டென்மார்க்கில் குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது ! வடசேலண்டில் மண்டையோடு !
March 18, 2008
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் டென்மார்க்கில் குற்றச் செயல்கள் 25 வீதம் அதிகரித்துள்ளதாக புதிய கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களாக குற்றச் செயல்களின் அதிகரிப்பு 12 வீதமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு திடீரென இந்த வேகம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1686 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. கத்திக்குத்து, போத்தலடி, பயங்கர ஆயுதங்களை பாவித்தல், ஆளையாள் மூர்க்கத்தனமாக உதைத்தல் போன்றன இந்தக் குற்றச் செயல்களில் அதிகமானவை. வீடுகளிலும், மதுபான நிலையங்களிலும், விற்பனைப் பகுதிகளிலும் இக்குற்றச் செயல்கள் வேகமாக அரங்கேறியுள்ளன.
இது இவ்விதமிருக்க பிராமிங் நகரில் இடம் பெற்ற பிற்சாக்கடை குண்டு வெடிப்பில் கைதான 20வயதுடைய வாலிபரை விடுதலை செய்த நீதிமன்று, மறுபடியும் அந்த வாலிபரை கைது செய்யும்படி உத்தரவிட்டதற்கு அமைய நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மூவர் இந்த வழக்கின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நபர் வெளியில் இருப்பது வழக்கிற்கு பாதகமாக அமையுமென நீதிபதி கருதியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பிற்சாக்கடை குண்டு வெடிப்பில் உண்டான நச்சுப் புகையூட்டத்தில் கடையின் மேற்பகுதியில் இருந்த 28 வயது இளம் பெண்மணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தது தெரிந்ததே.
இதேவேளை வடக்கு சேலன்ட் உல் ஸ்ரெல் கடற்கரைப் பகுதியில் கால் எலும்பும், மண்டையோடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டையோடு மிகமிக பழையது என்றும், பல் வைத்தியம் செய்யப்பட்ட காலத்திற்கு முந்திய பற்களைக் கொண்டுள்ள இந்த மண்டையோடு வீக்கிங் எனப்படும் டேனிஸ் கடற்கொள்ளையர் காலத்தது என்று வைத்தியர் கூறுகின்றனர்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.