பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக கூறினார். அப்போது நீதிபதிகள், கவர்னர் அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விடுதலை தொடர்பான அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஓரு வழக்கின் விசாரணையை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். எனவே இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனைப்பெற்றவர்களை, தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் அவ்வாறு இல்லை’’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அமைச்சரவையின் முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், கவர்னரே இந்த விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்திருக்க வேண்டும், ஆனால் அதைவிடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி, அவரையும் இந்த வழக்கினுள் இழுத்து விட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது கவர்னரின் வேலை. ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் எனவும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக கவர்னர் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.

அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்டு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்டு. 161 ஆவது பிரிவில் முடிவெடுக்க கவர்னர் தாமதப்படுத்தினால் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்க வழிவகுகிறது பிரிவு 142.

மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது – சுப்ரீம் கோர்ட்டு

கவர்னர் முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு.

கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

நீண்ட நெடிய போராட்டத்தை பேரறிவாளன் மேற்கொண்டிருந்த நிலையில் அவரை விடுதலை செய்துள்ளது 3 நீதிபதிகள் அமர்வு.

ஜாமினில் தற்போது வெளியே உள்ள நிலையில் வழக்கில் இருந்து பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது.

Related posts