உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
August 31, 2008
நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழகத்தை இருளில் தள்ளிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. மின் நெருக்கடியை சமாளிக்க முடியாத இந்த அரசு சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை தற்போது தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அறிவிக்கப் படாத மின்வெட்டு’ என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.
அரசு சொல்லும் 2வது காரணம் நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை? தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
மூன்றாவதாக கூறப்படும் காரணம் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள் குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.
காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல் புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.
நான்காவதாக கூறப்படும் காரணம் பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
இன்னும் சில காரணங்களான குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும் மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது’ போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சட்டசபையை கலைக்க வேண்டும் முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால் மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வன்னேரி வல்வளைப்புக்கு நான்கு நாட்களாக மேற்கொண்ட முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி 60 பேர் காயம்
August 31, 2008
வன்னேரியை வல்வளைப்புச் செய்ய சிறிலங்காப் படையினர் நான்கு நாட்களாக மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 60-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். வன்னேரிப் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் கடந்த நாட்கள் வரையான நான்கு நாட்களில் சிறிலங்காப் படையினரின் கொமாண்டோ அணிகள் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். நான்கு நாட்களாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்பில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 60-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.
சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்யம் கட்சியைப் பதிவு செய்ய இருந்த தடை நீங்கியது.
August 31, 2008
பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தவர் வாபஸ் பெற்றதால் சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்யம் கட்சியைப் பதிவு செய்ய இருந்த தடை நீங்கியது.
சிரஞ்சீவி கடந்த 26ஆம் தேதி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து கட்சியைப் பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அதே பெயரில் ஏற்கனவே சென்ன கிருஷ்ணா என்பவர் விண்ணப்பித்திருந்ததால் சிரஞ்சீவியின் கட்சிப் பெயரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்ன கிருஷ்ணா தேர்தல் ஆணையத்தை அணுகி தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக கூறி மனு செய்தார். இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியின் பிரஜா ராஜ்யம் பெயரை பதிவு செய்ய வழி பிறந்தது.
முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
August 31, 2008

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.
அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.
அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.
வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.
அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.
வெனீஸ் திரைப்பட விழாவில் மச்சான் !
August 31, 2008
வெனீஸ் நகரில் நடந்து வரும் திரைப்பட விழாவில் இவ்வாரக் கடைசியில் காண்பிக்கப்படுகின்ற ஒரு திரைப்படமான மச்சான் வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பில் உருவான மிகச் சில இலங்கைத் திரைப்படங்களுள் ஒன்று.
ஜெர்மனியில் குடியேறவேண்டும் என்பகிற உண்மை உள்நோக்கத்துடன் இருக்க ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவது என்ற போர்வையில் அந்நாட்டுக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் பற்றிய உண்மைச் சம்பவம்தான் இந்த படத்தின் கதை.
திரைப்படத் தயாரிப்பாளர் உபெர்டோ பசோலினியின் பார்வையில் பட்ட ஒரு செய்திக் குறிப்பு கொழும்பை மையமாகக் கொண்டு அவர் ‘மச்சானை’ உருவாக்க காரணமாக காரணமாக அமைந்தது.
இலங்கை இளைஞர்கள் பற்றிய இந்த சம்பவத்தில் நட்பு வாழ்க்கைப் போராட்டம் என பார்வையாளர்களை கட்டிப்போடக்கூடிய ஒரு நல்ல கதைக் கரு இருக்கிறது என்று பசோலினி உணர்ந்திருந்தார்.
தங்களுடைய தாய்நாட்டைத் துறந்து வெளிநாடு சென்று ஒரு மேம்பட்ட வருமானம் ஈட்டுகிற ஒரு வாழ்க்கையை இளைஞர்கள் தேடும் நிலைக்கு தள்ளப்படுவது குறித்த ஒரு பார்வையை இலங்கை தாண்டியும் இப்படம் ஏற்படுத்தும் என்று உபெர்டோ பசோலினியும் மஹேந்திர பெரேராவும் நம்புகிறார்கள்.
அனைவருக்கும் துரோகம் செய்தவர் கருணாநிதி தான் என்கிறார் நெடுமாறன் !
August 31, 2008
காமராஜருக்கும் எம்.ஜி.ஆருக்கும் மூப்பனாருக்கும் நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார். அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.
பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.
1969ஆம் ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் இது பாராளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.
அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவரும் அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவரும் கருணாநிதியே.
1996ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.
மேலும் 1983ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி ஆனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புரட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்
இளம்புயல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா டென்மார்க்கில் 30.08.08 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
August 31, 2008
டென்மார்க் 01.09.08 திங்கள் அதிகாலை.
இளம்புயல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா டென்மார்க் கலாச்சார இல்லத்தில் நேற்று முன்தினம் 30.08.08 சனிக்கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. டென்மார்க்கில் தமிழர்கள் புலம் பெயர்ந்த 25 வது ஆண்டு நிறைவு விழா நினைவுகளை சுமந்து உணர்வோடு நடைபெற்றது. டென்மார்க்கில் உள்ள இசை, படைப்பிலக்கியம், நடனம், நாடகம், சினிமா உள்ளிட்ட சகல கலைத்துறைகளும் சார்ந்த பிரபல கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த வெளியீட்டு விழாவை நிகழ்த்தினார்கள். Read more
டென்மார்க்கில் வாகனப் போக்குவரத்து இரண்டு வீதத்தால் அதிகரிப்பு !
August 31, 2008
டென்மார்க் 01.09.09 திங்கள் அதிகாலை.
சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு டென்மார்க்கில் உள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து சுமார் இரண்டு வீதத்தால் அதிகரித்துள்ளது. பயணிகளின் தொகை இந்த ஆண்டின் அரைப்பகுதியில் ஏழு வீதம் அதிகரித்துள்ளது என்று டேனிஸ் போக்குவரத்துப் பிரிவான டி.எஸ்.பி தெரிவித்துள்ளது. ரயில் வண்டிகளில் பயணிப்போர் தொகை 1.3 வீதமே இந்த ஆண்டு முதல் பகுதியில் அதிகரித்தது. பின்னர் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றம் காரணமாக அரச போக்குவரத்து வாகனங்களில் பயணிப்போர் தொகை பெரியளவில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு காலப்பகுதியில் ரயில் வண்டிகள் தாமதமாக வந்த காரணத்தால் பயணிகள் அதில் செல்ல பெரியளவில் விரும்பவில்லை. ஆனால் இப்போது சரியான நேரத்தில் வருவதனால் காரைவிட ரெயில் வண்டியையே கூடுதல் பட்சம் விரும்புவதாக போக்குவரத்து ஆய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு முதல் பகுதியில் 93.1 வீதமான ரெயில் வண்டிகள் நேரம் தவறாமல் வந்து சாதனை படைத்துள்ளதாக டி.எஸ்.பி இயக்குநர் சோன் எரிக்சன் தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் ரமடான் பண்டிகை ஆரம்பம் !
August 31, 2008
டென்மார்க் 01.09.09 திங்கள் அதிகாலை.
முஸ்லீம்களின் ரமடான் பண்டிகை இன்று திங்கள் ஆரம்பிக்கவுள்ளதால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் கொள்வனவு அதிகரித்துள்ளதாக டென்மார்க் பேர்ளின்ஸ்க ரிதின எழுதியுள்ளது. கடைகள் பூட்டப்பட்டு, நோன்பு இருந்து இஸ்லாமிய உலகம் பெரும் பரபரப்பான காலத்தில் இருப்பதால் இப்பருவத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளும் தாக்குதலை முடுக்கி விடலாம் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் போலீசார் பல புதிய சோதனைச் சாவடிகளை அமைத்து வீதிவீதியாக சோதனைகளை நடாத்த ஆரம்பிக்கிறார்கள். இதுபோல ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளிலும் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளன. டென்மார்க்கில் உள்ள முஸ்லீம்களும் ரமடான் பண்டிகையை பெருமெடுப்பில் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் இஸ்லாமியர் ரமடானை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரவிடுமுறை டென்மார்க்கின் படுகொலைகள் பட்டியல்!
August 31, 2008
டென்மார்க் 01.09.09 திங்கள் அதிகாலை.
நேற்று தனது கணவனை கத்தியால் ஒரே குத்தில் குத்திக் கொலை செய்த 49 வயதுடைய பெண்மணி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 57 வயதுடைய கணவர் ஒரே குத்தில் உயிர் விட்டார். கத்திக்குத்து விழுந்ததும் இவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் அவசரமாக வைத்தியசாலை எடுத்து செல்லப்பட்டபோது வழியில் மரணித்தார். இது இவ்விதமிருக்க ஞாயிறு காலை 18 வயது இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேகத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டார். இவர் மீது நடாத்தப்பட்ட விசாரணையின் போது குற்றத்தை அடியோடு மறுத்துவிட்டார். விதோவ்ற நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் இச்சம்பவம் நடைபெற்றது. முதலில் 18 வயது நபருக்கு மூன்று தடவைகள் குசினிக்கத்தியால் குத்திய சந்தேகநபர், பின்னர் ஒரு 19 வயது நபருக்கு ஒரு தடவை குத்தியுள்ளார். சந்தேகநபர் 26 தினங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கில் இந்த ஆண்டு 23 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 15 பேர் கத்திக்குத்தால் மடிந்துள்ளனர். சென்ற ஆண்டைவிட இது அதிகமான தொகையாகும். எவ்வளவோ நவீன ஆயுதங்கள் வந்தாலும் கத்திக்குத்து கொலைகளை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாகி வருகிறது.










