தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் இன்று தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் வெங்கடாசலம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் இன்று தற்கொலை செய்துகொண்டார்.

வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல், சொத்துசேர்ப்பு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வெங்கடாச்சலம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts