தனுஷின் ‘நானே வருவேன்’ 3 நாட்களில் ரூ.25 கோடி

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் 3 நாட்கள் முடிவில் ரூ.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்துஜா, பிரபு, யோகிபாபு நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படம் முதல் நாள் ரூ.10 கோடியே 12 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இரண்டாவது நாள் படம் ரூ.9.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளான சனிக்கிழமை ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புக்கிங் காரணமாக ‘நானே வருவேன்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. அதனால் படம் ரூ.6 கோடியை மட்டுமே மூன்றாவது நாள் வசூலித்துள்ளது.

3 நாட்கள் முடிவில் படம் மொத்தம் ரூ.25 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.40 கோடி என்ற நிலையில், வரும் நாட்கள் விழாக் காலங்களாக இருப்பதாலும், தீபாவளி வரை பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததாலும் ‘நானே வருவேன்’ படத்தின் பட்ஜெட்டைத் தாண்டி வசூலிக்கும் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

Related posts