மூளைசாலிகள் வெளியேற்றம் கடும் நிதி நெருக்கடி

மூளைசாலிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதால் துறைசார் நிபுணர்களை பாகிஸ்தானிடமிருந்து காபூல் அரசு எதிர்பார்த்திருப்பதாக ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் சௌகத் தாரின் தெரிவித்துள்ளார்.

காபூல் அரசு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகவும் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் ஒப்புக்கொண்டிருக்கும் அவர், பத்து பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கான ஆப்கானிய வெளிநாட்டு வைப்புகளை மேற்குலக நாடுகள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிறுத்தி வைத்திருப்பது போலவே வேறு நாடுகளும் தமது கொடுப்பனவுகளை நிறுத்தி இருப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் இவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செனட் நிலையியல் குழுவின் முன்பாக நாட்டின் நிதி நிலையை விளக்கி பேசியபோது இவ்வாறு குறிப்பிட்ட நிதியமைச்சர் தாரின், பாகிஸ்தானுடனான இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரித்து செல்வதால் பாகிஸ்தான் ரூபாவை வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டல்களை காபூல் மேற்கொள்ளும். எனினும் இறக்குமதி அதிகரித்துச் செல்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு தமது உதவிகளை நிறுத்தியிருப்பது நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் உள்நாட்டில் தேவைகள் அதிகரித்துச் செல்வதால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

எண்ணெய் விலை 74 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. கோதுமை, சீனி, தானியங்கள், பாம் எண்ணெய் என்பனவற்றை இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது.

கோதுமை விலை 40 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சில பொருட்களின் பேரில் கொள்ளை இலாபம் வைத்து விற்கப்படுவதால் அத்தகைய பத்து பாவனைப் பொருட்களின் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. இவ்வாறு இவர் செனட் குழு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

Related posts