என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்

என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன் என்று பசுபதி தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
இதில் ரங்கன் வாத்தியாராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் பசுபதி. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினர். மேலும், சமூக வலைதளத்தில் தன்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று பசுபதி பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நன்றி தெரிவித்தும், தான் சமூக வலைதளத்தில் இல்லை என்பதையும் பசுபதி அறிக்கை மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் மற்றும் கே9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும், பாக்ஸிங்கையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது.என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தைத் தயாரித்த நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே 9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.
ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல. நான் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்”.
இவ்வாறு பசுபதி தெரிவித்துள்ளார்.

Related posts