எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய சிம்மாசன உரை சம்பந்தமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் பலவாறு விமர்சித்திருந்தார்கள். இதை நாங்கள் எத்தனை நாளைக்கு கூறிக் கொண்டிருக்க போகின்றோம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அதிலே சில விடயங்களை பொதுவாக நாட்டுக்கு சொல்லியிருக்கின்றார். நாடு பூராகவும் எழும்பிய கொந்தளிப்பு காரணமாக முதல் தடவையாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றே நாங்கள் கூற வேண்டும்.

இதை விட தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கூறியிருந்தார். காணாமல் போனோர் விவகாரம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூற விழைகின்றார்.

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கான நீதியை இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டு சர்வதேச நீதி விசாரணையை நடாத்த வேண்டும். அதை விடுத்து திருப்பித் திருப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

பொருளாதார ரீதியாக சில விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். எத்தனை பேர் ஒத்துழைத்தாலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதுவரை ஒத்துழைத்தவர்களால் எதை சாதிக்க முடிந்தது.

Related posts