காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற பிரபாகரன்..!

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கிடையே 11.30 மணியளவில் வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

பிடித்து பார் என சவால்விட்டு காளைகள் பாய்ந்து வந்தன . அடக்கியே தீருவேன் என களத்தில் மாடுகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. போட்டியில் 729 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி முதல் பரிசுகளை வென்றவர் பிரபாகரன்.

Related posts