Top

அணை கட்டிய ரஜினி

October 16, 2014

c5

‘லிங்கா’ படத்தின் வேலைகள் வேகமாக முடிந்து வருகிறது. இப்படத்தை விரைவில் முடிக்க விரும்பும் ரஜினிகாந்த், அதற்காக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சுறுசுறுப்பாக டப்பிங் பேசி இளம் நடிகர்களையே திகைக்க வைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய சில தகவல்களை ‘லிங்கா’ படக் குழுவினரிடம் இருந்து சேகரித்தோம். அவற்றில் சில…

# ‘லிங்கா’வில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வருவது போல ஒரு வேடத்திலும், தற்கால தாதாவாக மற்றொரு வேடத்திலும் ரஜினி நடித்துள்ளார்.

# ‘லிங்கா’ படத்தின் கதையைப் பற்றிக் கேட்டால், “இப்படத்தில் ஒரு அணைப் பகுதியில் அடிக்கடி விபத்து, கொலை, கொள்ளைகள் நடக்கிறது. அந்த அணையைக் கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று அஞ்சி மக்கள் அவரைத் தேடுகிறார்கள். அந்த அணைப் பகுதிக்கு வரும் தாதா ரஜினி, அணைப் பகுதியில் இருக்கும் கொள்ளைக் கூட்டம்தான் இவை அனைத்தையும் செய்கிறது என்று கண்டுபிடிக்கிறார். கொள்ளைக் கூட்டத்தை அவர் ஒழித்தாரா… அணையைக் கட்டிய ரஜினி என்னவானார் என்பதுதான் படம்” என்கிறார்கள் படக்குழுவினர்.

# சுதந்திரத்துக்கு முன்பு வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், தற்கால ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்திருக்கிறார்கள். தற்போது ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா பங்கேற்கும் ஒரு டூயட் பாடலை படமாக்கி வருகிறார்கள்.

# இப்படத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், கருணாகரன், விஜயகுமார், ராதாரவி என பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பு வரும் காட்சியில் லண்டன் நடிகையான லாரன்.ஜே.இர்வின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

# ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா பங்கு பெறும் பொங்கல் விழா பாடல் காட்சியை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

# இப்படத்தின் இசையை ரஜினியின் பிறந்த நாளன்று வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். படம் பொங்கலில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

# உடல்நிலை நன்கு தேறிவிட்டதால், ‘லிங்கா’ படத்துக்கு பிறகு இமயமலை செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

அனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு

October 16, 2014

c4

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் என்ற புதுமுகம் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், சங்கர் மகாதேவன், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்களும் இப்படத்தில் பாடியுள்ளனர். ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

தீபாவளிக்கு ஏற்கெனவே விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இத்துடன் அனேகன் டீசரும் வெளியாவது ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கலாம்.

கன்னடத்தில் ரீமேக் ஆகும் யாமிருக்க பயமே

October 16, 2014

c3

ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘யாமிருக்க பயமே’. இப்படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி திரில்லராக உருவாகியிருந்த இப்படத்தை டீகே இயக்கியிருந்தார். ராமி ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருந்தார்.

தற்போது ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளது. ‘நமோ பூத ஆத்மா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரூபா மஞ்சரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடிக்கவுள்ளார். மேலும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் ஐஸ்வர்யா மேனன் உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் இப்படம் தனக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார்.

அப்பா சொன்னது இப்போ பலிக்குது! – ஸ்ருதி ஹாஸன்

October 16, 2014

c2

அப்பா சொன்னபடி அன்று நான் கற்றவை இப்போது என் சினிமா கேரியருக்கு உதவுகின்றன என்றார் ஸ்ருதி ஹாஸன். நடிப்பு, பாடல், நடனம், இசை என அனைத்திலும் தேர்ந்த கலைஞர் ஸ்ருதிஹாஸன்.

இவை அவருக்கு அத்தனை சுலபத்தில் வாய்க்கவில்லை.

அனைத்துமே அவர் இளம் வயதில் கற்றவை. இப்போது இவற்றில் எது, எப்படி கை கொடுக்கிறது?

டாணா… சிவகார்த்திக்கேயன் – தனுஷ் மோதலா?

October 16, 2014

c1

சிவகார்த்திக்கேயனின் டாணா திரைப்படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கும் ஹீரோ சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே நடைபெறும் மறைமுக குஸ்தி பற்றிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

மெரினாவில் தொடங்கி சினிமா பயணம், எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என தொடர்ந்தது சிவகார்த்திக்கேயனின் வெற்றிப்பயணம்

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது ‘எதிர்நீச்சல்’ டீம் மீண்டும் ‘டாணா’ படம் மூலம் இணைந்துள்ளது. ஆனால் கதாநாயகிதான் வேறொருவர்.

‘டாணா’ என்பது தமிழ் வார்த்தைதான். இந்த வார்த்தைக்கு காவல் என்று அர்த்தமாம்.

சில்க் ஸ்மிதாவின் கண்கள் ரொம்ப பிடிக்கும்: கார்த்தி

October 15, 2014

c3

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெட்ராஸ்’. இப்படத்தில் இருவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்திருந்தார். அட்டகத்தி ரஞ்சித் இப்படத்தை இயக்கியிருந்தார். வடசென்னையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதில் கேத்ரின், எனக்கு விக்ரம் ரொம்ப பிடிக்கும், அதற்கு கார்த்தி எனக்கும் ரொம்ப பிடிக்கும் என்கிறார். நடிகைகளில் யார் பிடிக்கும் என்று கேத்ரின் கேட்க, அதற்கு கார்த்தி ஷோபா எனக்கு ரொம்ப பிடிக்கும், அவங்க ரொம்ப அழகாக இருப்பாங்க, நம்ம ஏரியா பொண்ணு மாதிரி இருப்பாங்க, ஷோபா ஒரு தேவதை என்று வர்ணிக்கிறார். மேலும் சில்க் ஸ்மிதாவின் கண்கள் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறுகிறார். இதை கேட்ட கேத்ரின், கார்த்தி மீது பொறாமை படுவதுபோல் காட்சியமைத்திருக்கிறார்கள்.

தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் யூடியூப்பில் அதிகமாக பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இளையராஜா

October 15, 2014

c2

கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல்முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.

போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.

சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறார். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்கிறார்

கன்னட படத்தில் பாட்டு பாடும் தனுஷ்

October 15, 2014

c1

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், கவிஞர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருபவர் நடிகர் தனுஷ். இவர் எழுதி, பாடிய கொலவெறி பாடல் தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவையே இவரை திரும்பி பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு இந்தியில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

இந்தியிலும், தமிழிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கும் தனுஷிற்கு, பாடுவதற்குண்டான வாய்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது. இவர் நடிக்கும் படங்களுக்கு சொந்தமாக பாடல் எழுதி, பாடவும் செய்து வருகிறார். இவர் குரலில் வெளிவரும் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன.

இந்நிலையில், கன்னட சினிமாவிலும் இவரது குரலுக்கு ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதனால், தனுஷை கன்னட படமொன்றில் பாடுவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். வஜ்ரகயா என்ற கன்னடப் படத்தில் தான் தனுஷ் இந்த பாடலை பாடவிருக்கிறாராம். சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு அர்ஜூன் ஜன்யா இசையமைக்கிறார்.

தனுஷ் கன்னடத்தில் பாடுவது குறித்து இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா கூறும்போது, பல்வேறு பொது விழாக்களில் தனுஷை சந்தித்துள்ளேன். அவரது கொலவெறி பாடலை பிடித்துப்போய் அவரிடம் வஜ்ரகயா படத்தில் ஒரு பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்று கேட்டேன். தனுஷும் ஒரு பாடலை பாடுவதாக ஒப்புக் கொண்டார். தனுஷ் பாடுவதற்காக இரண்டு விதமான பாடல் வரிகளை எழுதி வைத்துள்ளோம். அந்த இரண்டுமே தனுஷுக்கு பிடித்துப் போனது. இப்போது அதில் எதை கம்போஸ் செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

காதல் கதைகளை வெறுத்து ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்பும் நயன்தாரா

October 14, 2014

c3

நடிகை நயன்தாரா இப்போது ஆக்ஷன் படங்களில் நடிக்கவே விரும்புகிறாராம். வழக்கமான காதல் கதை சம்பந்தமான படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.

சகநடிகையான அனுஷ்கா, வரலாற்று கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’, படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் எடுத்து ஆக்ஷனிலும் இப்படத்தில் கலக்குகிறார். இதேபோல் ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். இந்த படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாகும்.

நயன்தாராவுக்கும் வழக்கமான காதல் படங்களில் நடித்து அலுத்துவிட்டதாம். விஜய்சாந்தி போல் ஆக்ஷன் படங்களில் நடிக்க கதை தேடுகிறார். இதுபோல் சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வப்படுகிறார்.

பூஜைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

October 14, 2014

c2

ஹரி இயக்கத்தில் விஷால்-சுருதிஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் ஹரி கூறியுள்ளார். ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘பூஜை’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது என்றார்.

ஏற்கெனவே சூர்யா-ஹரி கூட்டணியில் ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகத்தை எடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விஷாலை வைத்து ‘பூஜை’ படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைய முடிவு செய்திருக்கும் ஹரி, இந்த படத்தை ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமாக எடுப்பாரா? என்பது பின்புதான் தெரியவரும்.

ஏற்கெனவே ஹரி தான் ஒரு டான் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும், அந்த கதையில் நடிக்க அஜீத்தான் பொருத்தமாக இருப்பார் என கூறியிருந்தார். அஜீத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவரால் இந்த கதையில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியிருந்தார்.

ஹரியின் இந்த கனவு இன்னமும் நனவாகாமல் இருக்கிறது. அப்படியொரு நாள் அந்த கனவு நனவானால் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

Next Page »