அஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு

நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி வெளியான நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் விஜயின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வலிமை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வலிமை படத்தின் முதல் பார்வை வீடியோ இன்று வெளியிடப்பட்டு உள்ளது. படத்தில் இடம் பெற்று உள்ள சில காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

மொத்தம் 1.27 நிமிடங்கள் ஓட கூடிய இந்த வீடியோவின், முதல் காட்சியில் பைக் ஒன்று விண்ணில் பறப்பது போலவும், அதனை தொடர்ந்து நெருப்பு பற்றி எரிய அஜித் தோன்றுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

Related posts