விதுஷனின் உடலை தோண்டி மீளவும் பிரேத பரிசோதனை

பொலிஸாரால் கைதாகி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் உயிரிழந்த விதுஷனின் உடலை தோண்டி எடுத்து, மீளவும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 03 ஆந் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் காவலில் இருந்த வேளை மறுநாள் அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை மரணமடைந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரனையின் போது பிரேத பரிசோதனை அறிக்கையில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் மீளவும் பிரேத பரிசோதனை செய்து அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் குறித்த இளைஞனது பெற்றோர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததனைத் தொடர்ந்து இன்று (18) இடம்பெற்ற வழக்கு விசாரனைகளில் விதுசனின் பெற்றோர் சார்பாக பிரபல சட்டத்தரணி சுகாஸ் முன்னிலையாயிருந்தார்.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியின் அறையில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் குறித்த வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில்,

விதுஷனின் மரண பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அவர்கள் சார்பில் மேற்கொண்ட விண்ணப்பத்தை அடுத்து மாண்புமிகு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை எங்களுக்கு வழங்கியிருக்கின்றது.

புதைக்கப்பட்ட விதுசனின் உடலை மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையிலேயே இத் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிண பரிசோதனை மேற்கொள்ள மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இந்த குடும்பத்துக்கு சட்டத்துறை ஊடாக அதிஉச்ச உதவியை வழங்கியதில் நான் பெருமையடைகின்றேன். இதனூடாக பேராசிரியர் உடைய சிபாரிசுகள் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும் .

கடந்த 3 ஆந் திகதி மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் .

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.

கடந்த 4 ஆந் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts