Top

விசா காலாவதியான பின்னர் தங்கியிருப்போர் தண்டனைக்குரியோர் பட்டியலில் சேர்க்கப்படுவர்

February 9, 2010

விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவருவதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டதிகாரியும், விசாரணைப்பிரிவுத் தலைவருமான வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா, வட அமெரிக்கா, சார்க் ஆகிய பிராந்தியங்களில்“ தேர்ந்தெடுக்கப்பட்ட 84 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் இந்த வசதியை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று தேவேந்திரராஜா தெரிவித்தார்.

இந்த 84 நாடுகளிலிருந்து வரும் பிரயாணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இங்கு வந்திறங்கியதும் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களது நாடுகளைப் பொறுத்து ஒரு நியாயமான கட்டணத்தில் மொத்தம் இரண்டு மாதங்களுக்கு அல்லது 90 நாட்களுக்கு அவர்களது விசாக் காலம் நீடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய வசதிகளுக்கு மத்தியிலும் பெருமளவிலான சுற்றுலா பயணிகள் சட்டத்தை மீறி இங்கு பணியாற்றிவரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் ஆகியோரிடம் தற்காலிக அடிப்படையில் வேலைசெய்து வருகிறார்கள். சீனர்கள் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள் அல்லது கசினோ சு??தாட்ட கழகங்களில் சுற்றித் திரிகிறார்கள்.

இத்தகைய அத்துமீறல்களை கண்டுபிடிப்பதற்காக தமது தலைமையில் விசாரணை நடத்தியதாக தெரிவித்த தேவேந்திராஜா சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அல்லது நாட்டின் குடிவரவுச் சட்டங்களை மீறுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.

சட்டத்தை மீறுவோர் உடனடியாக நாடுகடத்தப்படுவது மட்டுமன்றி மீண்டும் அவர்கள் இந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதபடி அவர்களது பெயர் தண்டனைக்குரியவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தேவேந்திரராஜா கூறினார். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்வதன் மூலம், ஒரு ஜனாதிபதி மன்னிப்பு முறைமையின் கீழ் மாத்திரமே இத்தகையோர் மேற்படி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom