நான் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பியவருக்கு நன்றி: ஷகிலா

நடிகை ஷகிலா தனது மறைவு பற்றிய பொய்யான செய்திகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலம் அடைந்தார். தமிழில் ‘தூள்’, ‘வாத்தியார்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என்று தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ஷகிலா. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் பரப்பியுள்ளனர். இது பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது.
இந்நிலையில் ஷகிலா தான் நலமுடன் இருப்பதாக காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பொய்யான செய்தியைப் பரப்பியவருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் வணக்கம். நான் இறந்துவிட்டதாகச் சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பெரிய புன்னகையுடன் இருக்கிறேன். கேரள மாநில மக்கள் என்னிடம் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி.
யாரோ ஒருவர் ஒரு கெட்ட செய்தியைப் பரப்பியிருக்கிறார். அதனால் எனக்கு நிறைய அழைப்புகளும், அன்பும் கிடைத்திருக்கின்றன. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.அந்த சோகமான செய்தியைப் பரப்பிய நபருக்கும் நன்றி. ஏனென்றால் அவர்தான் உங்கள் பார்வையை மீண்டும் என் பக்கம் திருப்பியிருக்கிறார்” என்று ஷகிலா பேசியுள்ளார்.

Related posts