சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை

சீனாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதேவேளையில் நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம் என்று தைவான் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா அவ்வப்போது கூறிவருகிறது.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. சீனா தனது தென்கிழக்கு பிராந்தியத்தில் தனது பழைய டிஎப்-11, டிஎப்-15 ரக ஏவுகணைகளை படிப்படியாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மிக நவீன ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை (டிஎப்-17) நிறுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கக் கூடியவை ஆகும். சீனாவின் தென் கிழக்கில் உள்ள ஃபுஜியான், குவாங்டாங் மாகாணங்களில் கடற்படை தளங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை சீனா விரிவுபடுத்தியுள்ளது. இம்மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு ஏவுகணை தளமும் முழு அளவில் ஆயுதங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தைவான் ஜலசந்தியில் சீனாவின் செயல்பாடுகள் எங்களைத் தூண்டுவது போல் உள்ளது. இருந்தாலும் சீனாவுடன் நாங்கள் எவ்வித ஆயுதப் போரிலும் ஈடுபட மாட்டோம்.
அமைதியான வழியில் தீர்வுகளையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், சீன கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சிவிட மாட்டோம். அதன் அழுத்தத்துக்கு பயந்து ஒடுங்கிப் போகமாட்டோம். சீன விமானங்கள், கப்பல்களை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் அதையும் ஒரு சுதந்திர நாடாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts