கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி

பிரபல இளம் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் மராத்தி மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுபம் தட்கே என்பவரை ஐஸ்வரி தேஷ்பாண்டே காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் சில தினங்களுக்கு முன்பு காரில் கோவா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் காரில் மும்பை திரும்பினார்கள். கோவா பர்தேஷ் தாலுகாவில் உள்ள ஹட்பேட் என்ற கிராமத்தின் அருகே கார் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சிறிய ஆற்றுக்குள் கவிழ்ந்தது. கார் கதவு பூட்டி இருந்ததால் அதை திறந்து இருவராலும் வெளியே வரமுடியவில்லை. இந்த விபத்தில் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். காதலர் சுபர் தட்கேவும் பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவம் மராத்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் ஐஸ்வரி தேஷ்பாண்டே மறைவுக்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related posts