Top

தற்போதைய செய்திகள்போலீஸ் விசாரணையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அதிருப்தி

May 31, 2010

பெங்களூரில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ள கருத்து திருப்திகரமாக இல்லை என்று அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆசிரமத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து போலீஸார் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட குழு மோதல் காரணமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறப்படுவது சரியான தகவல் அல்ல.

சம்பவம் குறித்து போலீஸாரிடம் தாமதாக தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் என்ன நடந்தது என்று நாங்கள் உடனடியாக உணரவில்லை. திடீரென ஏதோ சத்தம் கேட்டது. ஆசிரமத்தின் நிர்வாக மற்றும் பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிச்சூட்டை உறுதிபடுத்த சற்று நேரமானது.

மேலும், ஆசிரமம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது. நேற்று மாலை மழையும் பெய்து கொண்டிருந்தது. அதன் பின்னர் போலீஸார் வந்து சேரவும் சற்று நேரமானது.

நான் சீடர்களிடையே எனது உரையை முடித்துவிட்டு காரில் ஏறும்போது வெடிச்சத்தம் கேட்டது. அது பெரிய மரம் விழுந்தது போல அல்லது ஜெனரேட்டர் வெடித்தது போல இருந்தது. அப்போது அந்த வளாகத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் இருந்தனர். எனவே, பீதியை ஏற்படுத்த ஆசிரம பொறுப்பாளர்கள் விரும்பவில்லை.

துப்பாக்கி்ச்சூட்டில் காயமடைந்த பக்தர் நான் இருந்த இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் இருந்தார். பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் தான் இச்சம்பவத்திற்கு காரணம் என்று போலீஸார் கருதக் கூடாது. இதுகுறித்து அவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால், முழுமையாக விசாரிக்காமலே போலீஸார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். இது எனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது.

இவ்வாறு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார்.

2 ஆயிரம் நடனக்கலைஞர்களின் கலைநிகழ்ச்சி

May 31, 2010

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. துவக்க நாளில், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருந்து, பீளமேடு கொடிசியா வளாகம் வரை பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். அலங்கார ஊர்திகளில், கண்ணகி, அய்யனார், அவ்வையார், கோப்பெரும் சோழன், நாச்சியார், பிசிராந்தையார் உள்ளிட்ட சிலைகள் இடம்பெறுகின்றன. இந்த பணி ஜூன் 12ம் தேதிக்குள் முடியும். மாநாட்டுக்கு சில நாட்கள் முன்பு, 2 ஆயிரம் நடன கலைஞர்களுடன் 40 அலங்கார ஊர்திகள் அணிவகுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

செம்மொழி மாநாட்டுடன் இணைந்து தமிழ் இணைய மாநாடு

May 31, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து தமிழ் இணைய மாநாடு கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்க் கணினி கண்காட்சிக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கணினி கண்காட்சி கூட்டம் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கண்காட்சி கூடம் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு, இணையதள வசதியுடன் அமைக்கப்படுகிறது. இதில் 123 அரங்குகளில் மத்திய, மாநில அரசு துறை சார்ந்த 123 இணைய தளங்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்ச் செய்தி மற்றும் பருவ இதழ் இணையதளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் கணினிகள், தமிழ் மின்கருவிகள், தமிழ் பல்லூடக மென்பொருள்கள், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் வலைப்பூக்கள் பயிற்சி அரங்குகள், முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மாநில அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் செய்லபாடுகள், கவர்னர்ஸ் என்ற மின்னாளுமை திட்டத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது பற்றிய செயல் விளக்க அரங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு சார்பில் சி&ஹம்ல்;டெக், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பங்கேற்கிறது. மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தமிழ் மென்பொருள் பயன்பாடுகள் குறித்த நேரடி செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தவிர எச்.சி.எல், டி.சி.எஸ், விப்ரோ ஆகியவற்றின் நவீன மென்பொருள் தொழில்நுட்ப செயல் விளக்க அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்திய மற்றும் தமிழகத்தின் முன்னணி தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் மாநாட்டில் பங்கேற்கின்றன. பார்வையாளர்கள் புரிந்து பயிற்சி செய்து பார்க்கும் விதத்தில் தமிழ் கணினி பயிற்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூர் மற்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தமிழ்க் கணினி மற்றும் மென்பொருள் ஆராய்ச்சி விளக்க அரங்குகள் இடம்பெறுகின்றன.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு யுனிக்கோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி.க்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் பல நிறுவனங்கள் தங்கள் தமிழ் மென்பொருட்களின் சி.டி.க்களை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளன தமிழ்க் கணினி வரலாற்றில் முதல் முறையாக தமிழில் முன்னணியில் உள்ள செய்தி மற்றும் ஊடக இணையதளங்கள், பேப்பர் முறைகள், தமிழில் சிறப்பாக செயல்படும் யுனிகோட் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விவரங்களுக்கு தமிழ்க் கணினி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் 94440 75051 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கூட்டமைப்பும் இந்தியாவிடம் தீர்வு யோசனையை முன்வைக்குமா?

May 31, 2010

எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லிக் கான உத்தியோகபூர்வ விஜயம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி புதுடில்லி செல்லும்போது இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசின் தீர்வுத் திட்டம் ஒன்றை எடுத் துச் செல்கிறார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்வுத்திட்டம் ஒன்றை இந்தியாவிடம் கைய ளிக்குமா என்று அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.

இலங்கையில் 30ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தி அடைந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் யோசனைகளை முன் வைக்குமாறு இந்திய அரசு சமீப காலமாக இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வந்ததன் பின்னணியிலேயே ஜனாதிபதி ராஜபக்ஷவின் முக்கியத்துவம் வாய்ந்த புது டில்லி விஜயம் இடம்பெறுவதாகத் தெரி விக்கப்படுகிறது.

13ஆவது அரசமைப்புத் திருத்தம், மேல்சபை என்று அரசு பல யோசனைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கின்றபோதிலும்

பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் இல்லாத மாகாண சபைகளினால் ஒரு பய னும் இல்லை என்றும்
சமஷ்டி ஆட்சி முறையே இனப்பிரச் சினைக்கான தீர்வு என்றும் மேல்சபையினால் எதுவித பயனும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அதன் யோசனைகள் அமையும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தலில் வெற்றிபெறும் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை நடத்துவேன் என்று ஜனாதிபதி அறிவித்திருந்த போதும் இதுவரை கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை.

இப்படியான நிலையிலேயே ஜனாதிபதியின் புதுடில்லி விஜயம் இடம்பெறுகிறது.
ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் பின்பு பேச்சுக்கான சூழல் உருவாகலாம் என்றும்
சமாதானப் பேச்சுக்குத் தயாராகுமாறு கூட்டமைப்புக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது என்றும் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் கசிந்துள்ளன.

மத்திய அரசிடமே பொலிஸ் அதிகாரங்கள்

May 31, 2010

பொலிஸ் அதி காரங்கள் எப்போதும் மத்திய அரசி டமே இருக்கவேண்டும். மாகா ணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக் கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண் டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

“ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்.
புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறை வையொட்டி “ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார். பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:

கேள்வி: புலிகள் தோல்வியடைந்து ஓராண்டு கடந்துவிட்டது. புலிகள் இயக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தனி ஈழம் அமைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் பல தடவைகள் பேச்சுகள் நடத்த முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மறுத்தனர். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர, வேறு வழி எனக்கு இருக்கவில்லை.

புலிகளின் கதை இன்னும் முடியவில்லை

கே: சரி. இப்போது இது முடிந்த கதையா?

ப: நான் அப்படிச் சொல்லவில்லை. புலிகளின் ஆதரவாளர்களும், உறங்கு நிலையிலுள்ள அனுதாபிகளும் பல நாடுகளிலும் மிகவும் திறமையாகச் செயற்படுகின்றனர். ஆகவே, கதை இன்னும் முடியவில்லை.

கே: இறுதி யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறதே?

ப: இது சரியல்ல. இலங்கை இராணுவம் மிகவும் கட்டுப்பாடுகளோடு செயற்படுகிறது. பொதுமக்களை அது அழிக்கவில்லை. பிரபாகரனின் தாய், தந்தையர் உட்பட பல நெருங்கிய உறவினரும் எமது முகாமில்தான் இருந்தனர். அவர்கள் தாக்கப்படவில்லை என்றால் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்களும் எமது மக்களே!

கே: யுத்தம் முடிந்து 180 நாட்களுக்குள் மூன்று லட்சம் உள்ளூர் அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம் என்று உறுதி கூறினீர்களே?

ப: தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எனக்குத் திருப்தி அளிக்கிறது. முகாம்களிலிருந்த மூன்று லட்சம் மக்கள் தொகை இப்போது 30 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. இவ்வருட இறுதிக்குள் எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றி மிகுதியானவர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம்.

கே: புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைத்ததா?

ப: ஆம். கிடைத்தது. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம்.

