பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை

நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

பின்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்தார்.

இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம், மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts