கச்சத்தீவு : இந்தியா – ஸ்ரீலங்கா கடல் எல்லை உடன்பாடு!

நாட்டின் பிரதமர் கலந்துகொண்டு, தமிழகத்துக்காக 31 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட திட்டங்களைத் தொடக்கிவைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்த அரசு விழா மேடையில் இப்படியெல்லாம் ஒரு முதல்வர் பேசலாமா? என்று ஒரு தொடர் பட்டிமன்றமே நடந்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இருந்த இந்த மேடையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த மிக முக்கியமான வலியுறுத்தல்களில் ஒன்று – “கடலோர மீனவ சமுதாய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுத்து, மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த நேரம் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்”.

உள்ளபடியே, இலங்கையுடன் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதல், தொடரும் பிரச்சினைகளையும் தமிழக மீனவர்களின் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் வாழ்வாதார இழப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் கேட்டுக்கொண்டதைப் போல இதுவே தக்க தருணம்!

இலங்கை மிக மோசமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. கடனுக்காகத் துறைமுகத்தை சீனா வசம் ஒப்படைத்த இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் இன்னும் என்னென்ன இடங்களை, தளங்களை ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறதோ தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனக்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது சீனா. ஆனால், வலியச் சென்று, பேசிப் பேசி, எவ்வித முன் நிபந்தனையுமின்றி உதவிக் கொண்டிருக்கிற இந்தியா, எரியும் இலங்கையிடம் பெற எவ்வளவோ இருக்கிறது, கச்சத்தீவு உள்பட.

இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் என்ன கேட்டுக்கொண்டாரோ, அதையேதான் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, வேறு சொற்களில் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியும் சொன்னார். உள்ளபடியே, காத்திரமான சொற்களைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதைப் பற்றியும்கூட வலியுறுத்தினார்.

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்துகொண்டிருந்த நிலையில், 1974 ஜூன் 28 இல் தான் தமிழகத்தின் – தமிழர்களின் கையைவிட்டுக் கச்சத்தீவு போனதற்குக் காரணமான ´இந்தியா – ஸ்ரீலங்கா கடல் எல்லை உடன்பாடு´ கையெழுத்திடப்பட்டது.

பாக் நீரிணையிலிருந்து ஆடம் பாலம் வரை இந்தியா – இலங்கை இடையே எல்லையை வரையறுக்கும் இந்த உடன்பாட்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் சர்ச்சைக்கிடமாக இருந்துவந்த (இன்னமும் இருந்துகொண்டிருக்கிற) கச்சத்தீவு, இலங்கையின் எல்லைக்குள் சென்றுவிட்டது.

இந்த உடன்பாட்டின்படி கச்சத்தீவுக்கு மேற்கே 1.6 கி.மீ. தொலைவில் இந்திய எல்லை அமைவதாக இந்திய வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்தது. கச்சத்தீவில் யாரும் குடியிருக்கவில்லை. கப்பல் போக்குவரத்து, யாத்திரை, மீன் பிடித்தல், கனிம வள ஆராய்ச்சி சம்பந்தமாகவும் பரஸ்பரம் திருப்திகரமான முறையில் உடன்பாட்டில் வகை செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிப்பு தெரிவித்தது.

இந்த உடன்பாட்டில் புது தில்லியிலும் கொழும்பிலும் ஒரே நேரத்தில் இரு நாடுகளின் பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.

வரலாற்று ஆதாரம், சட்டப்பூர்வமான சர்வதேச கோட்பாடுகள், முன்னுதாரணங்கள் ஆகியவற்றுக்கு இசைவாக எல்லை வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்களும் அந்தந்தப் பிரதமர்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுக்கொண்டு எதிரெதிர் நாடுகளுக்குச் சென்று பிரதமர்களிடம் கையெழுத்துப் பெற்றனர். இரு பிரதமர்களும் நேரில் சந்தித்து, ஒரே நேரத்தில் கையெழுத்திட இயலாவிட்டால் இவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலிருந்தவாறே கையெழுத்திடுவதென்பது வழக்கத்திலிருந்து வருவதாக அப்போது அரசு வட்டாரங்கள் விளக்கம் தெரிவித்தன.

நாடாளுமன்றங்களின் ஒப்புதலுக்குப் பிறகு ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் இரு நாடுகளிடையிலான நட்பில் இதுவொரு வரலாற்றுத் திருப்புமுனை என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும், அப்போது இதுபற்றிய செய்தி, முந்தைய நாளே, 28.6.1974-ல் வெளியானது.

இலங்கைக்கே கச்சத்தீவு சொந்தம் என்று ஒப்புக்கொள்ள இந்திய அரசு சம்மதித்துவிட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மறுநாள் வெளியாகலாம் என்றும் செய்திகள் தெரிவித்தன.

சில காலம் முன் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக, இந்தியா வந்திருந்தபோது கச்சத்தீவு பிரச்னை பற்றிப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசியதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

1974ல் இந்தியா – ஸ்ரீலங்கா கடல் எல்லை உடன்பாட்டில் கையெழுத்திட்ட அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாகவே தகராறு இருந்து வந்தது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவு போர்த்துகேயர்களின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தபோது, கச்சத் தீவையும் போர்த்துகேயர்களே ஆண்டு வந்தனர். எனவே, கச்சத்தீவு தங்களுக்கே சொந்தம் என்று இலங்கை உரிமை கொண்டாடிவந்தது.

ராமநாதபுரம் ராஜாவின் சமஸ்தானத்தில் கச்சத்தீவு இருந்துவந்ததால் தங்களுக்குத்தான் சொந்தம் என இந்தியத் தரப்பில் வாதிடப்பட்டது.

1973, ஏப்ரலில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை சென்றபோது, இந்தத் தகராறு பற்றிப் பேச்சு நடைபெற்றது. இரு நாடுகளின் உரிமை தொடர்பான வரலாற்று ஆணவங்களை ஆராய்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தீவில் கற்பாறைகளே இருக்கின்றன. இந்தத் தீவினால் இந்தியாவுக்கு ராணுவ முக்கியத்துவம் இல்லை என்று பிரதமர் இந்திரா காந்தி அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு சிரிமாவோ பண்டாரநாயக, இந்தியா வந்தபோதும் இந்தப் பிரச்சினை பற்றி மீண்டும் பேசப்பட்டது. இந்த நிலையில் கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தம் என ஒப்புக்கொண்டு தந்துவிட இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தத் தகவல் வெளியே தெரியவந்தவுடனே, தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதியிடம் கேட்டபோது, “இந்த முடிவு பற்றிய முழு விவரங்கள் எனக்குத் தெரியாது. தெரிந்த பிறகு நாளை அதுபற்றிச் சொல்கிறேன். எப்படி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை அறிந்த பிறகுதான் என்னால் எதுவும் கூற இயலும்” என்றார்.

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக மத்திய அரசு முடிவு எடுப்பதற்கு முன்னால் தமிழக அரசைக் கலந்தாலோசித்ததா? என்று கேட்டபோது, “சென்ற வாரம் மத்திய அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் சென்னை வந்திருந்தபோது என்னிடம் இதுபற்றிய விவரங்களை விவாதித்தார்.

“கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக, அப்படியொரு ஒப்பந்தத்திற்கான சூழல் உருவாகிவருவதாகவும் அது எந்த அடிப்படையில் உருவாகும் என்பதையும் கேவல் சிங் என்னிடம் விளக்கினார். அப்போது நான் கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ் மக்களின் உணர்ச்சி எந்த அளவு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அவரிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதென இந்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று நாட்டின் விடுதலைக்கு முன்வரை கச்சத்தீவின் உரிமை பெற்றிருந்தவரான ராமநாதபுரம் ராஜா வருத்தம் தெரிவித்தார்.

கச்சத்தீவை இலங்கைக்கு மாற்றுவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு ஜனசங்கத்தின் தமிழக கிளைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அன்றைய ஜனசங்கத்தின் (இன்றைய பாரதிய ஜனதாவின்) அகில இந்தியத் தலைவராக இருந்த ஏ.பி. வாஜபேயி அறிவித்தார். மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய வாஜபேயி, ஒருபடி மேலே சென்று, இது மற்றொரு பூதானமாகும் எனக் குறிப்பிட்டார். இது தவறான முடிவு என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் ஆதிபத்திய உரிமை மீதான தாக்குதல் என்றும் தெரிவித்தார்.

கச்சத்தீவைத் தகராறுக்குள்பட்ட பகுதி என்று சொல்வதே சரியாகாது. இப்போது தமிழ்நாட்டுடன் இணைந்துள்ள முன்னாள் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதிதான் கச்சத்தீவு. அது இந்தியாவுக்கே சொந்தமாகும் என்றார் வாஜபேயி.

கச்சத்தீவின் மீது இலங்கை உரிமை கொண்டாடுவது நீதியல்ல; அதை விட்டுக்கொடுப்பதற்கு இந்தியா சம்மதித்துள்ளது அநீதியேயன்றி வேறில்லை என்று தமிழரசுக் கழகத் தலைவரும் மேலவைத் துணைத் தலைவருமாக இருந்த ம.பொ.சி. கூறினார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின், சுமார் அரை நூற்றாண்டுக்கு முந்தைய கருத்து, அவருடைய தொலைநோக்கைக் காட்டுகிறது.

“கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்தார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூக்கையா தேவர்.

இந்த நிலையில் கச்சத்தீவு பற்றிய இந்திய அரசின் முடிவு பற்றி கலந்தாலோசிப்பதற்காக, உடனடியாக மறுநாளே, ஜூன் 29 – சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவை, மேலவைகளின் அனைத்து எதிர்க்கட்சிகளின் அவசரக் கூட்டத்தை முதல்வராக இருந்த மு. கருணாநிதி கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில், கச்சத்தீவு உடன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அந்தத் தீவு மீது ஆதிபத்திய உரிமையை அளித்து உடன்பாட்டை மாற்றித் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு, தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

தீர்மானத்தின் வரி:

“இந்தியாவிற்கு சொந்தமானது என்று நாம் கருதுவதும் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி வலியுறுத்துகிறது.”

இந்தக் கூட்டத்தில் மணலி கந்தசாமி (த.நா. கம்யூ), ஏ.ஆர். பெருமாள், சக்தி மோகன் (பார்வர்ட் பிளாக்), ஏ.ஆர். மாரிமுத்து, ஆறுமுகசாமி (புது காங்கிரஸ் – அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ்), அரங்கநாயகம் (அதிமுக), ஜி. சுவாமிநாதன், பி. வெங்கடசாமி (சுதந்திரா), ம.பொ. சிவஞானம், ஈ.எஸ். தியாகராஜன் (தமிழரசுக் கழகம்), ஆர். பொன்னப்ப நாடார் (பழைய காங்கிரஸ்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய சட்டமன்றக் கட்சி), திருப்பூர் மொஹிதீன், அப்துல் வஹாப் (முஸ்லிம் லீக்) கலந்துகொண்டனர் (முன்னதாக, அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது).

அதிமுக சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் மட்டும், கருணாநிதி அமைச்சரவை ராஜிநாமா செய்ய வேண்டும், சட்டப்பேரவை கலைக்கப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்து வெளியேறினார்.

கூட்டத்தில் உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யும் சாத்தியக்கூறு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டபோது, முதல்வராக இருந்த கருணாநிதியின் பதில் – மனமிருந்தால் வழி உண்டு.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுத் தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்ததைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல முடிவுகளை எடுக்கும் நேரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள் என்பதற்கு இது சரியான எடுத்தக்காட்டு. தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகள் சிந்தாமல் சிதறாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் நடந்துகொண்ட அனைவரையும் போற்றுகிறேன், பாராட்டுகிறேன் என்றார்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் மாரிமுத்து கலந்துகொண்டது தவறு, கூட்டத்துக்குச் செல்லும்முன் என்னைக் கேட்கவில்லை. இதுபற்றி என்னைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று பின்னர் அப்போது தமிழ்நாடு இ. காங்கிரஸ் தலைவராக இருந்த வி. ராமையா தெரிவித்தார்.