கே: இராணுவ ஆதரவா அல்லது தார்மீக ஆதரவா?
ப: (சிரித்துக்கொண்டே) இரண்டும் எங்களுக்குத் தேவையானவை.

கே: சீன இராணுவ உதவிகள் தொடர்கின்றனவா?
ப: இராணுவ ஆயுதம் மற்றும் ஆயுதத் தளபாடக் கொள்வனவு என்பது இராணுவ விடயம். இந்தியாவிடமிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவையும் பெற்றோம். மிகுதியை சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமெரிக்காவிடமிருந்தும் பெற்றோம்.

கே: நீங்கள் ஜூன் 8 இல் இந்தியா வருகிறீர்கள். இதனால் இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடக்கும் இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை புத்துயிர் பெறுமா?

ப: பல விடயங்கள் பரிசீலிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் முக்கிய இடம் பெறும்.

கே: இந்திய மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரம் பற்றி குறை கூறுகிறீர்களே? இது இலங்கையில் அமுல்படுத்த இருக்கும் மாகாண சபைக்கான 13 ஆவது திருத்தத்தை உதறித் தள்ள ஒரு முன்கூட்டிய கண்ணோட்டமா?

ப: இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிடமுடியாது. மும்பையில் நடந்த தாக்குதலை நோக்கும்போது, பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசுடன் இருக்கவேண்டியவை.

கே: உங்களது நெருங்கிய பல உறவினர்கள் உங்கள் நிர்வாகத்தில் இருக்கிறார்களே?

ப: நான் என்ன செய்வது. அண்மையில் நடந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தேவையில்லை என்று தெரிந்தால் அவர்கள் ஓரம்கட்டப்படுவார்கள்.

கே: ஒருநாள் முழுவதும் கடும் வேலைக்குப் பின் எப்படி ஆறுகிறீர்கள்?

ப: இந்திப் படம் பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் சாருக்கானின் படமான “எனது பெயர் கான்’ என்ற படத்தைப் பார்த்தேன். இது மேற்குலகில் முஸ்லிம்கள் படும் இன்னல்களை விவரிக்கின்றது. எம்மை மனித உரிமைகளை மீறுகிறோம் என்று குறை கூறுபவர்களும் இக்குற்றத்தையே தமது சொந்த நாடுகளில் செய்கிறார்கள் என படத்தைப் பார்த்த பின் நினைவில் கொள்கிறேன்.

திமுகவுடன் கூட்டணி, எம்பி சீட் கோரி 2 கடிதங்கள் எழுதிய ராமதாஸ்!

May 31, 2010

திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயார் என்றும், தங்களுக்கு ஒரு ராஜ்சபா சீட் தர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரண்டு கடிதங்கள் எழுதியதையடுத்தே அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க முன் வந்ததாக திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராமதாஸ் எழுதிய கடிதங்கள் திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. பின்னர் பாமகவுடன் கூட்டணி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ராமதாஸின் இந்தக் கடிதத்தின் சாரமும் அதில் இடம் பெற்றது.

இது தொடர்பாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், அதைத் தொடர்ந்து 14-5-2010 தேதியிட்டும், முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதங்கள் இந்தக் குழுவின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வைக்கப்பட்டன. அந்தக் கடிதங்களில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டிருப்பதின் சுருக்கம் வருமாறு:

“2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று பாமக போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின்னர் தங்களது தலைமையில் திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு பாமக தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததுடன், அதற்கான தனது ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தது. அன்று முதல் இன்றுவரையில் எந்தவொரு நிலையிலும் திமுக அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாமக மாற்றிக் கொள்ளவே இல்லை.

இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம் (திமுகவை விமர்சித்தது, அதிமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றது ஆகியவை). நீங்களும் மறந்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் தங்களின் இப்போதைய முயற்சிக்கு பாமக முழு ஆதரவு அளித்து, சட்டப் பேரவையில் நடைபெற்ற மேலவை அமைப்பது குறித்த வாக்கெடுப்பில் திமுகவுடன் இணைந்து வாக்களித்தது. இந்த இணக்கம் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2011ல்) நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம் என்று பாமக சார்பில் உறுதி கூறுகிறோம்.

2006ம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளித்தீர்கள். 2008ம் ஆண்டில் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கடிதங்களில் கூறியிருந்தார்.

