ஏழைகளுக்கு உதவுங்கள் : போப் ஆண்டவர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஒளி அலங்காரங்களுடன் நிறுத்தி கொள்ளாமல், அதை தாண்டி ஏழைகளுக்கு உதவுமாறு போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் முந்தைய நாள் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ்நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ‘வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை’ மதிக்குமாறு கிறிஸ்தவர்களை போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

மேலும், கடவுள் தன்னை உயர்த்திக்கொள்வதில்லை, தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.’நம்மை நெருங்கி வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மைக் காப்பாற்றவும், உண்மையில் முக்கியமானவற்றிற்கு நம்மைத் திரும்பக் கொண்டுவரவும் அவர் தேர்ந்தெடுத்த பாதை, தன்னை தாழ்த்தி கொள்ளுதல் ஆகும்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அனைவரும் உறுதி ஏற்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 2,000 பொதுமக்களும், 200 மத பிரமுகர்களும் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts