Top

கெல தொனிங் சிமித்தை முந்தினார் வில்லி சிவிண்டேல் !

February 29, 2008

sf.jpgஎஸ்.எப். கட்சிக்கு தொடர்ந்து அங்கத்தவர் தொகை அதிகரித்து, அக்கட்சி தற்போது டென்மார்க்கின் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. அதேவேளை நேற்று வெளியான கற்றிநெற் ஆய்வுப்படி எஸ்.எப்.தலைவர் வில்லிசிவிண்டேல் சோசல் டெமக்கிரட்டி கட்சித் தலைவி கெல தொனிங் சிமித்தை முந்திச் சென்றார் என்றுள்ளது. தற்போது கெல தொனிங் சிமித் தன்னுடைய செல்வாக்கை இழந்து செல்கிறார். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் வில்லி சிவிண்டால் முதன் நிலை வகிக்கிறார். சோசல்டெமக்கிரட்டி கட்சியில் கூட மூன்றுக்கு இரண்டுபேர் வில்லி சிவிண்டேலே சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கருதுகிறார்கள். வில்லி சிவிண்டேல் சென்ற ஆண்டும் பாராளுமன்றில் அதிக கேள்வியை கேட்ட ஒருவராக இருக்கிறார். ஆனஸ்போ அன் கம்பனியை கொல கொலக்க வைக்கும் கேள்விகள் பலதைக் கேட்டுள்ளார். அரசியலில் நேரத்திற்கு ஒன்று பேசாது பேசினால் சரியானதை பேசுகிறார் என்ற பாராட்டை இவர் பெற்றுள்ளார். கெல தொனிங் சிமித்தைவிட வில்லி சிவிண்டேல் சிறந்த தலைவர் என்று சோசல் டெமக்கிரட்டியில் 69 வீதமானவர் கருதுகிறார்கள். நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவரில் 79 வீதமானவர்கள் கெலவை விட வில்லி சிலிண்டாலே ஆற்றல் உள்ள தலைவர் என்கிறார்கள். முகமது கேலிச்சித்திர பிரச்சனை உருவானபோது கெல நடந்த முறை, கருத்துக் கூற தடுமாறியது, தேர்தலில் தோல்வியடைந்ததும் இப்போது நான் தேர்தல் என்றால் என்னவென புரிந்துவிட்டேன் என்று கூறியது போன்ற ஆளுமைக் குறைவுகளே ஆனஸ்போ இன்று பதவியில் இருக்க முக்கிய காரணம் என்பது பலர் கருத்தாகும். வில்லி சிவிண்டால் தனது திறமையால் முன்னேறினார் என்று கூறுவதைவிட கெல தொனிங்கின் திறமைக் குறைவினாலேயே முன்னேறினார் என்ற உண்மையை கற்றிநெற் கண்டு பிடிக்க மேலும் சில காலம் ஆகலாம்.

படப்பிடிப்பில் பாக்யராஜ் மகன் சாந்தனு காயம் !

February 29, 2008

bakyaraj.jpg மோசர்பியர் நிறுவன தயாரிப்பில் டைரக்டர் கம் நடிகர் கே.பாக்யராஜ் இயக்கும் படம் புதி<ய வார்ப்புகள். இந்த படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனுதான் ஹீரோ. ஹீரோயினியாக புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்தில் சூட்டிங் கடந்த வாரம் பழனி அருகேயுள்ள கிராமப்புறங்களில் நடந்தது. ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்தபோது சாந்தனுவுக்கு முதுகில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் மேற்கொண்டு நடிக்க முடியாத நிலையில் டாக்டர் வரவழைக்கப்பட்டார். சாந்தனுவை பரிசோதித்த டாக்டர் ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு கூறி விட்டாராம். இதனால் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பேக்அப் சொல்லி விட்டாராம் பாக்யராஜ்.
 

தசாவதாரம் ஆடியோ வெளியீடுக்கு ரூ.10 கோடி செலவழிக்க திட்டம் !

February 29, 2008

kamal2.jpg கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்ட படம் தசாவதாரம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் ரீலிஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.மார்ச் முதல் வாரத்தில் ஆடியோ வெளியிடப்படும் என்று முதலில் கூறப்பட்டது.இந் நிலையில் ஆடியோ வெளியீடு குறித்த முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. ஏப்ரல் 2ம் தேதி ஆடியோ வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள ஆஸ்கார் நிறுவனம், ஆடியோ வெளியீடுக்காக மட்டும் ரூ.10 கோடியை செலவழிக்க திட்டமிட்டுள்ளதாம். இதில் ஜாக்கிசானுக்கு மட்டும் ரூ.5 கோடி செலவிடப்படுகிறதாம். அவர் சென்னை வந்து செல்வது வரை அனைத்து செலவுகளையும் ஆஸ்கார் பிலிம்ஸ்தான் செய்யவுள்ளது. இதை பத்தால் பிரித்தால் உண்மைத் தொகை வரும் என்று நினைக்கிறீர்களே குசும்புக்காரர்தான் போங்கள். 
 

நான் பெற்ற பிள்ளையை தூற்றும் பிரகலாதன் தயாநிதி மாறன்மேல் கலைஞர் கடும் தாக்குதல் !

February 29, 2008

kalaigar2.jpg 
.
 
அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்; வசைமாரி பொழிகின்றார்’ என்று அவரை மிக கடுமையாக சாடியுள்ள கருணாநிதி திராவிட இயக்க தருவை வீழ்த்த நினைத்தால் கண்ணில் விரலை விட்டு ஆட்ட கழக பாசறை வீரர்கள் உண்டு என எச்சரித்துள்ளார்.
.
முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் மறைந்த முரசொலிமாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.  சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்திற்கும் ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் போலீசார் எஸ்சிவி கேபிள்  டிவி ஆபரேட்டர்களை கடத்திச் சென்று மிரட்டுவதாக அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து இது பற்றி அவரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. கேபிள் டிவி பிரச்சனையில் தனக்கும் தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்ப தாகவும் அதனால் தங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சோனியாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தயாநிதி மாறனுக்கு முதலமைச்சர் கருணாநிதி  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலி நாளிதழில் அவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையில் “நான் பெற்ற பிள்ளையை தூற்றும் பிரகலாதன்’  என்று தயாநிதிமாறனை பெயர் குறிப்பிடாமல் முதலமைச்சர் கருணாநிதி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.

தோளில் தூக்கி வளர்த்த மாறன் சகோதரர்கள் திமுகவுக்கு எதிராக செயல்படுவது குறித்து குறிப்பிட்டுள்ள கருணாநிதி  திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு  அலைந்தால் அவர்களது கண்ணில் திமுகவினர் விரலை விட்டு ஆட்ட நேரிடுமென எச்சரித்துள்ளார்.

தயாநிதிமாறனுக்கு எச்சரிக்கை விடுத்து கருணாநிதி எழுதியுள்ள கவிதை வருமாறு:
நாடு போற்றிய நல்லறிவாளனே
ஏடு புகழ் என்னருங் கண்மணியே!
தோகாவில் திறன்காட்டி இந்தியத் திருநாட்டின் கீர்த்தி
தொல் புவியில் நிலைநாட்டியவனே!
இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;
“இத்தனைக்கும் காரணம் இந்த மாமன் தான்’ என்று;
எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்
இறுதி வாசகமாய் “நான் உங்கள் வளர்ப்பன்றோ’ என்று
அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி
நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக
ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே ஆரமுதே!
தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!
மகனே ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற
மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;
தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்
தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;
வசைமாரி பொழிகின்றார்
மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி
மறையாமல் காப்பதற்கும்  இந்தத் தமிழ்
மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்
கண்ணில் விரலை விட்டு ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்
எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை
எச்சரிக்கையாகக் கொண்டு!

எனக்கு வயது 32 ஆனால் 45 வயது பாத்திரத்தில் எப்படி நடிப்பது சிம்ரன் கேள்வி!

February 29, 2008

simran6.jpgசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக “குசேலன்’ படத்தில் நடிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு நடிகை சிம்ரன் பதில் அளித்துள்ளார்.
.
பிரமிட் சாய்மீரா குழும நிறுவனங்களில் ஒரு அங்கமான பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் என்னும் நிறுவனம் சின்னத்திரையில் கால்பதித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சிம்ரனை கதாநாயகியாக கொண்டு “சிம்ரன் திரை’ என்ற கதை தொடரை தயாரித்துள்ளது.

ஜெயா டிவியில் வரும் மார்ச் 3ந் தேதி முதல் இந்த சிம்ரன் திரை தொடர் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த தொடர் ஒளிபரப்பாகும். மாதம் ஒரு கதை என 12 மாதங்களுக்கு 12 கதைகளை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.

முதல் கதையாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய “வண்ணத்துப்பூச்சி’ என்ற சிறுகதை படமாக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ளார்.  இரண்டாவது கதையான “புது அம்மா’ என்ற தொடரை அகத்தியன் இயக்குகிறார்.

தொடரின் முகப்பு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். சினிமா பாணியில் நடன இயக்குனர் தினேஷ் நடனத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த சிம்ரன் திரை நிகழ்ச்சி அறிவிப்பு விழாவில் பிரமிட் சாய்மீரா குழுமத்தின் நிர்வாக  இயக்குனர் பி.எஸ்.சாமிநாதன் முதன்மை செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாசன் கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட் ஜெயா டிவியின் முரளிராமன் பாலசுவாமிநாதன் இயக்குனர்கள் அகத்தியன் சமுத்திரகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை சிம்ரனிடம் சில  கேள்விகளை கேட்டதற்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:

“சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது ஒரு சில குடும்ப காரணங்களுக்காக அதில் நடிக்க முடியாமல் போனது. தற்போது மீண்டும் “குசேலன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இம்முறை சிம்ரன் திரை தொடரின் கால்ஷீட் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு இருந்ததால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் சிம்ரன் இடம் இன்னும் காலியாக இருப்பதாக நீங்கள் கூறுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நடிக்கும் இளம் நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடிக்கிறார்கள். குறிப்பாக சொல்வதென்றால் த்ரிஷா அசின் ஸ்ரேயா ஆகியோர் நன்றாக நடிக்கின்றனர்.

அதிக சம்பளம் கேட்பதாலேயே பட வாய்ப்புகள் குறைவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 40 வயது 45 வயது பாத்திரங்களில் நடிக்கும் படி என்னை அணுகுகிறார்கள். 32 வயது தான் எனக்கு ஆகிறது. நான் அந்த வேடத்தில் நடித்தால் கூட முகத்தின் முதிர்ச்சியற்ற தன்மை அதற்கு பொருந்தாது. இதனாலேயே பல படங்களை நிராகரிக்கிறேன்.

பெரியத்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்தது மாற்று குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. 1995ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியில் தான் நான் அறிமுகமானேன். தொடர்ந்து சினிமாவில் நடித்தேன்.

நடிப்பதற்கு வாய்ப்புள்ள களம் எது என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர அது பெரியத்திரையா சின்னத்திரையா என்று பார்க்கக் கூடாது.

மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதில் அளிக்க முடியும். ஆனால் நாளை நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை அழிக்க அரசு ஊழியர் உதவவேண்டும் மகிந்த – அரச ஊழியருக்கும் வருகிறது ஆப்பு !

February 29, 2008

mahinda.jpgஅரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவதை போல பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வருமான வரி திணைக்கள அதிகாரிகள் முகம்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக அந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். எனினும் அரச ஊழியர்களின் பங்கு அளபறியது இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான நடவடிக்கைக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

வருமான வரி திணைக்கள ஆணையாளர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஓய்வு பெற்று செல்லவிருப்பதனால் அந்த வெற்றிடத்திற்கு அனுபவமிக்க ஒருவரை நியமிக்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். கடந்த வருடங்களில் நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் வருமான வரி திணைக்களத்தின் பங்கு அளப்பறியதாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

முப்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத பிடிக்குள் சிக்கி தவிக்கின்ற வடக்கு கிழக்கு மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திகொடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல அரச சேவையை கட்டியெழுப்புவதற்காக கடந்த சில வருடங்களாக அரசாங்கம் பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது எனினும் சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அத்துடன் அரச திணைக்களுக்கு முக்கியஸ்தர்களை நியமிக்கின்ற போது அரசாங்கம் மிகவும் அவதானமாக இருப்பதுடன் நியமனம் வழங்குகின்ற போது தகுதி மற்றும் சிரேஷ்ட தன்மை கட்டாயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
 

சார்க் மாநாடு கண்டியில் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன-அநுர பிரியதர்ஷன யாப்பா

February 29, 2008

kandy-sark.jpg   கண்டியில் இவ்வருடம் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டையொட்டி மாநகரின் அனைத்து வீதிகளையும் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்றது. கண்டி மாநகரின் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஒப்பந்தக் காரர்களுக்கு ஒப்படைப்பது குறித்து பெருந் தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

15 ஆவது சார்க் உச்சி மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 02 ஆம் திகதி வரை கண்டியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் கண்டியிலுள்ள முக்கிய பாதைகள் அனைத்தும் புனரமைக்கப்படவுள்ளன.

பல்லேகலே பௌத்த மத்திய நிலையத்தின் நுழைவாயில் பாதை கண்டி வாவியைச் சுற்றியுள்ள பாதைகள் கண்டியிலிருந்து குண்டசாலை வரையிலான பாதை முக்கிய ஹோட்டல்களுக்கான நுழைவாயில் பாதை கண்டியிலிருந்து கடுகஸ்தொட்டை வரையிலான பாதை மற்றும் கண்டி நகருடன் தொடர்புபட்ட அனைத்துப் பாதைகளும் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்தச் செலவு ஒரு பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

படையினர் புலிகள் முகமாலையில் மோதல் !

February 29, 2008

srilanka3.jpgயாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற மோதலின் போது புலிகளின் 8 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும் 5 புலிகள் பலியாகியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான உடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதேவேளை இன்று அதிகாலை 12.20 மணியளவில் மன்னார் மடு சந்திப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இம் மோதலை அடுத்து இராணுவத்தினரால் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கிளேமோர் குண்டுகள்8 ரீ56 ரக துப்பாக்கிகள் 2 மகசின்கள் 7 போன்ற ஆயுதங்களே மீம்கப்பட்டுள்ளன என்றும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
 

மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் பிரதேசத்தில் 25 தமிழ் இளைஞர்கள் கைது !

February 29, 2008

srilanka-3-singala.jpgமட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் கரையோர பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் தளவாய் மற்றும் ஐயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் தளவாய் கரையோர கிராமத்தில் அமைந்துள்ள காடு ஒன்றில் பன்றிகள் பிடிப்பதற்காக சென்றிருந்தவேளையில் அங்கு சென்ற இராணுவத்தினர் அப்பிரதேசங்களை சுற்றிவளைத்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் இளைஞர்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பிரகாரம் பொலிஸாரால் இவர்கள் தொடர்பில் நேற்று விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் இவர்களின் பெருவிரல் அடையாளத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
 

தீவிரவாதிகள் வலை விரிக்கலாம் பிரிட்டன் இளவரசர் ஆப்கான் போர்க்களத்தில் இருந்து திருப்பப்பபடவுள்ளார்.

February 29, 2008

harry.jpg பிரிட்டன் இளவரசர் ஹரி ஆப்கான் போர்க்களத்தில் கடந்த பத்து வாரங்களாக பணியாற்றிய செய்திகள் கசிந்துள்ளன. அதைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமென கோரியிருந்தன. இஸ்லாமிய சகோதரர்கள் இதில் ஈடுபட வேண்டுமெனவும் இது அல்லாவின் கட்டளையெனவும் எழுதியிருந்தன. இந்த நிலையில் இளவரசர் ஆப்கான் களத்தில் நிற்பது பிரிட்டன் படைகளுக்கு பாரிய சிக்கலாக அமையும் என்று கருதி அவர் திருப்பி அழைக்கப்பட இருக்கிறார். இவர் இளவரசர் சாள்ஸ் – டயானா தம்பதியரின் இரண்டாவது புதல்வராவார். முன்னர் இவர் ஈராக்கிய போர்க்களம் செல்வார் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது தெரிந்ததே. இளவரசர் போர்க்களத்தில் மற்றய வீரர்களுக்கு முன்னுதாரணமாக நடந்தார் என்று பிரிட்டன் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இளவரசர் உதைபந்தாட்டம் ஆடுவது, சிறிய பாத்திரம் ஒன்றில் உணவு உண்பது, கவச வாகனத்திற்கு அருகில் நிற்பது, துப்பாக்கியுடன் ஓடுவது போன்ற ஒளிப்படங்கள் தொலைக்காட்சியில் வெளியாகின. இளவரசர் போர்க்களத்தில் இருப்பதை ஊடகங்கள் மறைத்தது எப்படி, இப்போது எப்படி வெளிவந்தன என்பன போன்ற வாதங்கள் வரும் நாட்களில் வரவுள்ளன.
 

Next Page »

Bottom