புலிகளின் தலைவர்கள் சிலர் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளனரா?
September 30, 2009
இலங்கை அரசின் தடுப்புக் காவலில் கொழும்பில் உள்ள புலித் தலைவர்கள் சிலர் ( திலகர், கே.பி, பாலகுமார் மற்றும் யோகி…….???) தமிழர்களின் தேசிய அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல்தீர்வின் கொழும்பு-அமெரிக்கா கூட்டுமுறையில் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகமவும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விளக்கமாக கலந்துரையாடவே சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புலிகளமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறைகளிலுள்ள சந்தேக நபர்கள் விவகாரங்களை அமெரிக்கா கையாளவேண்டும் என்றும் இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.
இதேவேளை செப்டம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட இருந்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற மீறல் அறிக்கையானது கோத்தபாயவின் தலையீட்டைத் தொடர்ந்தே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிறெஸ் அறிக்கை கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.
போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வன்னி மருத்துவர்களையும் பெருமதிப்புக் கொடுத்து கௌரவிக்கவேண்டிய கட்டத்தில், இலங்கையரசு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற வாக்குமூலத்தைப் பெற்றபோது சர்வதேசம் வாய்கட்டி வேடிக்கை பார்த்தது. இதற்குள் பயங்கரவாதத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என அறிவதற்காக இலங்கை சட்டமா அதிபர் அமெரிக்கா பயணமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புக்காவலில் உள்ள சுமார் 15,000 புலிகளையும் சிறப்பு நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணை செய்வதே இலங்கை அரசின் திட்டம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கைத் தலைமையோ தற்போது புதியதொடு முறைப்படி அமைந்த அரசியல் தீர்வுத் திட்டத்துடன் அமெரிக்காவை அணுகுவதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அமெரிக்காவின் பதில் என்ன என்பது இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹொன “வெற்றியீட்டியவர்களை தொந்தரவு செய்யமுடியாது’ எனக் கூறியதில் இருந்து அவர்களின் தாம் கூறுவதை அனைவரும் ஏற்க வேண்டும் என உள்ள மனப்போக்கு புரிகின்றது.
இதற்கிடையில் கொழும்பு-அமெரிக்கா தீர்வு குறித்து இந்தியாவும் கவலை கொள்வதாகத் தெரிகிறது. இந்தியாவை எப்போதுமே விரோதமாகப் பார்த்தார்கள் சிங்களவர்கள், இப்போது ஈழத்தமிழர்களும் அப்படியே பார்ப்பதால் இந்தியாவுக்கு ஏதேனும் சமூக நலன்கள் கிடைப்பதென்பது கடினமாக இருக்கும் எனவும் அவதானிகள் கூறுகிறார்கள்.
சுற்றியுள்ள நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றாலும், இப்போதைய செய்தி உண்மையென்றால், இதுவரை காலமும் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்காகப் போராடிய தேசியத் தலைவரின் வழியில் சென்ற, இப்போது அரசின் பிடியிலுள்ள தலைவர்களில் யார் யார் எமது மக்களுக்கு விரோதமாக அரசு காட்டும் பதவி மோகத்துக்கு மசியப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.
மெரினா கடற்கரையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு
September 30, 2009
மெரினா கடற்கரையில் 2 பெண்களின் உடல் சிக்கியது. பாறைகளுக்குள் உடல்கள் சிக்கிக் கொண்டதால், மீட்க முடியாமல் திணறிய தீயணைப்பு படையினர், இன்று காலையில் உடல்களை மீட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலத்துக்கு நேரே முகத்துவாரத்தில் பாறைகளுக்குள் 2 உடல்கள் சிக்கியிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 3 மணிக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் சென்று உடலை மீட்க முயன்றனர். முடியவில்லை. தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத்துறையினர் படகில் சென்றனர். மாலை நேரங்களில் கடலில் இருந்து கூவம் ஆற்றை நோக்கி நீர் பாயும். அலையும் வேகமாக அடித்ததால், இரு உடல்களும் ராட்சத பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டது. அதனால் 2 உடல்களையும் மீட்க முடியவில்லை.ஒரு சடலம் பெண்ணுடையது என்று தெரியவந்தது. அவருக்கு வயது 45 இருக்கும். ஆனால் மற்றொரு உடல் ஆணா, பெண்ணா என்பது தெரியாமல் இருந்தது.
இதனால் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் நேற்று அடையாளம் தெரியாமல் இருந்த 40 வயது மதிக்கத்தக்கவரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்டவர் பெண். அவர் யார் என்பது தெரியவில்லை.
மற்றொரு உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பாறை இடுக்குகளில் சிக்கி இருந்தது. அதையும் போலீசார் இன்று காலையில் மீட்டனர். இறந்த 2 பேரும் பெண்களும் யார்? இருவரும் உறவினர்களா? சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன
September 30, 2009
இந்தோனீசியா சுமாத்ரா தீவுகளின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
படாங் நகரில் மருத்துவமனையொன்று அடங்கலாக பல கட்டடங்கள் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றில் சிக்கி 21 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
படாங் விமான நிலையத்தின் கூரைப்பகுதியொன்று இடிந்துவிழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்கள் தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கம் 7.6 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது.
பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐ.நா தீர்மானம்
September 30, 2009
பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் பாலியல் வன்செயல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்று கடந்த வருடம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது, இந்தத் தீர்மானம் வந்துள்ளது.
ஏனைய பல கோரிக்கைகளுடன், இந்த தீர்மானம், உலக நாடுகளை இவை குறித்த சர்வதேச சட்டங்களுக்கு ஒத்த வகையில் தமது சட்டங்களை உருவாக்கவும், பாலியல் வன்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை புலன்விசாரணை செய்வதற்கான திறமைகளை பெறுவதற்கு ஏற்றவாறு சிப்பாய்களை ஆட்சேர்ப்புச் செய்து, பயிற்றுவிக்க வேண்டும் என்று கோருகிறது.
சமோவா சுனாமி – நிலமை மோசம்
September 30, 2009
பசுபிக் தீவான சமோவாவில் சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அங்கு மீண்டும் சுனாமி அலைத் தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடிய பூகம்பத்தின் பின்பான பல அதிர்வுகள் உணரப்படுவதாகவும் அது கூறுகின்றது.
குறைந்தது 100 பேர் அங்கு பலியாகியிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூன்று முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து எவரும் தப்பியிருக்க முடியாது என்று தான் அஞ்சியதாக, குறைந்தது முப்பது பேர் பலியான அமெரிக்க சமோவாவின் ஆளுனர் தெரிவித்துள்ளார்
வர்த்தகத் துறையில் ஆன்லைன் விளம்பரங்களின் புதிய பரிணாமம்
September 30, 2009
பிரிட்டனில் இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதகாலத்தில் விளம்பரத்துறையில் செலவு செய்யப்பட்ட பணத்தில் ஏறத்தாழ கால்பங்கு அளவு, உற்பத்திப் பொருட்களின் ஆன்லைன் எனப்படும் இணையவழி ஊடகத்திலான விளம்பரங்களிலேயே செலவிடப்பட்டுள்ளது.
விளம்பரத்துறை சார்ந்த நிறுவனமான த இண்டர்நெட் அட்வர்டைஸ்ட்டிங் பீரோ என்ற இணைய தள விளம்பர முகவர் அமைப்பே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னைய வருடங்களில் இதே காலப்பகுதியில் தொலைக்காட்சி ஊடகத்திலான விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவீனத்தை விட முதற்தடவையாக இணையவழி விளம்பர துறையில் செய்யப்பட்ட செலவினம் அதிகரித்துள்ளமையை அந்த முகவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இணையதளம் சார்ந்த வர்த்தகத் துறை அபிவிருத்தியில் எட்டப்பட்டுள்ள முக்கிய மைல்கல்லென இது கருதப்படுகின்றது.
செல்வந்த நாடுகளில் அதிகமான மக்கள் தகவல் பெற்றுக் கொளவதற்காகவும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட இணையதளங்களிலேயே அதிகளவு நேரத்தை கழிக்கின்றனர் என்ற விடயத்துடன் இன்றைய இந்த விளம்பரத்துறை கொண்டுள்ள நெருங்கிய தொடர்பையே இது காட்டுகின்றது.
பிரிட்டனில் கடந்த ஆறுவருட காலத்தில் உற்பத்திப் பொருட்களை விளம்பரம் செய்வதில் மிக குறைந்தளவு பலனுள்ள ஊடகம் என்ற நிலையிலிருந்து மிக தாக்கமான செல்வாக்குள்ள விளம்பர ஊடகமாக இணையதளம் வளர்ச்சியடைந்துள்ளதாக இணைய தள விளம்பர முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது
கேரளா தேக்கடியில் படகு விபத்து – சுற்றுலா பயணிகள் பலர் பலி
September 30, 2009
கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பிரபல சுற்றுலா மையமான தேக்கடியில் உள்ள ஏரியில் தினசரி மாலை 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படும். அதன்படி, இன்று ஒரு படகில் 74 பயணிகள் ஏறினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அந்தப் படகில் மேல் அடுக்கிலும் பயணிகள் இருந்தார்கள்.
அடர்ந்த வனப்பகுதியான அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பயணிகள் படகில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணக்கப்பாரா என்ற இடத்தில், காட்டு எருமைகள் நிற்பதை சிலர் பார்த்தனர். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், படகின் மேல் அடுக்கில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருபுறமாக சேர்ந்தபோது, நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது.
அதையடுத்து, படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு படகு விபத்துக்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் கிழக்கில் அபிவிருத்திக்குட்படாத கிராமங்கள்
September 30, 2009
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் சில பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்ற வாகரைப் பிரதேசத்திலிருந்து தொலைவாக அமைந்துள்ள கட்டுமுறிவு, ஆண்டான்குளம், மருதன்கேணிகுளம்,கிரிமிச்சை போன்ற கிராமங்களில் எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் பெரும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
வாகரையிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள இந்த கிராமங்களுக்கு சீரான பேருந்து சேவையும் இல்லாதுள்ளதாகவும், மாகாண அமைச்சர்கள் அங்கு சென்று பார்ப்பது கூட இல்லையெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சசிதரன் கவலை தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் குழு ஒன்றினை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை கண்டறிந்து,
தேவையானால் அங்கு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
தொழிற்சங்க கட்டமைப்பு அவசியம் : மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார்
September 30, 2009
தொழிலார் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையுடன் செயற்படுகின்ற தொழிற்சங்கங்களில் தோட்டத் தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதால் தோழிலாளர்கள் ஒருசில தொழிற்சங்கங்கள் மீது தமது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
எனினும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையிலான தொடர்பினைப்பேணுவதற்கும் தொழிலாளர்களின் உரிமைகள் சலுகைகள் என்பனவற்றை நிலை நிறுத்துவதற்கும் தொழிற்சங்க கட்டமைப்பு இன்றியமையாததாகும்.
இதனைக்கருத்திற்கொண்டு தொழிலாளர் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையுடன் செயற்படுகின்ற தொழிற்சங்கங்களைத் தோட்டத்தொழிலாளர்கள் பலப்படுத்த வேண்டும். என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புலி ஆதரவாளர்களுக்குக் குடியுரிமை : சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு
September 30, 2009

புலிகளின் ஆதரவாளர்களுக்குத் தமிழ் நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக இந்திய ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிப் பயங்கரவாதிகள் இலங்கையில் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உலகின் பலபாகங்களிலும் ஒன்றிணைந்து மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்று வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் சட்டவிரோதமான முறையில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்







