் விளையாடிய நாம் கட்டியண்ணா காலத்து சாதனைகளையே அதிகமாக பேசிக் கொண்டோம்.

பின்னர் வல்வையின் உதைபந்தாட்ட அணியில் முன்னணி வீரராக பொட்டுக்கட்டி வலம்வரத் தொடங்கினார். வல்வை குடாநாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. எங்கு உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றாலும் இறுதியாட்டத்தில் வல்வை இடம் பெறும், அதில் பொட்டுக்கட்டி இருப்பார்.

இவரை ஏன் பொட்டுக்கட்டி என்று அழைக்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண வேண்டும். வெள்ளை நிறமான தோற்றம், அளவான உயரம், துடிப்பான தோற்றம், சிரித்த முகம், சுருண்ட முடி, ஆஜானுபாகுவான தோற்றம் இதுவே கட்டியண்ணா. நெற்றியில் சந்தனமும், குங்குமமும் கலந்த பொட்டு வைத்து ஆட்டக்களத்தில் இறங்குவது இவரது வழமையாகும். மற்ற வீரர்கள் எல்லோரிலும் வித்தியாசமான ஒருவராக இவரை காட்டுவது இவருடைய சிறந்த விளையாட்டு மட்டுமல்ல, நெற்றியில் உள்ள பொட்டும்தான்.

ஒரு தடவை சீனா நாட்டு உதைபந்தாட்ட அணி இலங்கை வந்தபோது அனைத்து மாவட்டங்களையும் தலா ஆறு கோல்களை போட்டு வெற்றி பெற்றது. ஆனால் சீனாவிடம் தோற்றாலும் அவர்களுக்கும் ஒரு கோலைப் போட்ட பருத்தித்துறை மாவட்ட அணியில் பொட்டுக்கட்டி விளையாடி, சீனர்களுக்கே சவாலாக விளங்கியதை நெல்லியடியில் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

அக்காலத்தே அகில இலங்கையின் உதைபந்தாட்ட அணியில் இவர் இடம் பெறுவார் என்று பலர் கூறினார்கள். இதற்கான தேர்வுக்காக இவர் யாழ். சென்றதையும் பார்த்துள்ளேன். ஆனால் ஏன் இடம்பெறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் இங்கு எழுதவேண்டியதில்லை.

அதேபோல வல்வை செற்றப்கேம் அணியின் தலைமை வீரராக இவரே வலம் வந்தார். கட்டியண்ணா செக்கன்ட் லைனுக்கு வந்தால் அவ்வளவுதான் எதிரணி நிலை குலைந்துவிடும். கைகளை கீழ்ப்புறமாக ஒன்றாக்கி வானத்தில் எகிறி எழுந்து அதே வேகத்தில் பந்தை அடித்தால் செக்கன்ட் லைனில் பந்து குத்தி வானத்தில் எழுந்து பறக்கும், குடை அவுட் வெடித்தது போல கரகோஷம் வானைப் பிளக்கும்.

இவருடைய அடியின் அகோரத்தை அவதானித்த இலங்கை இராணுவ அணி கொழும்பில் இருந்து அகில இலங்கை கரபந்தாட்ட வீரர்களை இறக்கியே இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ளும். சிறீலங்காவின் இராணுவ – போலீஸ் அணிகளை மைதானத்தில் சந்தித்த தமிழ்த் தலைமை வீரன் பொட்டுக்கட்டியே.

பொட்டுக்கட்டி ஒருவர்தான் எம்மிடம் இருந்தார், ஆனால் இராணுவமும், போலீசும் அவருக்கு இணையான ஆறு வீரர்களை களமிறக்கி பல வருடங்களாக மோதினார்கள். லாலாசோப், தினகரன், வதிரி டையமன்ஸ் போன்ற பிரபல போட்டிகளில் எல்லாம் பொட்டுக்கட்டி ஒருவரே சிங்கள இராணுவ அணிக்கு எதிரான முத்திரை வீரராக வலம் வந்தார். தமிழ் வீரனாக வெற்றித் திலகம் அணிந்து, சிங்கள அணிகளுக்கு நாம் குறைந்தவர்கள் அல்ல என்ற சாதனையை நிலைநாட்டினார். தமிழ் தேசியவாதம், சிங்கள தேசியவாதம் இரண்டும் மைதானத்தில் மோதிக்கொண்ட காலத்தின் தளபதியாக இவரே திகழ்ந்தார். நான் முன்னரே ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல இந்த வேறுபாட்டை அல்பிரட் துரையப்பா அவதானித்து வதிரியில் வைத்து அடையாளப்படுத்தினார்.