சர்வதேச உறவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கட்சியின் தேசிய கவுன்சிலுக்குக் கருத்தறிவதற்காக அனுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். கல்யாணசுந்தரமும் உடன்பாட்டை வரவேற்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தியும் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தீர்மானத்தை அனுப்பிய மறுநாள், ஜூன் 30 இல் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், கச்சத்தீவு கைமாற்றப்பட்டது பற்றி, முதல்வர் கருணாநிதி பேசினார்:

“மாநிலங்களுக்கு சுயாட்சி இல்லாததால்தான் இந்திய அரசு, கச்சத்தீவைத் தன்னிச்சையாக இலங்கைக்குக் கொடுக்க முடிந்தது.

“இதற்காக, பிரதமரைக் குறை கூறவில்லை, மத்திய அரசுக்கு இவ்வளவு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்பைத்தான் குறை கூற வேண்டும்.

“ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்குக் கொடுப்பதற்கு முன் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநிலத்தைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

“கச்சத்தீவு விஷயத்தில் இது மிகவும் அவசியம். ஏனெனில், இது தமிழர்களின் உணர்ச்சியைப் பற்றிய விஷயம் என்று இந்த அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது. இந்தத் தீவின் மீது நமக்குள்ள உரிமையை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களையும் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) அனுப்பியுள்ளோம்.

இந்த நிலைமையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் மாற்ற வேண்டியது அவசியமாகும்”.

பிரதமர் மேடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தகுந்த நேரம் என்று குறிப்பிட்டது எல்லா வகையிலும் பொருத்தமானது.

48 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற ஒரு ஜூன் மாதத்தில்தான் கச்சத்தீவு தமிழகத்தின் கையைவிட்டுப் போனது.

கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறாமல் போனால் இன்னும் இரு ஆண்டுகளில் ஒரு பக்கம், உடன்பாட்டுக்குப் பொன் விழா வேண்டுமானால்கூட கொண்டாடலாம். மறுபக்கம், தமிழகத்தில் இதுவரையில் இழக்கப்பட்டவற்றை, நூற்றுக்கணக்கான மீனவர்களின் உயிர்கள் உள்பட, பட்டியலிடலாம்.

தந்தை மு. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கைவிட்டுப் போன கச்சத்தீவு, தனயன் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது திரும்பப் பெறப்பட்டால் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பெறும். தவிர, அடுத்து வருவது கருணாநிதி பிறந்த நூறாண்டும்.

அன்றைக்கு கருணாநிதி சொன்னதுபோல, மனமிருந்தால் வழி உண்டு.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நல்லிணக்க அடையாளமாகக் கருதப்படுகிற, பின்னர் நாட்டின் பிரதமராகவும் இருந்து மறைந்த வாஜபேயியின் கருத்துப்படி, இந்தத் தவறான முடிவைத் திருத்திக்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்குக் காலம் கனிந்திருக்கிறது.

இல்லாவிட்டால், இல்லாவிட்டால்… மூக்கையா தேவர் சொன்னபடிதான் – திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும்!

முன்னரெல்லாம் கூட்டத்தில் பேசுகிறவர்களின் பேச்சுகளை – விஷயங்களை மேடையிலேயே உடனுக்குடன் பின்னால் அமர்ந்தவாறு தலைவர்களுக்கு மொழிபெயர்த்துவிடுவார்கள். தலைவர்களும் அதுபற்றிக் கூட்டத்திலேயே பேசும்போது உடனுக்குடன் அறிவிப்பார்கள் அல்லது கோடிட்டுக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் அப்படிக் காணக் கிடைப்பதில்லை.

சென்னையில் அன்று கூட்டத்தில் பேசுவதற்காகத் திட்டமிட்டுக் கொண்டு வந்ததை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திப் பேசிவிட்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் அவர் பேசத் திட்டமிட்டு (பெரும்பாலும் இப்படிதான் இருக்கும்) வந்ததையே பேசிச் சென்றுவிட்டார்.

மற்றவர்கள் எல்லாரும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கோரிக்கைகள் / வலியுறுத்துதல்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன, கச்சத் தீவு உள்பட.

(தினமணி)

Related posts