டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நேர்காணல்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பல ஹீரோ, ஹீரோயின்களை ஆட்டுவித்தவர். இயக்குநராகவும் மாறியிருக்கும் அவர், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு 6 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
அதிக எதிர்பார்ப்புள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. பொதுவா வரலாற்றுப் படங்களுக்கு நடனம் அமைக்கிறது கஷ்டம்னு சொல்வாங்களே?
சவாலான விஷயம்தான். இந்த படத்துக்கு இப்போதைய ஸ்டைல்ல நடனம் அமைக்க முடியாது. நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. அதிகமா ஹோம் ஒர்க் பண்ணினோம். நான் சின்ன வயசுல, நடனம் கத்துக்கிட்டபோது படிச்ச கிராமிய நடனங்கள்லாம் மனசுக்குள்ளேயே இருந்தது. அதை இந்தப் படத்துல வைக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.
‘பொன்னி நதி’, ‘சோழா சோழா’ பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கு. இந்தப் பாடல்கள்ல அதிகமான நடனக் கலைஞர்களைப் பயன்படுத்தி இருக்கீங்களாமே?
வந்தியத்தேவன் முதன் முதலா சோழ நாட்டுக்குள்ள போகும்போது வரும் பாடல், ‘பொன்னி நதி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில அதைக் கேட்டதுமே உற்சாகமா இருந்தது. இதுக்கு கிராமிய ஸ்டைல்ல நடனம் அமைச்சிருக்கேன். ‘சோழா சோழா’ பாடல்ல சுமார் 150 நடனக் கலைஞர்களைப் பயன்படுத்திக்கோம். வழக்கமா ஒரு பாடலுக்கு பத்து பாய்ஸ், பத்து கேர்ள்ஸ் பயன்படுத்தறது வழக்கம். இந்தப் படத்துக்கு அப்படி முடியாது. எல்லோருமே கடுமையா ஒத்திகைப் பார்த்துட்டு வந்தாங்க. நடிகர் விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். மிரட்டியிருக்கார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷான்னு எல்லாருமே பிரம்மாதமா நடனம் ஆடறவங்க…
உண்மைதான். இதுல அவங்களை வித்தியாசமா ஆட வச்சிருக்கேன். இந்தப் படத்துக்காக, காலைல 4 மணிக்கே எழுந்து மேக்கப் போட்டாதான் ஷாட்டுக்கு ரெடியாக முடியும். அப்படி எல்லாருமே நடிப்போட, நடனத்துக்கும் கஷ்டப்பட்டிருக்காங்க. இந்தப் படத்துக்கு அமைச்சிருக்கிற டான்ஸ், கண்டிப்பா ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதை அனுபவிச்சுச் சொல்றேன்.மணிரத்னத்தோட பல படங்கள்ல நீங்க வொர்க் பண்ணியிருக்கீங்க. இந்தப் பட அனுபவம் எப்படி இருந்தது?
இதுபோல வரலாற்றுப் படத்துல வேலை பார்த்ததே பெரிய விஷயம். அதுமட்டுமல்லாம, இது நம்ம மண்ணின் கதை. இந்தப் படத்துல 6 பாடலுக்கு நடனம் அமைச்சிருக்கேன். ஒவ்வொரு பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் வெவ்வேறு விதமா உருவாக்கி இருக்கார். இதுல எனக்கு அதிகமா பிடிச்ச, பழங்குடி பாடல் ஒன்னு இருக்கு. அந்தப் பாடலும் அதுக்கு அமைச்சிருக்கிற நடனமும் ரசனையா இருக்கும். அந்தப் பாடல் ஷூட் பண்ணும்போது மணிரத்னம் சார் எழுந்து நின்னு கைதட்டினார்னா பாருங்க. அந்த கைதட்டலை பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன்.கரோனா காலகட்டத்துல இதன் ஷூட்டிங் கடினமா இருந்திருக்குமே?
கண்டிப்பா. பாங்காக்ல பாடல் காட்சியோடதான் இந்தப் படத்தோட ஷூட்டிங்கே தொடங்குச்சு. எல்லோரையும் ஒருங்கிணைக்கிறதுல இருந்து நிறைய பேரை வச்சு படமாக்கினது சவாலான விஷயம். மணிரத்னம் சாரும் அவர் டீமும் சரியா திட்டமிட்டு பக்காவா முடிச்சாங்க. மொத்தம் 131 நாள் ஷூட் பண்ணியிருக்காங்க. பெரிய நட்சத்திரங்களை வச்சுக்கிட்டு, இப்படியொரு பிரம்மாண்ட படத்தை எடுக்கறதுக்கு மணிரத்னம் சாராலதான் முடியும். இந்தப் படத்துக்காக ஒவ்வொருத்தரும் கடின உழைப்பை கொடுத்திருக்காங்க. இது வெறும் வார்த்தையில்லை. படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.

Related posts