ஆந்திர சட்டசபையில் சிரஞ்சீவியுடன் போட்டோ எடுக்க பெண் ஊழியர்கள் போட்டி
July 31, 2009
பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி திருப்பதி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவர் தற்போது சட்டசபை கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்கிறார். அவர் சட்டசபைக்கு வரும் போதெல்லாம் தலைமை செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அவரும் வேறுவழி இல்லாமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். நேற்று மட்டும் 100-க் கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் போட்டி போட்டுக்கொண்டு சிரஞ்சீவியுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் கூறும், போது எங்களுக்கு சிரஞ்சீவி நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவரது படங்களை விரும்பி பார்ப்போம். அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டது பெருமையாக உள்ளது. இந்த போட்டோவை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வீட்டில் வைத்துக்கொள்வோம்” என்றனர்
விலை ஏற்றத்தால் பருப்பு இல்லாத குழம்புக்கு மாறிய ஆந்திர மக்கள்
July 31, 2009
கடந்த சில வாரங்களாக துவரம் பருப்பு விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு 3 மாதங்களுக்கு முன்பு ரூ.60-க்கு விற்கப்பட்டது. பின்னர் மளமளவென அதிகரித்த துவரம் பருப்பு இன்று கிலோ ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் பாசிப்பருப்பு, கடலை பருப்பு போன்ற பருப்புகளின் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
பருப்புகளின் இந்த வரலாறு காணாத விலை உயர்வால் நம்நாட்டில் உள்ள ஏழை- நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் ஆந்திராவில் உள்ள பெரும்பாலான பேர் பருப்பு குழம்புக்கு குட்பை சொல்லிவிட்டு பருப்பு இல்லாத காய்கறி குழம்புக்கு மாறி விட்டனர்.
ஆந்திராவில் நேற்று உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் பல்வேறு பருப்பு குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள துவரம் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாள் வளைவு கட்ட உச்ச நீதிமன்றம் தடை
July 31, 2009
ஜெயலலிதாவின் 57-வது பிறந்தநாளை முன்னிட்டு 2005-ம் ஆண்டு பெரம்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் வளைவு கட்டப்பட்டு வந்தது. பெரம்பலூர்-துறையூர் ரோடு, துரைமங்கலம்-பங்களா ரோடு ஆகியவற்றில் இவற்றை கட்டி வந்தனர். இதை எதிர்த்து அப்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வளைவுகளை கட்ட ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி இப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும், வேறு எந்த பணியும் நடக்கக்கூடாது என்று உத்தர விட்டார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.பி. சின்கா தலைமையிலான பெஞ்சு முன்பு நடந்து வந்தது. விசாரணை முடிந்து அவர்கள் இன்று தீர்ப்பு கூறினார்கள்.
பொது சொத்துக்களில் இதுபோன்ற கட்டிடப்பணிகள் நடக்க அனுமதிக்க முடியாது. இந்த பணிக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை ரத்து செய்கிறோம் என்று கூறினார்கள்.
நடிகை விஜயசாந்திக்கு தெலுங்கானா கட்சி நோட்டீசு அனுப்புகிறது !
July 31, 2009
நடிகை விஜயசாந்தி அவர் சார்ந்திருக்கும் கட்சியின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதால் அவருக்கு நோட்டீசு அனுப்ப தெலுங்கானா கட்சி முடிவு செய்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பொதுச் செயலாளரும் நடிகையுமான விஜயசாந்தியை நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சீனிவாசராவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் விஜயசாந்தியை காங்கிரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்கு விஜயசாந்தி மறுப்பு எதுவும் தெரிவிக்காததால் தெலுங்கானா கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் விஜயசாந்தி கடந்த 2 வாரமாக கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இது கட்சி நிர்வாகிகளுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மெதக் மாவட்ட தெலுங்கானா கட்சி தலைவர் ரகுநந்தன் ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் உள்ள விஜயசாந்தி கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். அவர் தற்போது தெலுங்கானா கட்சியில் இருக்கிறாரா? என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு விஜயசாந்திக்கு நோட்டீசு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தெலுங்கானா கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
கேர்னிங் தமிழ்க்கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்தவர் கைது !
July 31, 2009
டென்மார்க் 01.08.09 சனி காலை.
கேர்னிங் நகரில் பிறல் கொய் அல வழியில் அமைந்துள்ள பல சரக்கு, மரக்கறி, மீன் போன்றவற்றை விற்கும் தமிழ் கடையில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த சுமார் 32 வயது திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட திருடன் கத்தி முனையில் நேற்று வெள்ளி மதியம் 14.00 மணியளவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இவரை மடக்கிப்பிடித்தார் கடை உரிமையாளர். கத்தியை நீட்டியவர் போதையில் இருந்துள்ளார். தற்போதும் சிறைக்கொட்டடியில் உறங்கிக் கொண்டிருக்கும் திருடன் நாளை கண் விழித்ததும் கொள்ளை முயற்சிக் குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். வெள்ளிக்கிழமை மரக்கறி வந்து பட்டுவாடா செய்திருந்த வேளை திருடன் கல்லாப்பெட்டியை குறி வைத்ததால் முன்னரே இக்கடை பற்றி அறிந்த ஒருவரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர் தமிழரல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பதியரை நாய் கடித்துப் பதம் பார்த்தது !
July 31, 2009
டென்மார்க் 01.08.09
சுனயூலன்ட் கொலுண்ட் பகுதியில் தம்பதியர் நாய்களால் கடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்மணி படுகாயமடைந்து பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 37 வயதுடைய இப்பெண்மணியை திடீரென ஓடிவந்த நாய் ஒன்று கடித்தது, அந்த வேகத்தில் அவர் முழங்கால் அடிபட விழுந்தார். அதன் பின்னர் பல தடவைகள் கடித்து இழுத்தன. இப்பெண்மணியின் மார்பகங்களிலும், கையிலும் கடித்த நாய்கள் அவரைக்காப்பாற்றச் சென்ற கணவனின் பின்புறத்தை வாரி இழுத்துள்ளன. போலீசாரின் கருத்துப்படி மூன்று நாய்கள் இவர்களை கடித்திருக்க வேண்டும் என்றும் அவை அமெரிக்கன் பபலோ இன நாய்களாக இருக்கும் என்றும் சந்தேகம் தெரிவித்தனர். இந்த நாய்கள் ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுடையவை. நாய்களின் உரிமையாளர் சட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
அல்ஃபிரட் துரையப்பாவின் 30 ஆவது நினைவுதினம் நேற்று !
July 31, 2009
முன்னால் யாழ் மேஜர் அல்ஃபிரட் துரையப்பாவின் 30 ஆவது நினைவுதினமான நேற்று, துரையப்பா அரங்கிலுள்ள அவரது சமாதிக்கு சிறி லங்கா சுதந்திரக்கட்சியினர் மலரஞ்சலி செலுத்தி வணங்கினர்.
தொழில் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமைச்சர் பியசேனா கமகே, மேற்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் ரெஜினால்ட் கூரே மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் சமாதிக்கு மாலைகள், மலர்களால் அர்ச்சித்து அஞ்சலி செலுத்தினர்.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், யாழ் வேம்படி வீதி, யாழ் நகரிலுள்ள அவர்களது அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றும் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல வருடங்களாக பராமரிப்பின்றி இருந்த அல்ஃபிரெட் துரையப்பாவில் சமாதியை, யாழ் மாநகர சபைத் தேர்தல்களின் பொருட்டு புனரமைப்புச் செய்துள்ளதாக அங்குள்ள மக்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
நிபந்தனைகளுடன் அல்ல இணக்கப்பாட்டுடனேயே நாணயநிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்டது – அரசாங்கம்
July 31, 2009
நிபந்தனைகளுடன் அல்ல இணக்கப்பாட்டுடனேயே நாணயநிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்டது – அரசாங்கம் அறிவிப்பு
கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை. இருந்தபோதிலும், நிதியத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று ஊடகத்துறை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தில் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி உறுப்புரிமை பெற்றுக்கொண்ட இலங்கை 14 தடவைகள் கடனுதவிகளை பெற்றுக்கொண்டுள்ளது. 15 ஆவது தடவையாக 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
அரசாங்கதின் பொருளாதார கொள்கை மற்றும் நிதிபயன்பாடு தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது 7 வீதமாக இருக்கின்ற வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 2011 ஆம் ஆண்டு 5 வீதமாக குறையும் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டாறு தெரிவித்தார்.
சவூதியில் வேலையில்லாமல் தவிக்கும் 400 இந்தியர்கள் குறித்து நடவடிக்கை – கனிமொழி
July 31, 2009
சவூதியில் வேலையில்லாமல் தவிக்கும் 400 இந்தியர்கள் குறித்து நடவடிக்கை – மத்திய அரசுக்கு கனிமொழி வலியுறுத்தல்
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தவித்துவரும் இந்தியாவைச் சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜ்யசபாவில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கோரிக்கையொன்று முன்வைத்துள்ளார்.
இது குறித்து ராஜ்யசபாவில் அவர் பேசுகையில், ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
400 இந்தியத் தொழிலாளர்களும் நாடு திரும்ப சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதற்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
முடிந்தால் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டும் -ஐ.தே.க. சவால்
July 31, 2009
அரசியல் கட்சிப்பிரதிநிதிகளின் பின்னால் சென்று பதவிகளையும் சலுகைகளையும் வழங்கி அரசாங்கத்துக்கு ஆதரவு தேடுவதை விடுத்து, முடிந்தால் பொதுத்தேர்தலை நடத்தி மக்கள் ஆதரவினை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சவால் விடுத்துள்ளார்.
ஐ.தே.க.விலிருந்து யார் வெளியேறினாலும் கட்சியினை அழிக்க எவராலும் முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
18 ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்துடன் அடுத்த வாரம் இணையவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து கேட்டபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவும் பிரபல்யமும் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் ஏன் ஐ.தே. கட்சிக்காரர்கள் பின்னால் சென்று ஆதரவு வழங்க வேண்டுமென பிச்சை கேட்கிறார்கள்.
அதற்காக பதவிகளையும் பட்டங்களையும் லஞ்சமாக வழங்குகிறார்கள். இன்று இந்த அரசாங்கத்தின் இருப்புக்கு யார் காரணம். ஐ.தே. கட்சியிலிருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்தும் ஜே.வி.பி. யிலிருந்தும் பிரித்தெடுத்தவர்களே காரணமாகும்.
அத்தோடு நாடு முழுவதும் ஒரேடியாகத் தேர்தல்களை நடத்தாது கூட்டம் கூட்டமாக நடத்தி அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்தி ஊழல் மோசடிகள் கள்ள வாக்குகள் என அனைத்து மோசடிகளையும் அரங்கேற்றி தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெறுகிறது.