இதே வேகத்தில் ஓவர் கேம் பிரபலமாக நடைபெற்று நான்குபேர் விளையாட்டாக மாற்றமடைந்திருந்தது. ஆறுபேர் கொண்ட ஓவர்கேமை நான்குபேர் விளையாட்டாக மாற்றி, அதை பெரும் போட்டியாக உருவாக்கியவர்கள் திருமலை சைனிங்ஸ்டார் அணியினரே. இன்று ஓவர் கேம் என்பது ஏறத்தாழ நால்வர் கொண்ட விளையாட்டாகவே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை திருமலை சைனிங்ஸ்டாரையே சாரும். ஆரம்பத்தில் கீழ்க்கை அனுமதிக்கப்பட்டிருந்த நால்வர் கரபந்தாட்டம் பின்னர் கீழ்க்கை, நெற் எதுவுமே அனுமதிக்கப்படாமல், கடும் விதிகளுடன் செம்மைப்படுத்தப்பட்டது.

கட்டியண்ணா சிறந்த ஓவர்கேம் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். வல்வையின் பிரபல முன்னாள் வீரர்களுடன் இணைந்து பல போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற வெற்றிகளை குவித்தார். எழுபதுகளில் இவருடன் இணைந்து கரபந்தாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். தினசரி இவருடன் இணைந்து கரபந்தாட்டம் விளையாடிய பல வருட அனுபவங்களின் பின்னால் ஒரு சிறந்த மனிதனும் அவரில் வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டேன்.

குடாநாட்டில் வெல்வதற்குக் கடினமான பெரிய அணிகளை இவரும், நானும், சிவநாதனும், ஓடக்கரை சின்னத்தம்பியும் இணைந்து வெற்றி கொண்டோம். போர் உக்கிரமடைவதற்கு முன்னதாக உடுப்பிட்டி சிவகுமரன் நடாத்திய நால்வர் கரபந்தாட்டப் போட்டியில் இவருடன் இணைந்து விளையாடி அனைத்துக் கழகங்களையும் வென்று இறுதியாட்டத்தில் வடலியடைப்புடன் மோதி அதையும் வெற்றி பெற்றோம். மேலும் பல சாதனைகளை படைக்க வழியிருந்தும் போர் அதற்கு இடம் தரவில்லை.

எனது நண்பர்களான மற்றய ஊர்களின் கரபந்தாட்ட வீரர்கள் கட்டியண்ணாவை தமிழினத்தின் தேசிய அடையாளமாகவே போற்றினார்கள். இமையாணன் அப்புக்குட்டிபோல பெண்களை அதிகம் கவர்ந்த விளையாட்டு வீரரும் இவர்தான்.

அகில இலங்கை அணியில் விளையாடி, ஒரு நாட்டின் மரியாதைக்குரிய பதக்கங்களை எல்லாம் பெற்று கௌரவ வீரனாக வாழ வேண்டிய கட்டியண்ணாவை தமிழக போலீஸ் ஒரு நாள் கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் வைத்தது. ஈழத் தமிழனாக பிறந்தவனுக்கு இறுதியில் கிடைக்கும் பரிசு இவருக்கும் கிடைத்தது. இந்தியாவை விடுங்கள் இப்படிப்பட்ட சிறந்த வீரன் எமது இனத்து வீரன் என்பதை அறிந்து அவரை பெருமைப்படுத்த வேண்டிய கடமையைக் கூட நமது இனம் செய்யத் தவறியுள்ளது என்ற வேதனை இவரை எண்ணும் போதெல்லாம் எனக்கு வரும்.

சிங்கள அரசிற்காக காத்திருக்காமல் இவர்போன்றவர்களை நமது நாட்டின் தேசிய விளையாட்டு வீரர்களாக பெருமைப்படுத்த வேண்டிய கடமையை ஈழத் தமிழினம் முன்னெடுக்க வேண்டும். ஈழத்தில் முடியாவிட்டால் போகட்டும், ஒட்டுமொத்த புலம் பெயர் நாடுகளும் இணைந்து இத்தகையோருக்கு பெரு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு மரடோனா, ஒரு பீலே என்று ஆகாயம் பார்க்கும் நாம் அவர்களுக்கு இணையான நமது வீரர்களை அவதானிக்கத் தவறிவிடுவது இதயத்தில் உள்ள வலியாகும். ஆயினும் தமிழ் மக்களின் இதயத்தில் பொட்டுக்கட்டி பிடித்த இடத்தை வருங்காலங்களில் யாராவது பிடிக்க முடியுமா என்பது மாபெரும் சவாலாகும். தற்போது தமிழகம் திருச்சியில் வாழும் அவரை சில வருடங்களுக்கு முன் நேரில் சந்தித்து வந்தேன். அவரிடம் கேட்டு எழுத வேண்டிய தகவல்கள் ஏராளம் உண்டு. இன்று உதைபந்தாட்ட மைதானம் போகும் நமது இளையோர் அறிய வேண்டிய அற்புதமான வீரனே பொட்டுக்கட்டியாகும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்
அதுவரை நம்பிக்கைகளுடன்
கி.செ.துரை 06.07.2010

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom