நெஞ்சுக்கு நீதி – காட்சிகளை விஞ்சும் வசனத் தெறிப்புகள்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 15-ன் படி, சாதி, மதம், இனம், பாலினம், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக் கூடாது என்பது தான் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ஒன்லைன்.

காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்) பொள்ளாச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சுதந்திரபாளையம் என்ற கிராமத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் புரையோடிக் கிடக்கிறது. எந்த அளவுக்கு என்றால், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண், அரசுப் பள்ளியில் சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார். இதனிடையே, ஆதி திராவிடர்கள் அடர்த்தியாக வாழும் அந்தக் கிராமத்தில், இரண்டு மாணவிகள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள்.

இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் விஜயராகவனுக்கு கொடுக்கப்படும் சாதிய, அரசியல் அழுத்தம், மாணவிகள் ஏன், எப்படி, எதற்காக கொல்லப்பட்டார்கள்? கொன்றவர்கள் யார்? இறுதியில் நியாயம் கிடைத்ததா? – இப்படி பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும் முயற்சிதான் ‘நெஞ்சுக்கு நீதி’ சொல்லும் திரைக்கதை.

விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின். வழக்கமான ஹீரோவுக்கான எந்தவொரு மாஸும் இல்லாமல், சாதாரணமான ஒரு இன்ட்ரோ சீன். வெளிநாட்டில் படித்து இந்தியா திரும்பிய ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கான தோற்றத்திற்கு துருத்தலின்றி பொருந்திப்போகிறார் உதயநிதி. முகத்தில் பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவரத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லத்தனத்துடன் கூடவே இருக்கும் அவரைக் கண்டால் நமக்கே கோபம் வருகிறது. அவரது தேர்வு கச்சிதம். அதேபோல ஷிவானி ராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, அப்துல் லீ, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, படத்துடன் ஒன்ற உதவியிருக்கின்றனர். தன்யா ரவிச்சந்திரன் அவ்வப்போது வந்து செல்கிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பிக்பாஸ்’ ஆரி குறைசொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அண்மையில் வந்த ரீமேக் படங்களில் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறுதல் சேர்த்திருக்கிறது. இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். ‘ஆர்டிக்கிள் 15’ கொடுக்கும் அதே உணர்வை ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலமாக கடத்தியிருக்கும் விதத்தில் தேர்ச்சி பெறுகிறார் இயக்குநர். படம் எந்தவித சமரசமும் இல்லாமல் ஆதிக்க சாதிகளின் அதிகார மமதையை சீண்டிப்பார்க்கிறது.

திருப்பூரில் ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு காரணமாக சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், வேல் யாத்திரை போன்ற தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பதும், சில காட்சிகள் இன்றைய அரசியல் சூழலுடன் பொருந்திப்போவதும் படத்துடனான நெருக்கத்தை கூட்டுகிறது.

சாதி ரீதியான வசனங்கள், அரசியல் குறியீடுகள் தைரியமாக அணுகப்பட்டிருப்பது படத்தின் மற்றொரு பலம். குறிப்பாக, காவல்துறையினருக்கிடையே சாதி குறித்து பேசும் வசனங்களும், அந்தக் காட்சியும் தமிழ் சினிமா தொட தயங்கும் ஏரியா. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலை, இட ஒதுக்கீடு குறித்த தவறான புரிதல்கள் என படம் பேசும் விஷயம் முக்கியமானது.

மற்றொரு பலம் படத்தின் வசனங்கள். ‘தீ கூட எங்களுக்கு தீட்டாச்சு’, ‘எல்லாரும் சமம்னா யார் ராஜா? சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா’, ‘கோட்டால போட்ட டாக்டர் கோட்’, ‘நடுவுல நிக்கிறது இல்ல சார் நடுநிலை; நியாயத்தின் பக்கம் நிக்குறது தான் நடுநிலை’, ‘நம்மல இங்க எரிக்க தாண்டா விடுவாங்க எரிய விடமாட்டாங்க’, ‘ஒருத்தன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் சாதியில இல்ல குணத்துல இருக்கு’, ‘வலியில கத்துனா கூட ஏன் கத்துறன்னு தான் கேப்பாங்களே தவிர, அடிக்கிறவன எதிர்த்து பேசமாட்டாங்க’, ‘சட்டம் தான் இந்த நாட்டின் தேசிய மொழி’ உள்ளிட்ட தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் ‘நச்’ ரகம்.

இறுதிக்காட்சியில் வடநாட்டிலிருந்து வந்த சிபிஐ அதிகாரியிடம் சாதிய ஆதிக்கம் மோலோங்கி இருப்பதையும், இந்தியிலேயே பேசும் அவருக்கு பதிலடிக்கொடுக்கும் உதயநிதி ‘இந்தி கத்துக்குறது ஆர்வம். கத்துக்கணும்னு கட்டாயப்படுத்துறது ஆணவம்’ என பேசும் வசனம் தற்போதை அரசியல் சூழலுடன் பொருந்துவதுடன் அப்லாஸ் அள்ளுகிறது.

அதேபோல ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருத்துவராக இருக்கும் பெண்ணுக்கு ‘அனிதா’ என பெயரிட்டிருப்பது, ‘என் முன்னாடி அவ டாக்டர் கோட் போடக்கூடாது’ என ஆதிக்கச் சாதியுடைய காவல்துறை அதிகாரிக்கு முன்னால் அனிதா கோர்ட் மாட்டிக்கொண்டு வருவது கூஸ்பம்ஸ். தீட்டுன்னா என்ன? என்று உதயநிதி கேட்கும்போது, ‘தீட்டுன்னா’ என சுற்றியிருப்பவர்கள் விழிபிதுங்கி முழிப்பார்கள். அந்தக் காட்சி, காலம் காலமாக பெயர் மங்கிப்போன ஒரு வார்த்தையை பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள்.
இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸின் பின்னணி இசையில் கண்கலங்க வைக்கிறார்.

திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவரது இசை. அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. ”செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திர ராசா” பாடலில் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. ரூபன் எடிட்டிங் கச்சிதம்.

‘எல்லாரும் சமம்னா யார் தான் ராஜாவா இருக்குறது’ என படத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. ‘எல்லாத்தையும் ஹீரோ மாதிரி உடனே மாத்திர முடியாது’ என உதயநிதி சொல்லும்போது, ‘ஹீரோவ எதிர்பார்க்காதவங்க வேணும்’ என அவரது மனைவி தன்யா பதில் சொல்வார். இந்த இரண்டு வசனங்களும் படத்தின் முரண்கள்.

குறிப்பாக ‘ஆர்டிக்கிள் 15’ படத்திலேயே கூட, அதில் வரும் காவல் அதிகாரி உயர்சாதியைச் சார்ந்தவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கும் ‘மீட்பர்’ ஆகவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். இது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், அதேபோல ‘நெஞ்சுக்கு நீதி’யிலும் சாதியை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், ‘விஜயராகவன்’ பெயர் ஆதிக்க சாதியிலிருப்பவருக்கான பிம்பத்தையும், ஒடுக்கப்பட்டோரை மீட்கும் ரகத்தில் உள்ளது. உண்மையில் ‘எல்லோரும் சமம் என்றால் ஏன் ராஜா தேவை?’ என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது.

Related posts