18 வருட திருமண வாழ்க்கை தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல டைரக்டரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார்.

பிறகு தனுசும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் என கூறப்பட்டது. சினிமா கிசுகிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

“எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, ​​நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்,” என்று கூறியிருந்தார்.

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, திரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமித்தார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார்.

இந்த நிலையில் தான் தானும் ஜஸ்வர்யாவும் பிரிவதாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் அவ்வாறே பதிவு செய்துள்ளார்.

“நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோன்றதொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பெருமையாக பதிவிட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த பிரிவு செய்தி வந்துள்ளது. அக்டோபரில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் இருவரும் புதுடெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொண்டனர். அந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய திரைப்பட விருதை வென்றார்.

அக்டோபர் 25 அன்று, ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் ரஜினி மற்றும் தனுஷ் இருவரின் படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “அவர்கள் என்னுடையவர்கள் … இது வரலாறு 💜💜#பெருமை மகள்❤️ #பெருமை மனைவி” என்று அந்தப் பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தனுஷ் இடம்பெற்ற அவரது கடைசி பதிவு ஏப்ரல் 2021-ல் கர்ணன் திரைப்பட ரிலீஸின் போது இருந்தது. மறுபுறம் தனுஷ், தனது சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகளில் ஐஸ்வர்யாவை காண முடியவில்லை.

Related posts