ஜி.வி.பிரகாஷுக்குப் பட்டம் கொடுத்த சீனு ராமசாமி

ஜி.வி.பிரகாஷுக்கு ‘வெற்றித் தமிழன்’ என்ற பட்டம் கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி, அருள்தாஸ், தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இடிமுழக்கம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. இதன் காட்சிகள் தேனி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் (செப்டம்பர் 17) நிறைவு பெற்றது. இதனை கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து அறிவித்தது படக்குழு.
‘இடிமுழக்கம்’ தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில், ” ‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்குச் செல்லப்போகும் மாணவனைப் போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்குத் தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி. ‘இடிமுழக்கம்’ குழுவினருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
ஜி.வி.பிரகாஷுன் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சீனு ராமசாமி “ஆணவம் இல்லாத அறிவு, தாய்மொழிப் பற்று, தன்னை ஒப்புவித்து ஒத்துழைத்த கலை எளிமை, இசையோடு கூடிய தமிழறிவு, என் கலை மீதான அன்பு, இவையெல்லாம் உங்கள் பக்கம் எனை ஈர்த்தது. “வெற்றித் தமிழன்” என்றே உங்களை அழைக்க விழைகிறேன். துணை வரட்டும் என் தாய் மீனாட்சி. வாழ்த்துகள் தம்பி ஜி.வி.பிரகாஷ்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் கொடுத்தவர் சீனு ராமசாமி. அந்த வரிசையில் ஜி.வி.பிரகாஷுக்கு ‘வெற்றித் தமிழன்’ என்று பட்டம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts