ஆசிட் வீசிய காதலனையே திருமணம் செய்த இளம்பெண்

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனையே இளம்பெண் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்ஹெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக் (23). இவர் பெர்பின் ஒசிக் (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் ஹசிமை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் காதலர்கள் இருவருக்கும் இடையே 2019 ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்தனர். ஆனால், தன்னை விட்டு பிரிந்ததால் ஆத்திரமடைந்த ஹசிம் ’எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என கூறி தனது காதலி பெர்பின் ஒசிக் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பெர்பினின் முகம், உடலின் பெரும்பகுதிகள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து ஹசிம் ஒசன் செடிக் கைது செய்யப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஆசிட் வீசிய தனது முன்னாள் காதலியான பெர்பின்சிடம் தன்னை மன்னித்துவிடும்படி கடிதம் எழுதியுள்ளார்.

மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெர்பின் அதன் பின்னர் சிறையில் உள்ள தனது முன்னாள் காதலன் ஹசிமிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே மீண்டும் காதல் வளர வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில், தனி அறை சிறைச்சாலையில் தனது தண்டனையை அனுபவித்த ஹசிம் அந்த தண்டனைக்காலம் முடிவடைந்ததையடுத்து திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை 2022 மே 31-வரை பிணையில் விடுதலை செய்ய துருக்கி அரசு அனுமதியளித்தது. இதனால், சிறையில் இருந்த ஹசிம் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியேவந்த தனது முன்னாள் காதலன் ஹசிமை திருமணம் செய்ய பெர்பின் ஒசிக் சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன் ஹசிமை பெர்பின் ஒசிக் திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹசிம் ஒசன் செடிக் – பெர்பின் ஒசிக் தம்பதியர் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

Related posts