தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஒமைக்ரான் பாதிப்பு எப்படி

ஒருவர் தடுப்பூசி செலுத்தியிருந்தாலோ அல்லது ஏற்கெனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால் நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால் டெல்டா வைரசால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டார்கள் என்று செரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

2-வதாகத் தடுப்பூசி செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒமைக்ரான் பாதிப்பின் வீரியம் இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் வரவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவிவிட்டது. ஆனால், தொற்றின் அளவும், பரவல் வீதமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் டெல்டா வகை வைரஸ் மற்றும் முதல் அலையில் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆதலால், ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் இருந்தாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.

கொரோனா வைரஸ் திரிபுகளை எதிர்த்துப் போரிடத் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஒமைக்ரான் வைரசால் தீவிரமாகப் பாதிக்கப்படாமல் தடுக்கும் கேடயமாகத் தடுப்பூசி இருக்கும் என்பதால், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் கட்ட ஆய்வில் பரவல் வேகம் ஒமைக்ரானில் அதிகம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

Related posts