இந்தியாவில் ஒமைக்ரன் சமூக பரவலாகிவிட்டது

நாட்டில் ஒமைக்ரான் சமூக பரவல் ஆகி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா உலக நாடுகளில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. ஒமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வகையை விட பாதிப்பு குறைவாகவே ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்த ஒமைக்ரான் பரவும் வேகம் உலக நாடுகளை கதி கலங்க வைத்தது.

இந்தியாவிலும் டிசம்பர் முதல் வாரத்தில் பரவத்தொடங்கிய ஒமைக்ரன் சில வாரங்களிலேயே நாடு முழுவதும் பரவி விட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் உச்சம் பெற்றுள்ளது. நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தொற்று பரவல் அதிகரிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் சமூக பரவல் நிலையை எட்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் INSACOG என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் மாறுபாடு வகைகள் மற்றும் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதையும் இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்புகள் மிதமானது அல்லது அறிகுறிகள் இல்லாததாகவே இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் இந்த வைரசின் அச்சுறுத்தல் நிலை மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

—-

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்று ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டுத் தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெங்கையா நாயுடுவிற்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts