17 மாணவிகள் பாலியல் ‘துஷ்பிரயோகம்’

உத்தரபிரதேச மாநிலம் முசாபார்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18ந் தேதி இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர்.

அப்போது ஆசிரியைகள் யாரும் உடன் செல்லவில்லை. அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 2 பள்ளி மேலாளர்களும் அந்த உணவுகளை தூக்கி எறிந்து விட்டு புதிதாக போதை மருந்து கலந்த கிச்சடி உணவை மாணவிகளுக்கு சாப்பிட கொடுத்தனர்.

பின்னர் 2 பேரும் அந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் பரீட்சையில் பெயிலாக்கி விடுவதாகவும், குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் 17 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை.

அதன்பிறகுதான் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கொடூர செயலில் பள்ளி மேலாளர்கள் யோகேஷ்குமார், அர்ஜுன் சிங் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.

17 நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வால் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது இந்த விஷயம் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது போக்சே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து முசாபர்நகர் போலீஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் கூறியதாவது: –

பூர்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையிடம் இருந்து புகார் பெறப்பட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடரபாக விசாரணை நடத்த ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, விரைவில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும், இந்த வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டினார்களா என்பதை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

Related posts