Top

சரத் பொன்சேகா மீதான புகார் ராணுவ நீதிமன்ற விசாரணை?

February 7, 2010

இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யவும்,​​ அதிபர் ராஜபட்சவை சுட்டுக்கொல்லவும் சசித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.

அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தபிறகு இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற பொன்சேகா திட்டமிட்டதாக அவர் மீது அரசு புகார் கூறியுள்ளது.

இது தொடர்பாக ராஜபட்ச அரசு,​​ சட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.​ ஏற்கெனவே பொன்சேகா மீது குற்றப் புலனாய்வுத் துறையினர் சாதாரண வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.​ அவர் ராணுவத் தளபதியாக இருந்த காரணத்தால் அவர் மீதான விசாரணையை ராணுவ நீதிமன்றத்தில் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

ராணுவ தடவாளங்கள் கொள்முதலில் நடந்த முறைகேட்டில் பொன்சேகாவின் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.​ அதுகுறித்தும் ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.​ விசாரணையின்போது பொன்சேகா ராணுவத்தில் கமாண்டர் பொறுப்பை ஏற்றது முதலான அவரது நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.​ இதனிடையே பொன்சேகா மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று இலங்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom