இலங்கை நிதி-நயனதாரா ரூ 5 லட்சம்
October 31, 2008
இலங்கைத் தமிழர் துயர் துடைக்கத் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு தன் பங்காக ரூ. 5 லட்சத்தை நடிகை நயனதாரா வழங்கியுள்ளார்.
இந்தத் தொகையை வழங்க முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று காலை நயனதாரா சென்றார்.
முதல்வரிடம் நிதியை வழங்கிய நயனதாரா இலங்கைத் தமிழர் துயர் துடைக்க திரையுலகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் தான் பங்கேற்கவிருப்பதையும் முதல்வரிடம் கூறி ஆசி பெற்றார்.
இதற்கிடையே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தமிழ் திரையுலக புள்ளிகள் பலரும் இன்று திரண்டு வந்து நிதி வழங்கினர்.
நெப்போலியன் 5 லட்சமும் குஷ்பு சுந்தர் மற்றும் விவேக் தலா ரூ. 1 லட்சமும் இன்று வழங்கினர்.
யுஎஸ் மனைவி-2 குழந்தைகளை கொன்ற வேலையிழந்த இந்தியர் !
October 31, 2008
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் தனது மனைவ மகள் மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி மாமியார் 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37) மகள் தேஜஸ்வி (14) மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.
திங்கள்கிழமை இவர்களது உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
பல நாட்களாக இந்தக் குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என நெருசுவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தந்தையடுத்து அவர்களது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தாயும் குழந்தைகளும் தலையிலும் கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலையாகிக் கிடந்தனர்.
தந்தையான லட்சுமிநிவாஸராவ் நெருசுவைக் காணவில்லை. அவர் தான் இந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லட்சுமிநிவாஸராவ் சமீபத்தில் தான் வேலையிழந்தார். சமீபத்தில் அவரது காரை கடன் கொடுத்த நிதி நிறுவனம் கைப்பற்றிச் சென்றது.
இதற்கிடையே லட்சுமிநிவாஸராவ் கடந்த 14ம் தேதி இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொலைகளை செய்துவிட்டு அவர் தப்பி வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முன்பு டெக்ஸாசிலும் இலினாய்சிலும் வசித்து வந்த இந்தக் குடும்பம் சமீபத்தில் தான் டெட்ராய்ட் அருகே மிச்சிகனி்ல் அடு்க்கு மாடிக் குடியிருப்பில் குடியேறினர்.
அமெரிக்காவின் எதிர்காலம் ஒபமா – பில் கிளின்டன்
October 31, 2008
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமா அமெரிக்காவின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்தார்.
நீங்கள் புதிய ஜனாதிபதி ஒருவருக்காக தயாராக உள்ளீர்களா? நீங்கள் இந்த புதிய ஜனாதிபதிக்காக (ஒபமாவுக்காக) தயாராக உள்ளீர்களா?” என பில் கிளின்டன் ஆதரவாளர்களிடம் வினவினார்.
இதன்போது அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாபேரும் ஜனாதிபதியாக ஒபமா விளங்குவார் என அவர் கூறினார்
புலிகளின் விமானத்தை அழிப்பதற்கு தந்திரோபாயங்களை கையாள்கிறோம் – அரசாங்கம் தெரிவிப்பு
October 31, 2008
உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர்.
ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம் அரசாங்கத்தினால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்னாரில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்கள் சுமார் ஒன்றரை மணித்தியாலயமாக வானில் பறந்துள்ளது மட்டுமல்லாது சுமார் 300 கிலோமீற்றம் தூரம் பறந்து கொழும்பிற்குள்ளும் வந்துள்ளது. அனுராதபுர விமானத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்களை ஒரு சில விநாடிகளுக்குள் தாக்கியழிக்க முடியுமாயின் அன்று சுமார் 90 நிமிடங்கள் வானில் இருந்த புலிகளின் விமானங்களை ஏன்? அழிக்க முடியவில்லை இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதும் பேசப்பட்டதா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
புலிகளில் பயன்படுத்துகின்ற மிகவும் சிறிய ரக விமானங்கள் உலகத்தில் பூச்சிகொல்லி தெளிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்கியழித்துள்ளனர். எதிரியின் தந்திரோபாயங்களை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதனால் தான் படிப்பதற்காகவும் இவாசிப்பதற்காகவும் கொடுக்கப்பட்ட புத்தங்களுக்குள் குண்டுகளை பொருத்துகின்றனர். இவ்வாறான தொரு நிலையில் எதிரியின் ஏனைய விமானங்களை தாக்கியழிப்பதற்கான வெற்றிகரமான தந்திரோபாயங்களை பாதுகாப்பு தரப்பினர் கையாள்கின்றனர். அந்த தந்திரோபாயங்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது.
தரையில் இருக்கின்ற படையினர் அன்று மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாகவே புலிகள் இலக்கை மாற்றிக்கொண்டனர். அது பாரிய வெற்றியாகும். எதிர்காலத்தில் புலிகளின் பூச்சிகொல்லி விமானமும் தாக்கியழிக்கப்படும் . இவ்வாறானதொரு நிலையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பிணையில் விடுதலையான அமீர் சீமான் ஆகியோருக்கு அமோக வரவேற்பு !
October 31, 2008
மதுரை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இயக்குநர்கள் சீமான் அமீர் ஆகிய இருவரும் இன்று பிணையில் விடுதலையாகினர். அவர்களை இயக்குநர்கள் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 19ஆம் திகதி இராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக இயக்குநர்கள் சீமான் அமீர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இருவரின் சார்பில் பிணை கேட்டு கடந்த 28 ஆம் திகதி இராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இயக்குநர்கள் அமீர் சீமான் ஆகிய இருவரும் சிறையிலிருந்து விடுதலையானார்கள். மதுரை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த அவர்கள் இருவரையும் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து இயக்குநர்கள் பாரதிராஜா பாக்கியராஜ் சேரன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது ஜே.வி.பி.
October 31, 2008
இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும் இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம் !
October 31, 2008
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.
செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
இலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.
இலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.
மேலும் இன மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
தெலுங்கு கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து
October 31, 2008
தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் உதயமான தினமான நவம்பர் 1-ம் தேதியை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மொழியியல் நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும் தெலுங்கு கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து இந்த முடிவு அமலாகும் என்று அம்பிகா சோனி தெரிவித்தார்.
அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஏற்கெனவே செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவின் பிற மொழிகள் எதற்கும் அந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இளம்புயல் திரைப்படத்திற்காக யூலன்ட்போஸ்டன் சிறப்புக் கட்டுரை எழுதி ஆதரவு !
October 30, 2008
டென்மார்க்கின் பிரபலமான பத்திhகைகளில் முதன்மையானதாக விளங்கும் யூலன்ட் போஸ்டன் பத்திரிகை இளம்புயல் திரைப்படம் தொடர்பாக விசேட கட்டுரை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் தமிழர் அதிகமாக வாழும் கேர்னிங் நகரத்தில் ஐஸ் கொக்கி விளையாட்டரங்கு புகழ்பெற்றுள்ளது, அதுபோல துணி உற்பத்தி புகழ்பெற்றுள்ளது. இப்போதோ சினிமா தயாரிப்பிலும் கேர்னிங் புகழ் மிக்க நகராக மாறியிருப்பதாக போற்றி எழுதியுள்ளது. இந்தத் திரைப்படம் டென்மார்க்கில் உள்ள பல்வேறு இனங்களையும் இணைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அரசின் இணைவாக்க கொள்கைகள் குறித்த கருத்துக்களையும் கொண்டுள்ள இப்படம் ஒரு ஜேம்ஸ்பொன்ட் பாணியிலான திரைப்படமாகும் என்றும் எழுதியுள்ளது. யூலன்ட்போஸ்டன் வெளியிட்ட கட்டுரையை வாசிக்க விரும்பினால் இங்கே அழுத்தவும்.
http://jp.dk/kultur/film/article1498754.ece
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாவை மிதக்க விடுவதற்கு தீர்மானம் – இலங்கை மந்திய வங்கி அறிவிப்பு
October 30, 2008
இலங்கை மத்திய வங்கி ரூபாயின் நாணயப் பெறுமதியினை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப்பபோவதாக இன்று அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்த இலங்கை மத்திய வங்கி தற்போது ரூபாவின் நாணயமாற்றுப் பெறுமதியை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப் போவதாக இன்று அறிவித்துள்ளது.
இந்த கொள்கை மாற்றமானது அண்மையில் உலக சந்தையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையின் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆண்டு செப்டெம்பர் நடுப்பகுதியிலிருந்து நாட்டின் முக்கிய வர்த்தகப் பங்காளர்கள் போட்டியாளர்களின் நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு எதிராக கூர்மையான பெறுமானத் தேய்வடைந்து நாட்டின் ஏற்றுமதிகளின் போட்டித் தன்மை மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலும் இந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதி துறை 15 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியடைந்து தற்போதைய பாதகமான உலக பொருளாதார நிலைமைக்கு மத்தியிலும் சிறந்த தாக்குப்பிடிக்கும் திறனை காட்டியுள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் ஏற்றுமதிகள் போட்டித் தன்மை வாய்ந்ததாக தொடர்ந்து விளங்குவதற்கு மேலதிக உதவிகளை வழங்க வேண்டியுள்ளது.
அத்தோடு தற்போதைய உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளிநாட்டு செலாவணிகள் மற்றும் ரூபாச் சந்தைகள் ஆகிய இரு நிதியியற் சந்தைகளில் உறுதிப்பாட்டை பேணுவதற்குத் தேவையான முக்கியத்துவத்தை மத்திய வங்கி இனங்கண்டுள்ளது.
இதனடிப்படையில் சகல ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போட்டிக் கைத்தொழில்களுக்கிடையே இலங்கை ஏற்றுமதி போட்டித் தன்மையை பேணுவதற்கும் உண்மைத் துறையை இயலச் செய்வதற்கும் மத்திய வங்கி இலங்கை ரூபாவின் பெறுமதியை மிதக்க விடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் செலாவணி வீதம் உத்தரவாதமளிக்கப்பட்டதை விட கூடியளவு தளம்பலுறும் போக்கை கொண்டிருப்பதால் நிதியியல் சந்தையில் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு மத்திய திரவத் தன்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.