டாக்டர் அவரது கடிதத்திலே குறிப்பிட்டுள்ளதைப் போல; 2006 மற்றும் 2008ம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தலுக்குத் தேவையான எம்எல்ஏக்களைப் பெற்றிராத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தனது வாக்குகளை வழங்கி, அடுத்தடுத்து, இரண்டு பேரை ராஜ்யசபா எம்பிக்களாக்கி தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற பண்பாட்டைப் பெற்றிருந்ததை யாரும் மறப்பதற்கில்லை.

அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான், அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக; 1997ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில்; திமுக தோழமையை மதிக்கும் என்பதற்கு உச்சகட்டமாக, முதலில் அளித்த வாக்குறுதி மாறாமல்- தன் கட்சி வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாமல்- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், என்.ஆர்.அப்துல் காதர் ஆகிய மூவருக்கும் ஆதரவளித்து, அந்த மூவரையும் வெற்றி பெறச் செய்து, தோழமைக் கட்சிக்கான நல்லுணர்வு இலக்கணத்தை நிலைநாட்டிய பெருமையும் திமுகவுக்கு உண்டு என்பதை நாடறியும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு சட்டமன்றத்தில் 30 இடங்கள் இருந்தபோதிலும், மற்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென்ற நிலையிருந்தும், 23-1-2004 அன்று மக்களவைத் தேர்தல் நேரத்தில் திமுகழகம் பாமகவுக்கு கொடுத்த உறுதி மொழிப்படி- திமுக அந்த ஒரு இடத்தில் போட்டியிடாமல், 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாமகவிற்கும், 25 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கும் தனது 30 வாக்குகளைப் பங்கிட்டு அளித்து அன்புமணியையும், சுதர்சன நாச்சியப்பனையும் அந்த ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறச் செய்தது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெ. கண்டத்தின் 3 நாடுகளில் அகதா புயல் 93 பேர் பலி

May 31, 2010

அமெரிக்கக் கண்டத்தின் பசிபிக் கடல் பிராந்தியத்திலுள்ள கௌதமாலா நாட்டில், மெக்சிகோ எல்லையில் புயல் தாக்கியது. இதற்கு அகதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயல் காரணமாக கௌதமாலாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக மழை பெய்தது. இதனால் சுமார் 3 அடி உயரத்துக்கு வீதிகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

தலைநகர் கௌதமாலா அருகேயுள்ள சான்அன்டோனியோ பலோபோ நகரில் கடு மையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் வீதிகள் போன்றவையும் மண்ணுக்குள் மறைந்தன.

கோப்பித் தோட்டங்கள் பூமிக்குள் புதைந்து நாசமானது. மேலும் ஸ்வல்லன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரை உடைந்தது. இதையடுத்து வெள்ளம் கிராமங்களில் புகுந்தது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். 70 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் தீவிர மாக நடை பெறுகிறது என கௌதமாலா அதிபர் அல்லாரோ கோலாம் தெரிவித்துள்ளார்.

கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை பெய்ததால் அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டன.

எல்சால்வேடரில் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியானார்கள் இந்தத் தகவலை அந்நாட்டு அதிபர் மாருரிசியோபியூன்ஸ் தெரிவித்தார்.

ஹோண்டு ராவில் ஏற்பட்ட புயல் மழைக்கு சாந்தா அனா நகரில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி ஒருவர் இறந்தார். இந்த 3 நாடுகளிலும் புயல் தாக்கியதில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது

சீபா ஒப்பந்தம் குறித்து அரசு எமக்குத் தெளிவுபடுத்தவில்லை : ஐதேக

May 31, 2010

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள சீபா ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சியான தமக்கு எதனையும் தெளிவுப்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதனையும் குறிப்பிடாமல் மௌனம் காத்து வருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, இதனை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமையும் பொறுப்புமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமல்ல, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கையிலுள்ள பிரதி இந்திய உயர்ஸ்தானிகருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும் சீபா ஒப்பந்த்தின் நகல் ஒன்றைத் தமது கட்சிக்கு வழங்குமாறு அவரிடம் கோரியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஒப்பந்தம் தொடர்பாக தெளிவுபடுத்துவதாக பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார் ஜயலத் ஜெயவர்தன.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு ஜனநாயக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் செயற்படும்போது மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சியை மதிக்காமல் செயற்பட முயற்சிப்பது துரதிஷ்டவசமான செயல் என கொழும்பில இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மிக தீர்க்கமான ஒரு ஒப்பந்தமே இந்த சீபா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திலுள்ள சில விடயங்கள் தொடர்பில் வர்த்தக சமூகத்தினர் மத்தியில் அச்சமானதொரு சூழ்நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர்.

இலங்கைக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமைய வேண்டும் : ததேகூ

May 31, 2010

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு தீர்வுகள் முன்வைக்கப்படுமாயின் அது நியாயத் தன்மையுடையதாக அமையாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தன்னிச்சையான தீர்மானங்களும் அது சார்ந்த திட்ட வரைபுகளும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அது இதுவரையில் நடைபெறாதிருப்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பல வருட காலமாக எதிர்நோக்கப்பட்டும் அரசாங்கங்களினால் இழுத்தடிக்கப்பட்டும் வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் விடயம் ஒளிவு மறைவு கொண்டதாக அமையக் கூடாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்படுகின்ற நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளைத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாகவும் அது திகழ்கின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகும் விடயத்தில் அரசாங்கம் முதலில் எம்மை அழைத்து எமது தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்கள் ஆகியவையே தேசிய இனப் பிரச்சினை உருவாவதற்கும் அது இந்த அளவில் உச்சம் பெற்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பகிரங்கமாக கூறி வந்தார். இதே நிலைப்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புகளும் நிலைப்பாடுகளும் தடம்புரண்ட நிலையில் காணப்படுவதாகவே இருக்கின்றது.

உறுதி மொழிகளும் நிலைப்பாடுகளும் தீர்வாக அமைந்து விடப்போவதில்லை என்பதையும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே தீர்வுகளுக்கான வழி பிறக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பது அதன் தற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பெதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை. அமைச்சர்கள் கூறுவதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அது மட்டுல்லாது தீர்வுத் திட்டம் தொடர்பிலான வரைபொன்றை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்களை முழுமையாக ஆதரிக்கின்ற நாம் எமது மக்கள் தொடர்பிலான விடயங்களில் எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

ஆகவேதான் எம்மை புறக்கணித்துவிட்டு எட்டப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவுடைத் தன்மை கொண்டதாக அமையாது என்பதையும் ஆரம்பத்திலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர திணிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை” என்றார்.

யூன் மாதம் நீரிழிவு பரிசோதனை மாதமாகும்.

May 31, 2010

டென்மார்க் 31.05.2010 திங்கள் மாலை

தமக்கு நீரிழிவு ( சர்க்கரை வியாதி ) இருப்பது தெரியாமலே சுமார் 200.000 பேர் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் 3 எப் தொழிற்சங்கம் சலரோக பரிசோதனை செய்யும் மாதமாக நாளை பிறக்கும் யூன் மாதத்தை தேர்வு செய்துள்ளது. மொத்தம் ஆறு நகரங்களில் இதற்கான சோதனைகளை நடாத்த முடிவு செய்துள்ளது. நீரிழிவு எச்சரிக்கைப் பிரிவில் முக்கியமானவர்கள் வாகனச் சாரதிகளாகும். இவர்கள் அதிகமான நேரம் ஒரேயிடத்தில் இருப்பதால் தேகப்பயிற்சி குறைந்த வகுப்பினராக இருக்கிறார்கள். இவர்கள் இந்தப் பரிசோதனையில் முக்கிய இலக்காக உள்ளதாக 3 எப் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் சலரோக ஆய்வுப் பிரிவுடன் நடாத்திய கலந்துரையாடலில் சரியான முறையில் அடிப்படைக் கல்வி கற்காமல் தொழில் புரியும் ஆண் தொழிலாளரிடையேயும் இது அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என்பன குறித்தும் பரிசோதனையின் போது உரையாடப்படவுள்ளது. நீரிழிவை கண்டு பிடித்து முன்னரே வைத்தியம் செய்வது அவசியம், இல்லையேல் சிறுநீரகம், கண்கள், இரத்தக்குழாயடைப்பு போன்ற பாரிய ஆபத்துக்களில் அது நம்மைத் தள்ளிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கைக்காக இது ஏற்பாடு செய்யப்படுகிறது. பின்வரும் இடங்களில் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

14.06.10 – ஸ்கீவ பஸ் நிலையத்தில் 09.00 – 14.00
15.06.10 – ஓகூஸ் ரயில் நிலையத்தில் 09.00 – 12.00
15.06.10 – வைலை ரான்ஸ்போட் சென்டர் 14.00 – 17.00
16.06.10 – ஊதின்ச ரயில் நிலையத்தில் 09.00 – 16.00
17.06.10 – கூய ரான்ஸ்போட் சென்டர் 09.00 – 16.00
18.06.10 – லங்புய் ரயில் நிலையம் 09.00 – 16.00

Next Page »

Bottom